வாழ்க தமிழ்!

Thursday, July 30, 2015

பொய்யாமொழிப் புலவர் - கம்பர்

பாமரன்  /  at  6:10 AM  /  கருத்துரை இடுக

இன்றைக்கு நமக்குக் கிட்டியுள்ள சங்கப் பாடல்களில் தனியொருவராக அதிகமாகப் பாடல்களைப் பாடியருப்பவர் கபிலர் பெருமான் ஒருவர்தான்.
டாக்டர் உ.வே.சா., கபிலர் பிறந்த ஊர் மதுரைக்கு அருகில் உள்ள "திருவாதவூர்' என்று குறிப்பிட்டு, அவர் அந்தணர் வகுப்பைச் சார்ந்தவர் என்கிறார். பல அறிஞர்களும் இதனை ஏற்றுக் கொள்கின்றனர். இதற்கு அகச் சான்றாக விச்சிக்கோன், இருங்கோவேள் ஆகிய இரு மன்னர்களிடத்து கபிலர் தம்மை அறிமுகம் செய்து கொள்ளும்போது, கபிலர் தாம் அந்தணர் என்பதை ""யானே, பரிசிலன் மன்னும் அந்தணன்'', ""அந்தணன் புலவன் கொண்டு வந்தனென்'' என்று கூறியதை எடுத்துக் கொள்ளலாம்.
அந்நாளில் ஆரிய அரசன் ஒருவன் (பாண்டிய) மன்னனால் போரில் சிறை பிடிக்கப்பட்டு மதுரைக்குக் கொண்டு வரப்பட்டு மதுரையிலேயே இருந்து வந்தான். அவன் தனது தாய் மொழியான "ஆரியத்திற்கு தமிழ் நிகராகுமா?' என்று எண்ணி பலரிடமும் விவாதித்து வந்தான். இதனைக் கேள்வியுற்ற கபிலர் அவன்பால் சென்று தமிழின் இனிமையை, தொன்மையை, இலக்கணச் சிறப்பை தான் இயற்றிய குறிஞ்சிப் பாடலால் நிறைவாக விளக்கினார். அது கேட்டு அவ்வரசன் மனம் திருந்தி தமிழின் மேன்மையை மேலும் அறிய விரும்பினார். அதனால், கபிலர் அவருக்கு தமிழ்மொழியைத் தக்கவாறு கற்பித்தார். பகை அரசனுக்கு தமிழ் கற்பித்த கபிலரின் புகழ் எங்கும் பரவியது. கற்றவர்கள் மட்டுமன்றி பிற மன்னர்களும் அவரைப் பெரிதும் மதிக்கத் தலைப்பட்டனர்.
மதுரையை அடுத்த பறம்பு மலை சிற்றரசன் வேள்பாரி, கபிலரை தனது அரசவைக்கு அழைத்தார்; கபிலரும் சென்றார். காலப் போக்கில் கபிலரும் பாரியும் உற்ற நண்பர்கள்
ஆனார்கள்.
மூவேந்தர்கள் பாரியின் வள்ளல் தன்மையால் அவனுக்கு ஏற்பட்ட புகழ், அவனது மகளிரை மணக்க விரும்பிய வேட்கை இவற்றால் பொறாமை உணர்ச்சி வயப்பட்டு, பாரியின் பறம்பு மலையை முற்றுகையிடவும் முற்பட்டனர். காலம் கடந்தாலும் முற்றுகை நீடித்தாலும் வேள் பாரி பகையரசர்களின் வேண்டுகோளுக்கு செவிசாய்க்கவில்லை.
இந்நிலையில் கபிலர், பகையரசர்களிடம் சென்று போரைத் தவிர்க்குமாறு அன்போடு கூறினார். மேலும், பறம்பு மலை எத்தகைய வலிமை உடையது என்பதையும் அதனின், வளத்தையும் தன் பாடலால் (புறம்-109) வெளிப்படுத்தி, அதை அறிவுரையாக நவின்றார்.
