வாழ்க தமிழ்!

Sunday, August 2, 2015

ஆடிப்பெருக்கும் பன்னிரு தமிழ் மாதங்களும்!

பாமரன்  /  at  1:49 PM  /  2 கருத்துரைகள்

காவிரி நதி பாயும் மாவட்டங்களில் காலங்காலமாக "ஆடிப்பெருக்கு' விழா சிறப்பாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. பொங்கும் புதுப்புனல் கண்டு எங்கும் உற்சாக வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. இதில் அரசன் முதல் ஆண்டி வரை அனைவரும் கலந்து கொள்வார்கள்; புனித நீராடி மகிழ்வார்கள்.

ஒரு சமயம் ஆடி பதினெட்டாம் பெருக்கு நாளில் ஆரூர் மன்னன் கந்தவேள், தன் பரிவாரங்கள் புடைசூழ காவிரியில் புனித நீராடினான். அறிஞர்களும் புலவர்களும் அவனுடன் சேர்ந்து நீராடினர்.

நீராடி முடித்ததும், ஆடி மாதத்தின் சிறப்பைப் பற்றி அறிஞர்கள் தங்கள் கருத்துகளைப் பரிமாறிக் கொண்டனர். அப்போது மன்னன் கந்தவேளுக்கு ஓர் எண்ணம் உதித்தது. உடனே, அங்கிருந்த புலவர்களை நோக்கி, ""அறிஞர் பெருமக்களே! உங்களுக்கு ஒரு போட்டி வைக்கிறேன். தமிழ் மாதங்கள் பன்னிரண்டையும் (சித்திரை முதல் பங்குனி வரை) வரிசைப்படுத்தி, இலக்கண - இலக்கியச் சுவையுடன் ஒரு பாடலை இயற்ற வேண்டும். பாடலுக்குரிய பொருளையும் விளக்கமாகக் கூற வேண்டும். அப்பாடல் எல்லோர்க்கும் ஏற்படையதாகவும் இருக்க வேண்டும்''

என்றான்.

புலவர்கள் அக்கணமே பாடல் இயற்ற முனைந்தார்கள். அப்புலவர் கூட்டத்தினருள் "திருவாரூர் சொக்கலிங்கக் கவிராயர்' என்ற புலவர் இருந்தார். அவர், ""மன்னா! தாங்கள் கூறியபடியே நான் ஒரு பாடலை இயற்றியுள்ளேன்'' என்றார்.

மன்னன் உடனே, ""வேறு யாரேனும் பாடல் எழுதியுள்ளீர்களா?''

எனக் கேட்க, யாரும் வாயைத் திறக்கவில்லை. உடனே மன்னன் சொக்கலிங்கக் கவிராயரைத் தன் அருகே அழைத்து, அப்பாடலைச் பாடச்சொன்னார். புலவரும் பன்னிரு மாதங்கள் அமையப்பெற்ற அப்பாடலைப் பாடினார்.""மாதஞ்சித் திரைகடலைவை தனள்; நீ அன்பு

