வாழ்க தமிழ்!

Thursday, July 30, 2015

கழுகு மலை - குடவரை கோயில். . .

பாமரன்  /  at  4:56 PM  /  கருத்துரை இடுக

தமிழகத்தின் தென்பழனி என்றழைக்கப்படும் கழுகுமலை கழுகாசல முர்த்தி குடவரை கோயில் பிரசித்தி பெற்ற கோயிலாகும். 15 அடி உயரத்தில் முன் மண்டபம்,  அர்த்தமண்டபம், கருவறை ஆகியவைகளை குடைந்து எடுக்கப்பட்ட குடவரைகோயிலில் ஒரு முகமும் ஆறுகைகளும் கொண்டு மயில் மீது அமர்ந்து மேற்கு நோக்கி அமர்ந்த நிலையில் குமரன் இருக்கிறார். செவ்வாய் தோஷம் நீக்கும் பெருமானாக விளங்குகிறார். இதற்கு தென்மேற்கில் ஜம்புலிங்கேஸ்வரர், அகிலாண்டேஸ்வரி சன்னதிகளோடு சிவன் ஆலயம் உள்ளது. கி.பி12ம் தூற்றாண்டில் சோழர், பாண்டியர் காலத்தில் இக்கோயில் உருவாக்கப்பட்டது. 

இக்கோயிலுக்கு இரண்டு நுழைவாயில்கள் உள்ளன. மேலவாயிலின் நுழைவில் வடக்கு பக்கத்தில் வசந்த மண்டபமும் அதனருகில் குமார தெப்பமும் அமைந்துள்ளது. இத்திருக்கோயிலில் கந்தசஷ்டி, திருக்கார்த்திகை, தைப்பூசம், பங்குனி உத்திர தேரோட்டம், வைகாசி விசாகம் ஆகிய விழாக்கள் சிறப்பாக நடைபெறும். தைப்பூசத்தில் சிறிய தேரும், பங்குனி உத்திரத்தில் பெரிய தேரும் வலம் வரும். கந்தசஷ்டி திருவிழா முடிந்ததும் தெய்வானை திருக்கல்யாணமும், பங்குனி உத்திர திருவிழா நிறைவில் வள்ளி பிராட்டியின் திருக்கல்யாணமும் நடைபெறும். 

வெட்டுவான் கோயில்

கழுகுமலை சுற்றுலா மலை மீது உள்ள வெட்டுவான் கோயில் எல்லோராவில் உள்ள கைலாசநாதர் கோயிலைப் போன்றது. மலையை குடைந்து கட்டப்பட்டுள்ளது. பெரியமலைப்பாறையில் ஏறக்குறைய 7.50மீட்டர் ஆழத்திற்கு சமமாக வெட்டி எடுத்து, அதன் நடுப்பகுதியை கோயிலாக செதுக்கியுள்ளனர். இது பாண்டிய மன்னரால் தோற்றுவிக்கப்பட்ட ஒற்றைக் கற்கோயிலாகும். இதில் கருவறையும், அர்த்தமண்டபமும் உள்ளன. இதன் காலம் கி.பி 8-ம் தூற்றாண்டாகும். கோபுரம், விமானத்தில் நடன மங்கையர்கள் பலவித இசைக்கருவிகளை இசைக்கும் இசை வாணர்கள் ஆகியோரின் சிற்பங்கள் அழகாக செதுக்கப்பட்டுள்ளன. தென்புறம் அமர்ந்த நிலையில் மிருதங்கம் வாசிப்பது போன்று தட்சிணாமூர்த்தி உருவம் அமைக்கப்பட்டுள்ளது. 

விமானத்தின் மேற்கு திசையில் நரசிம்மரும் வடக்கில் பிரம்மனும் காட்சி தருகின்றனர். விமானத்தின் நான்கு பக்கங்களிலும் நந்தி சிலைகள் உள்ளன. கோயில் பணி முற்றுப் பெறவில்லை. இக்கலை சிற்பங்கள் பாண்டிய மன்னன் பராந்தக நெடுஞ்சடையன் காலத்தில் தோற்றுவிக்கப்பட்டவையாகும். இவற்றைக் காண வெளிநாடுகளில் இருந்தும் ஏராளமான சுற்றுலாப் பயணிகள் இங்கு வந்து செல்கின்றனர். கலைச்சிற்பங்கள் தமிழ்நாடு அரசு தொல்லியல் துறையால் பாதுகாக்கப்பட்டு வருகின்றன. மேலும் சிற்பிகளான தந்தை, மகன் இருவரும் சிற்பங்களை செதுக்கியதாகவும், தந்தை வெட்டுவான் கோயிலின் தென்புறமுள்ள சமணர் சிற்பங்களை செதுக்கியதாகவும், மகன் வெட்டுவான் கோயிலை செதுக்கியதாகவும், தந்தையை விட மகன் அழகாக சிற்பங்களை செதுக்கியதால் பொறாமை கொண்ட தந்தை மகனை உளியால் தாக்கி கொன்றதாகவும் செவிவழி செய்தியாக இப்பகுதி மக்கள் கூறுகின்றனர். 

சமணர் சிற்பங்கள்

மலையின் நடுப்பகுதியில் வடக்கு நோக்கி விசுவநாதர் குடவரையும், குகைப்பள்ளி குடவரையும் அமைந்துள்ளது. குகைப்பள்ளியில் சமண முனிவர்கள் வாழ்விடமாக அமைத்து, அதிலே கல்லால் செதுக்கப்பட்டபடுக்கையும் அமைக்கப்பட்டுள்ளது. அதனருகில் உண்ணாவிரதம் இருந்து உயிர்நீத்த சமண துறவிகளின் குடைப்பு சிற்பங்கள் ஐந்து தொகுதிகளாக செதுக்கப்பட்டுள்ளது. ஆதிநாதர், நேமிநாதர், மகாவீரர் போன்ற சமண முனிவர்களுடைய சிற்பங்களும், அம்பிகாவதி, பத்மாவதி போன்ற பெண் உருவசிலைகளும் அழகுற செதுக்கப்பட்டுள்ளது. இதில் 103 கல்வெட்டுகள் காணப்படுகின்றன. சர்வகலா சாலை இங்கு நிறுவி குழுவானை நல்லூர் சாலை என பெயரிட்டு குணசாகரர் என்ற சமண முனிவர் தோற்றுவித்த கல்விச்சாலை இங்கு உறைவிடப்பள்ளியாக நடைபெற்றுள்ளது. கி.பி866 முதல் 911 வரை பாண்டிய மன்னன் பராந்தக வீரநாராயணன் காலத்தில் இக்கல்வெட்டுகள் உருவாக்கப்பட்டுள்ளது. முற்காலத்தில் கழுகுமலை நெற்ச்சுரநாடு, அரைமலை, கஜமலை போன்ற பெயர்களால் அழைக்கப்பட்டு வந்தது. 

பகிர்
இயல்(கள்): , , , , , இதழ் வெளியான நாள்: Thursday, July 30, 2015

0 கருத்து(கள்):

காப்புரிமை © 2013 தமிழ்மொழி - தமிழால் நாமும் நம்மால் தமிழும் பயனுற வேண்டும் இத்தளத்தை நிர்வாகிப்பது தமிழ்மொழி.வலை
. சேவை வழங்குநர் பிளாக்கர்.