வாழ்க தமிழ்!

Sunday, August 2, 2015

தமிழிலக்கியத்தில் அறிவியல் கோட்பாடுகள் - ஆ.ப.ஜெ. அப்துல் கலாம்

பாமரன்  /  at  7:08 AM  /  1 கருத்துரை

Add caption
ஒவ்வொரு இலக்கியமும் தான் தோன்றிய சமுதாயத்தை உள்ளடக்கமாகக் கொண்டு திகழ்கிறது. அறிஞர்களும், "இலக்கியம் என்பது சமுதாயத்தைப் பிரதிபலிக்கும் கண்ணாடி' என்கிறார்கள். எந்த ஓர் இலக்கியமும் தான் தோன்றிய அச்சமுதாயத்தின் பண்பாட்டையும் நாகரிகத்தையும், பொருளாதாரத்தையும், அக்கால மக்களின் அறிவையும், பழக்க வழக்கங்களையும், நம்பிக்கைகளையும் எடுத்துரைப்பனவாய் விளங்குவதைக் காணலாம். இந்த அடிப்படையில்தான் நமது தமிழ் இலக்கியங்களும் விஞ்ஞான பூர்வமாக மிளிர்கின்றன.

20-ஆம் நூற்றாண்டை, "அறிவியல் யுகம்' என்று கூறலாம். அறிவியல் கண்டுபிடிப்புகளும் சாதனைகளும் கணக்கில் அடங்கா. அறிவியல் வளர்ச்சி பெற்று விளங்கும் கருத்துகளுக்கான வித்துக்களை புராணங்கள், இதிகாசங்கள், சங்க இலக்கியம் தொடங்கி ஆரம்பகாலக் கண்ணாடியாக இலக்கியத்தில் காணலாம்.

இன்றைய மேனாட்டு அறிவியல் சிந்தைனையின் சுவடுகூடப் படாத சங்ககாலத் தமிழரிடையே இருந்த அறிவியல் அறிவும் உணர்வும், அதிலும் குறிப்பாக வானவியல் பற்றிக் கொண்டிருக்கும் கருத்தும் சிந்தனையும் சில நம்மை வியக்க வைக்கின்றன. இன்றைய நிலையில் அறிவியல், இயற்பியல், வேதியியல், உயிரியல், மருத்துவ இயல் என்று பல்துறைகளாகப் பல்கிப் பெருகியுள்ளன. இவ்வறிவியல் சிந்தனைகளை நோக்கும் முன்பு, அறிவியல் பார்வை இலக்கியத்தில் பெற்ற நிலையினை உணர்தல் இன்றியமையாததாகும்.

திருவள்ளுவர்,எப்பொருள் எத்தன்மைத்து ஆயினும் அப்பொருள்

மெய்ப்பொருள் காண்பது அறிவு. (குறள்.355)எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும் அப்பொருள்

மெய்ப்பொருள் காண்பது அறிவு. (குறள்.423)என்ற குறளிலும் தெளிவுபடுத்தியுள்ளார். விருப்பு வெறுப்பற்ற தன்மை உடையது அறிவியல் என்பதைத் தம் சிந்தனையாக வைத்துள்ளார்.

இயற்பியலில் ஒரு பிரிவாக விளங்குவது அணுவியல். அண்மைக்கால அறிவியல் வரலாற்றில் அற்புதமான வளர்ச்சி பெற்று இருப்பது அணுவியலாகும். முதலில் "அணுவைப் பிளக்க இயலாது' என்ற கொள்கை தோன்றியது. பின்னர், ஓர் அறிஞர் அணுவைப் பிளக்க இயலும் என்ற புதிய கருத்தை வெளியிட்டார். இக்கொள்கையுடைய தமிழ்ச் சான்றோர்கள் சிலர் இருந்தமையை இலக்கியத்தில் நாம் காணலாம்.அணுவைத் துளைத்து ஏழ் கடலைப் புகட்டிக்

குறுகத் தறித்த குறள்.என்று அணுவாகிய துகளைப் பிளக்க இயலும் என்ற சிந்தனையை நம்முன் வைத்துள்ளார்.

தமிழ் இலக்கியத்தில் ஒப்புநோக்குக் கொள்கை உடையவராய், தமிழர்களும் இச்சிந்தனை உடையவராய் விளங்கினர் என்பதற்குத் தொல்காப்பியரைச் சான்றாகக் காட்டலாம். முதற்பொருள், கருப்பொருள், உரிப்பொருள் என்று மூன்று பிரிவுகளுள், முதற்பொருள் என்பதனை,""முதல்எனப் படுவது நிலம்பொழுது இரண்டின்

இயல்பென மொழி இயல்புணர்ந் தோரே''என்று நிலமும் காலமும் என இருவகையாகப் பிரித்துள்ளார். நீர்ப் பொருளுக்குச் சுருங்கும் தன்மை இல்லை. நீர்ப் பொருளின் இச்சுருங்கா இயல்பை அறிவியல் பூர்வமாகக் கண்டறிந்து கூறியவர் பாஸ்கல் என்னும் அறிஞர். இப் பாஸ்கல் விதிக்குச் சான்றாக,ஆழ அமுக்கி முகக்கினும் ஆழ்கடல் நீர்

நாழி முகவாது.என்று ஒளவையின் பாடல் கூறுகிறது. ஆழத்தைப் பொருத்து அழுத்தம் மிகுகின்றது என்ற மற்றொரு அறிவியல் உண்மையும் எடுத்துரைக்கின்றார். உலகில் நிகழும் சாதாரணச் செயல்கள் அனைத்திலும் வேதியியலின் நிகழ்வுகள் உண்டாகின்றன. இவ்விளைவுகளை நம்மால் உணர முடிகிறது. ஆனால், ஏன் என்ற வினாவிற்குக் கற்றவர்கள் தவிர; கல்லாதவர்கள் விடை அளிக்க இயலாது. தமிழ்ச் சான்றோர் பல்துறை அறிவுடையவராய் விளங்கியமையால் இயற்கை நிகழ்வுகளை உற்று நோக்கித் தம் பாடல்களில் தம் முத்திரைகளைப் பதித்துள்ளனர்.