போரில் நேர் நின்று பாரியை வெல்ல முடியாது என்று உணர்ந்த அப்பகையரசர்கள் சூழ்ச்சி செய்து வஞ்சகமாகப் பாரியைக் கொன்றனர். கபிலர் இக்கொடுஞ் செயலைக் கண்டு பதறினார்; கண்ணீர் மல்கினார்; தனது உயிரையும் மாய்த்துக் கொள்ளத் துணிந்தார். ஆனால், பாரியின் இரு மகளிர்களின் (அங்கவை, சங்கவை) நிலையை எண்ணி தனது முடிவினை மாற்றிக் கொண்டார்.
தந்தையை இழந்த அப்பெண்டிர் இருவரையும் அழைத்துக்கொண்டு விச்சி நாட்டிற்குச் சென்று, அந்நாட்டு மன்னன் விச்சிக்கோவிடத்து பாரியின் மகளிரை மணம் கொள்ள வேண்டினார். விச்சிக்கோ, பாரியினுடைய பகை அரசர்களின் பகை தமக்கும் வந்து விடுமோ என்று பயந்து மறுத்தான். வருத்தமுற்ற கபிலர், வேளிர் நாட்டு மன்னன் இருங்கோவேளிடம் சென்று பாரி மகளிரை மணம் புரிந்துகொள்ள வேண்டினார். அவனும் மறுக்கவே, பின்னர் நடுநாடு வந்தார். அந்நாட்டை ஆண்டுவந்த மலையமான் வழியினர் அஞ்சாத நெஞ்சமும் போர்க் குணமும் பெற்றவர்கள் என்பதை அறிவார் கபிலர். அவர்களிடம் பாரி மகளிரின் மணத்திட்டத்தை முன் வைத்ததும், அவர்கள் அன்புடன் இசைந்தனர்.
பிறகு திருக்கோவலூரில் உள்ள நல்ல குணம் மிக்க பார்ப்பார் குடியிற் பிறந்தோர் சிலரிடம், பாரி மகளிரை சிறிது காலம் அடைக்கலமாகப் பாதுகாக்க வேண்டினார். பின்னர் சேர நாட்டு மன்னர் செல்வக்கடுங்கோ வாழியாதன் என்ற வள்ளல்தன்மை மிக்க மன்னனிடம் சென்று பொருள் கேட்டார்.
அம்மன்னனும் இவரது புகழ், ஆற்றல் அறிந்து இவருக்கு "நன்றா' என்னும் குன்றின் மீது ஏறி கண்ணுக்கு எட்டிய தூரம் உள்ள பரப்பினையும், ஏனயை பொன்னையும், பொருளையும் வாரி வழங்கினான். பின்னர் கபிலர் திருக்கோவலூர் வந்து பாரியின் அன்பு மகளிரை திரும்பப் பெற்று திருமுடிக்காரி மன்னனின் மைந்தர் இருவர்க்கும் மணம் முடித்து வைத்துவிட்டு, தன் கடமை நிறைவேறிய பின், தன் ஆருயிர் நண்பன் பாரியை எண்ணித் துன்பமுற்றார்.
பாரியின் பிரிவு அவரை இவ்வுலகில் மேலும் வாழ இடம் தரவில்லை. எனவே, தென் பெண்ணை ஆற்றின் நடுவே வடக்கிருந்து அமர்ந்து உயிர் துறந்தார். இவரது நினவைப் போற்றி திருக்கோவலூர் பண்பாட்டுக் கழகம் "புலனழுக்கற்ற அந்தணாளன் கபிலன்' நினைவாக ஆண்டுதோறும் நான்கு நாள்கள் கபிலர் விழாவை நடத்தி வருகிறது. இவ்வாண்டு சூலைத் திங்கள் 17 முதல் 20 வரை இவ்விழா நடைபெறுகிறது. தன் சமகாலத்தில் வாழ்ந்த புலவர்களின் நன்மதிப்பைப் பெற்ற "பொய்யா நாவிற் கபிலன்' நினைவை நாமும் போற்றி மகிழ்வோம்.
-டி.எஸ். தியாகராசன்

பகிர்
இயல்(கள்): , , , இதழ் வெளியான நாள்: Thursday, July 30, 2015

0 கருத்து(கள்):

காப்புரிமை © 2013 தமிழ்மொழி - தமிழால் நாமும் நம்மால் தமிழும் பயனுற வேண்டும் இத்தளத்தை நிர்வாகிப்பது தமிழ்மொழி.வலை
. சேவை வழங்குநர் பிளாக்கர்.