வாழ்க தமிழ்!

Thursday, July 30, 2015

ஐயப்பனின் அவதார பிறப்பு

பாமரன்  /  at  4:49 PM  /  கருத்துரை இடுக

சிவபெருமானை எண்ணி கடும் தவம் புரிந்தான் பத்மாசுரன் என்ற கொடிய அரக்கன். அவன் தவத்தை மெச்சி அவன்முன் தோன்றினார் சிவபெருமான்.  பத்மாசுரனிடம் உனக்கு என்ன வரம் வேண்டுமென்று கேட்டார். அதற்கு அரக்கன் ‘எவர் தலை மீது நான் கையை வைக்கின்றேனோ அவர் அக்கணமே எரிந்து  சாம்பலாக வேண்டும். அந்த வரத்தை எனக்கு தந்தருள வேண்டும் என்று கேட்டான். சிவபெருமானும் அரக்கன் கேட்ட வரத்தை தந்தருளினார். இந்த நிலையில்  அரக்கன் பத்மாசுரன் மனதில் ஒரு நினைப்பு தோன்றியது. வரம் தந்த சிவனிடம் வரத்தின் மகிமையை சோதித்து பார்க்க எண்ணினான். இதையடுத்து பத்மாசுரன் சிவபெருமான் தலை மீது கை வைக்க முயன்றான்.  சிவபெருமான் அவனுக்கு பயந்து ஓடி ஒளிந்து கொண்டார். இதை அறிந்த திருமால் மோகினி வடிவில் அவ்வரக்கனை மயக்கி, அவனை தன் தலைமீதே தன்  கையை வைக்கும்படி செய்து பத்மாசுரனை எரித்து சாம்பலாக்கினார். இதையடுத்து சிவபெருமான் மோகினி உருவில் இருந்த திருமாலின் அழகில் மயங்கினார். இதன்மூலம் இருபெரும் சக்திகள் இணைய ஒரு பெரும் சக்தி வடிவமாக குழந்தை ஒன்று தோன்றியது. அக்குழந்தைக்கு பிரம்மன் ‘தர்மசாஸ்தா’ என்று பெயர்  சூட்டினார். சிவபெருமான் அக்குழந்தைக்கு தன் கழுத்தில் இருந்த மணிமாலையை அணிவித்து, அக்குழந்தை பிறந்ததற்கான காரணத்தை எடுத்து கூறி பம்பை  நதிக்கரையில் விட்டு மறைந்தார். அக்குழந்தைதான் சபரிமலை வாசனாகிய ஐயப்பன் எனும் மணிகண்டன். ஐயப்பன் பிறந்ததின் முக்கிய நோக்கம் பிரம்மனிடம்  வரம்பெற்ற மகிஷியை அழிப்பது ஒன்றேயாகும்.