20-ஆம் நூற்றாண்டில் ஈடு இணையற்ற கவி பாரதியார். எதிர்காலச் சமுதாயம் அறிவியல் துறையில் என்னென்ன சாதனைகள் மேற்கொள்ள வேண்டும் என்னும் கனவைத் தம் பாடலின் மூலம் கூறுகிறார்.வானை அளப்போம் கடல் மீனை அளப்போம்

சந்திர மண்டலத்தியல் கண்டு தெளிவோம்...என்று பாடியுள்ளமை உணரலாம். இன்று சந்திர மண்டலத்தினையும் தாண்டி மற்ற கோள்களையும் மனிதன் ஆய்வு மேற்கொண்டுள்ளான்.

தமிழ் இலக்கியத்தில் பயணத்தை விரைவாக்கிய விமானம் பற்றிய சிந்தைகளையும் காணமுடிகிறது. புறநானூறு ஓட்டுநர் இல்லாத வானவூர்தியைப் (புறம்-27) பற்றிய செய்தியினைத் தருகின்றது. அவ்வடிகள்:

வலவன் ஏவா வான வூர்தி

எய்துப என்பதஞ் செய்வினை முடித்தெனக்!சூரிய ஒளியினால்தான் தாவரங்கள் ஆற்றலைப் பெறுகின்றன. தாவரங்களின் ஒளிச்சேர்க்கைக்குச் சூரிய ஒளி பெரிதும் உதவுகிறது. இக்கருத்தை உணர்ந்தவர் இளங்கோ அடிகள். ஆதலின்,ஞாயிறு போற்றும் ஞாயிறு போற்றும்

காவிரி நாடன் திகிரிபோல் பொற்கோட்டு

மேரு வலந்திரி தலான்...என்று ஞாயிற்றைப் போற்றினார்.

தாவரங்கள், ஆற்றல், அறிவியல் மற்றும் அதைப் பற்றிய இலக்கியத்தைப் பற்றி உங்களிடம் விவாதிக்கும்போது என் வீட்டில் அமைந்துள்ள 100 ஆண்டு கண்ட மரத்தைப் பற்றி நான் எழுதிய கவிதை எனக்கு நினைவுக்கு வருகிறது.

அந்த மரம் சொல்கிறது. ""எனது வாழ்க்கையின் இலட்சியம் என்ன என்று கேட்ட என் அன்பு கலாமே, எனது நூறு வருட வாழ்க்கையின் இலட்சியம் இதுதான். என்னிடம் உள்ள அனைத்தையும் கொடுத்துக்கொண்டே இருப்பதுதான் என் மகிழ்ச்சி. பூக்களைக் கொடுத்தேன், தெளி தேனைக் கொடுத்தேன், நூற்றுக்கணக்கான பறவைகளுக்குப் புகலிடம் கொடுத்தேன். கொடுத்தேன்; கொடுத்தேன்; கொடுத்துக்கொண்டேயிருப்பேன். அதனால் நான் என்றும் எப்பொழுதும் இளைமையாயிருக்கிறேன்; மகிழ்ச்சியாக இருக்கிறேன்.''

மரம் எப்படிக் கொடுத்துக்கொண்டே இருக்கிறதோ, அப்படித்தான் மொழியும். தாய்மொழி ஒவ்வொருவருக்கும் ஆக்கத்தையும், ஊக்கத்தையும், நம்பிக்கையையும் கொடுக்கிறது. அந்த நம்பிக்கைதான், நம் தலைவிதியை நிர்ணயிக்கிறது.

எனவே, நண்பர்களே! நமது தாய்மொழி தமிழ் மென்மேலும் வளர்ச்சி அடைய வேண்டுமானால், அறிவியல், மருத்துவம், தொழில்நுட்பம் போன்ற உயர்கல்வி ஆராய்ச்சித்துறை சார்ந்த நூல்கள் தமிழில் மொழிபெயர்ப்பு செய்யப்பட வேண்டும். அந்த நம்பிக்கை பொதுமக்களுக்கும் வர வேண்டும்; கல்வியாளர்களுக்கும் வரவேண்டும்; மருத்துவர்களுக்கும் வர வேண்டும்; ஆட்சியாளர்களுக்கும் வர வேண்டும்.

-ஆ.ப.ஜெ. அப்துல் கலாம்

http://www.dinamani.com/

பகிர்

1 comment:

  1. அவர் கண்ட கனவு பலிக்கட்டும்

    ReplyDelete

காப்புரிமை © 2013 தமிழ்மொழி - தமிழால் நாமும் நம்மால் தமிழும் பயனுற வேண்டும் இத்தளத்தை நிர்வாகிப்பது தமிழ்மொழி.வலை
. சேவை வழங்குநர் பிளாக்கர்.