வை, கா, சி னம் சிறியாளை யானி பெருக்கும்

போது அம்பன் போராடினானையா வணியாய்ப்

புரட்டாதி ன்கலம் வெறுத்தாள்; ஐப்பசிஇல் என்றே

சாதனை செய் தேசினந்தாள்; கார்த்திகைக்கும் கொடைவேந்

தா, சகிமார் கழியார்; கோதையும் மாசிலாமல்

காதலுடன் சேர்வள் நல்லதிட்டம் உன் பங்கு னிப்பார்

கந்தன் எனும் கலியாண சுந்தரமா முகிலே!'' (தனிப்பாடல்)என்று பாடியவர், பதம் பிரித்தும் பாடிக்காட்டினார். இப்பாடலின் பொருள்: ""அழகிய தமிழ்க் கடவுளான முருகப்பெருமான் எனக் கூறத்தகுந்த மேகம் போன்று வாரி வழங்கும் கந்தவேள் என்ற கல்யாண சுந்தரம் என்ற கொடையாளியே! அழகு மிகுந்த உன் தலைவியானவள் உன் மீது கொண்ட அளவற்ற காதலாலே அச்சம் கொண்டு, மன்மதனின் முரசாகிய கடலை இகழ்ந்துரைத்தாள். நீ அவள் மீது அன்பு வைத்துக் காத்தருள்வாயாக. அவள் மிகவும் இளமையுடையவள். பிரிவுத் துன்பத்தை மிகுதிப்படுத்துபவனாகிய மலர் அம்புகளையுடைய மன்மதனோடு அவள் போராடுகிறாள். அதனால் ஐயனே, அவள் விரகதாபம் கொண்டு பாம்பு போல உருண்டு, புரண்டு கிடக்கிறாள். பசியில்லை என்று காரணம் கூறி உண்ண மறுத்து, பிடிவாதத்துடன் கோபம் கொண்டு உண்ணும் கலத்தையும் வெறுத்து ஒதுக்குகிறாள்.

மேகமும் வியக்கும் கொடைத்தன்மையை உடைய மன்னவனே, நின்னைப் பெறலாமோ என்ற ஐயத்துடன் மனம் தடுமாறி, அவள் உன் மீது மையல் கொண்டுள்ளாள். ஆதலால், அவள் மீது அன்பு வைத்துக் காப்பாயாக! தோழிகள் உன்னை ஒதுக்கிவிடமாட்டார்கள். அவளும் மாசில்லாத காதலுடன் உன்னைச் சேருவாள். உன் பங்குக்கு நல்ல இன்பமே உனக்குக் கிட்டும். இதை எண்ணிப் பார்ப்பாயாக'' என்றார் புலவர்.

பாட்டுடைத் தலைவனாகத் தன்னை வைத்து, தான் குறிப்பிட்டபடி பாடலைப் பாடிய அப்புலவருக்கு முத்துமாலையைப் பரிசளித்து மகிழ்ந்தான் மன்னன். மற்றையோரும் கைதட்டி ஆரவாரம் செய்து புலவரைப் பாராட்டினர்.

-டி.எம். இரத்தினவேல்

(நாளை (3.8.2015) ஆடிப்பெருக்கு)

http://www.dinamani.com/

பகிர்

2 comments:

 1. நல்ல தகவல் .. நன்றி

  ReplyDelete
 2. ஐயா வணக்கம்.

  அருமையான பகர்வு. புதிய செய்திதான்.

  தமிழ் மாதங்களைச் சூரியனின் இயக்கத்தை வைத்தும் சந்திரனின் இயக்கத்தை வைத்தும் இருவிதமாக கணக்கிடும் முறை இருந்துள்ளது.

  சித்திரை முதல் பங்குனி வரையுள்ள மாதங்கள் சந்திரனின் இயக்கத்தைக் கொண்டு அழைக்கப்படுவன.

  சூரியனின் இயக்கத்தைக் கொண்டு வகுக்கப்பட்ட தமிழ் மாதங்கள்,

  மேடம், விடை , மிதுனம், கடகம், சிம்மம், துலாம், கன்னி , விருச்சிகம், தனுசு, மகரம், கும்பம் , மீனம் என்பன.

  பின் இவை ராசி என்ற அளவில் நின்றன.

  இதைப் போன்றே மாதங்களை உள்ளடக்கி, ஆரூர் மன்னன் கந்தவேள் இல்லாததால் ஒருவன் முத்துமாலையை இழந்த பாடல்,

  சித்திரைக்கும் அத்தைக்கும் என்ன சம்பந்தம்?

  தங்களுக்கு நேரம் கிடைப்பின் காண வேண்டுகிறேன்.

  த ம 1
  நன்றி.

  ReplyDelete

காப்புரிமை © 2013 தமிழ்மொழி - தமிழால் நாமும் நம்மால் தமிழும் பயனுற வேண்டும் இத்தளத்தை நிர்வாகிப்பது தமிழ்மொழி.வலை
. சேவை வழங்குநர் பிளாக்கர்.