மணிகண்டனை கண்டெடுத்த பந்தள மன்னன்

பந்தள நாட்டை நீதி நெறியுடன் ஆண்டு வந்தார் மன்னன் ராஜசேகரன். சிறந்த சிவபக்தர். தனக்கு பிள்ளையில்லா குறையை தீர்க்கும்படி சிவபெருமானை  தொடர்ந்து தியானித்து வந்தார். அவர் ஒருநாள் வேட்டையாட காட்டிற்கு சென்றார். அச்சமயம் பம்பை நதிக்கரைக்கு அருகே ஒரு குழந்தை அழும் சத்தம்  கேட்டது. அக்குழந்தையை மன்னர் ராஜசேகரன் காணும்படி செய்தார் சிவபெருமான். தெய்வீக அம்சமும், அழகும் நிறைந்த அக்குழந்தை தமக்கு கிடைத்ததை  எண்ணி மன்னன் அகம் மகிழ்ந்தான். அப்போது இறைவன் அடியார் உருவில் அங்கு வந்தார். குழந்தையை நீ மணியுடன் கண்டெடுத்ததால் அக்குழந்தைக்கு மணிகண்டன் என பெயரிட்டு அழைக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டனார். மணிகண்டன்  பந்தள நாட்டிற்கு வந்ததின் காரணமாக ராணி கருவுற்று ஒரு ஆண் குழந்தையை பெற்றெடுத்தாள். இருகுழந்தைகளையும் ராணி கண்ணும் கருத்துமாக, கண்ணின்  மணிகளாக போற்றி பாதுகாத்து வளர்த்து வந்தார். தனது இரு பிள்ளைகளையும் தக்க பருவத்தில் குருகுலத்தில் சேர்த்து கல்வி பயில செய்தார்.  ஐயப்பனை  வணங்கிய குரு தன்னிடம் மாணவனாக வந்துள்ள ஐயப்பன் தெய்வ அவதாரம் என்பதை அறிந்து கொண்டார் குருநாதர். ஐயப்பனுக்கு மானசீகமாக தொண்டு புரியலானார். ஒரு சமயத்தில் குரு தனது மகனின் நிலையை எண்ணி கண்ணீர் வடித்தார். இதனை கண்ட ஐயப்பன் மனம்  உருகினார். குருவின்  மகன் வாய்பேச முடியாதை அறிந்து, தனது தாய், தந்தையான சிவபெருமான் - திருமாலை வேண்டி குரு மகனின் ஊனத்தை  குணப்படுத்தினார். இதனை கண்ட குரு, ஐயப்பா ஐயப்பா என் கண்கண்ட தெய்வமே என்று கைகூப்பி வணங்கினார். 

மகிஷிக்கு வரமளித்த பிரம்மதேவர்

ஐயப்பனின் அவதார மகிமை மிகவும் விசேஷமானது. மகிஷாசுரன் என்ற கொடும் அரக்கன் தேவர்களுக்கு தொடர்ந்து தொல்லை கொடுத்து வந்தான். தேவர்கள்  நாள்தோறும் துன்பத்தை அனுபவித்து தாங்க முடியாத துயரத்தில் தவித்தனர். இதையடுத்து துர்க்காதேவி மகிஷாசுரனை வதைத்து சம்ஹாரம் செய்தார்.  இதனால் கோபம் கொண்ட அவனது தங்கை மகிஷி கடும் தவம் புரியலானாள். அவள் செய்த தவத்தின் பயனாய் பிரம்மதேவர் அவள் கண்முன் தோன்றினார்.  அவளிடம் என்ன வரம் வேண்டும் என்று கேட்டார். அதற்கு மகிஷி, பன்னிரெண்டு ஆண்டுகள் பிரம்மச்சரியம் இருந்து மனிதர்களுக்கு சேவை புரிய  கூடியவனாகவும், அரிக்கும், சிவனுக்கும் பிறக்கும் மகனாகவும் இருக்கும் ஒருவனிடமின்றி வேறு யாராலும், தன் அழிவு இருக்க கூடாது என்று வரத்தை  பெற்றாள். வரம்பெற்ற மகிஷி அந்த மமதையால் தேவர்களை பெரும் துன்பத்திற்கு ஆளாக்கினாள். அவள் தரும் தொல்லை தாங்காத தேவர்கள் திருமாலிடம்தஞ்சமடைந்தனர். அவர்களை காப்பதாக வாக்கு கொடுத்தார் திருமால்.

மந்திரியின் சூழ்ச்சியில் சிக்கிய ஐயப்பன் 

மணிகண்டன் குருகுலத்தில் கல்வி பயின்று சகல கலைகளிலும் தேர்ச்சி பெற்று சிறந்த மாணவனாக விளங்கினார். பின்னர் அரண்மனைக்கு திரும்பினார்.  தந்தையான பந்தளமகாராஜாவின் பிரிய மகனாக வளர்ந்து வந்தார். நாட்டு மக்களுக்கு சகல நலன்களும் கிடைக்க அரசியல் நடவடிக்கையிலும் ஈடுபட்டு தனது  புத்திமதிகளை வழங்கினார். இது பந்தள மகாராஜா ராஜசேகரனின் மனதை குளிர்வித்தது. தனது மணிகண்டன் சிறந்த மன்னனாக விளங்குவான் என்று அகம்  மகிழ்ந்தார். இதையடுத்து மன்னர் ராஜசேகரன் மணிகண்டனுக்கு மகிடம் சூட்ட தன் மனைவியிடம் ஆலோசனை நடத்தினார்.இதை அறிந்த துர்மந்திரி ஒருவர் சதி செயலில் இறங்கினார். மகாராணியின் மனதை கெடுத்து மணிகண்டனை அழித்துவிட திட்டமிட்டார். ஒரு கட்டத்தில் தன்  சூழ்ச்சியால் மணிகண்டனுக்கு பாலில் கடும் விஷம் கலந்து குடிக்க செய்தார். விஷம் அருந்தியதால் உடல் நலிந்த மணிகண்டனை குணப்படுத்த எந்த  மருந்தாலும் முடியாது போனது. நிலைமையை உணர்ந்த சிவபெருமான் துறவி உருவில் அரண்மனைக்கு வந்து திருநீறு அணிவித்து மணிகண்டனை  குணப்படுத்தினார். பின்னர் தனது விஸ்வரூப தரிசனத்தை மணிகண்டனிடம் காண்பித்து அவதார நோக்கம் குறித்து விளக்கிவிட்டு அங்கிருந்து மறைந்தார்.அதன்பின் மந்திரத்தாலும், தந்திரத்தாலும் மணிகண்டனை சதிகாரர்கள் கொல்ல முயன்றனர். அவர்கள் முயற்சியாவும் பயனற்று போயின. இதனால் அவர்கள்  முழுவதுமாக சோர்வுற்றனர். பின்னர் முடிவாக ஒரு சதிசெயலில் இறங்கினர்.அரசியாருக்கு தலைவழி என்றும், புலிப்பால் கொண்டு வந்தால்தான் அரசியாரின்  தலைவழியை போக்க முடியும் என்றும் கூறி மருத்துவர் ஒருவரை சொல்ல வைத்தனர். இதன்மூலம் மணிகண்டனை கானகத்துக்கு அனுப்ப திட்டமிட்டனர்.

மகிஷியை வதம் செய்த ஐயப்பன்

தாயின் வேண்டுகோளை நிராகரிக்க விரும்பாத ஐயப்பன், தந்தையின் அனுமதி பெற்று புலிப்பால் கொண்டு வர இருமுடி தலையில் தாங்கி கானகத்துக்கு தனியே  புறப்பட்டார். பெரும் கொள்ளைக்காரனாகிய வாவரை கானகத்தில் கண்டார். அவனை நல்லவனாக திருத்தி அவரை தன் நண்பனாக்கி கொண்டார். இந்த காட்டில்  தேவர்களுக்கு தீராத தொல்லை கொடுக்கும் எருமை உருக்கொண்ட மகிஷியை மணிகண்டன் சந்தித்தார். அவரை கண்டதும் மகிஷி ஆவேசமடைந்து கொலை  புரியும் நோக்கில் போர் புரிந்தாள். முடிவில் மகிஷியை மணிகண்டன் வதம் செய்தார். அதனால் சாபவிமோசனம் அடைந்த மகிஷி, அழகிய மங்கையாக  உருமாறினார். தன்னை மணந்து கொள்ளும்படி மணிகண்டனை வேண்டினாள். அவளிடம் தான் கொண்டுள்ள பிரம்மச்சரிய விரதத்தையும், தன் அவதார நோக்கத்தையும் மணிகண்டன் எடுத்து கூறினார். எப்போது என்னுடைய சபரிமலை  சன்னதிக்கு ஒரு கன்னிசாமி கூட வராமல் இருக்கின்றனரோ அப்போது உன்னை நான் மணந்து கொள்கிறேன் என்று கூறினார். தன் சகோதரியாக பாவித்து  அவளுக்கு தன் வலப்பக்கத்தில் மஞ்சமாதா என்ற பெயரில் வீற்றிருக்கும் இடத்தை அருளுவதாக வாக்கு அளித்தார்.

ஐயப்பனின் புலியாக மாறிய தேவர்கள்

மகிஷியை அழித்த மணிகண்டனை தேவர்கள் வாழ்த்தி வணங்கினர். பின்னர் தேவர்கள் யாவரும் புலிகளின் வடிவமாக மாறி மணிகண்டனுடன் பந்தள நாடு  சென்றனர். ஐயப்பன் பெரும் புலிக்கூட்டத்துடன் வருவதை கண்ட நாட்டு மக்கள் பயந்து நடுநடுங்கி மன்னரிடம் சென்று முறையிட்டனர். பந்தள மன்னன்  மணிகண்டனின் மகிமையை அறிந்து அவரை வரவேற்று மார்புற கட்டி தழுவி கொண்டார். இந்த நிலையில் சூழ்ச்சி வெளிப்பட்டதால் மந்திரி உட்பட சதிச்செயல்  புரிந்தவர்கள் மணிகண்டனின் காலில் விழுந்து வணங்கினர். மணிகண்டனும் அவர்களை மன்னித்தார். புலிக்கூட்டமாக உருவாறி வந்த தேவர்களை திரும்ப வழி  அனுப்பி வைத்தார் மணிகண்டன்.

காந்தமலையில் ஜோதி ரூபமாக காட்சி 

பந்தளமன்னன் ராஜசேகரன் ஐயப்பனுக்கு நடந்த தவறுகளுக்கு மன்னிப்பு வேண்டினார். ஐயப்பன் மன்னனிடம் தன் அவதாரம் நோக்கம் முடிவுற்றதை எடுத்து  கூறினார். மகனை பிரிய மனமில்லாத பந்தளமன்னன் தன் ராஜ்ய எல்லைக்குள் இருந்து என்றும் காட்சி கொடுக்க வேண்டும் என்று ஐயப்பனிடம் வேண்டினார்.  அதற்கு ஐயப்பன் தான் எய்தும் அம்பு விழும் இடத்தில் பதினெட்டு படிகள் அமைத்து கோயில் அமைக்க வேண்டும் என்றார். மேலும் தன்னை காணவரும்  பக்தர்கள் ஒரு மண்டலம் விரதம் இருந்து இருமுடி தாங்கிதான் கோயிலுக்கு வர வேண்டும் என்று கூறி மறைந்தார். பந்தளமன்னர் ஐயப்பனின் கட்டளைப்படி  அவ்விடத்திலே கோயில் அமைத்து கும்பாபிஷேகம் நடத்தினார்.கும்பாபிஷேக தினத்தன்று ஜோதி ரூபமாக மணிகண்டன், சாஸ்தாவின் விக்ரகத்தினுள் ஐக்கியமானார். அப்போது ஐயப்பனின் அசரீரியாக, பந்தள மன்னன்  மற்றும் மக்களின் வேண்டுதலின் பேரில் நான் வருடம் ஒருமுறை மகர சங்கராந்தி தினத்தன்று சூரியன் மறையும் நேரத்தில் காந்தமலை மீது ஜோதி ரூபமாக  காட்சி கொடுத்து அருள் புரிவேன் என்று கூறியதாக ஐயப்பன் வரலாற்றில் கூறப்படுகிறது. அதேபோன்று அன்று முதல் இன்று வரை ஒவ்வொரு வருடமும் மகா  சங்கராந்தியன்று காந்தமலையில் ஜோதி வடிவமாக காட்சி கொடுக்கிறார் ஐயப்பன்.

- மணிகண்டன் (SRC: Dinakaran )

பகிர்
இயல்(கள்): , , , , , இதழ் வெளியான நாள்: Thursday, July 30, 2015

0 கருத்து(கள்):

காப்புரிமை © 2013 தமிழ்மொழி - தமிழால் நாமும் நம்மால் தமிழும் பயனுற வேண்டும் இத்தளத்தை நிர்வாகிப்பது தமிழ்மொழி.வலை
. சேவை வழங்குநர் பிளாக்கர்.