வாழ்க தமிழ்!

Tuesday, July 28, 2015

நதிமூலம்

பாமரன்  /  at  6:44 AM  /  கருத்துரை இடுக

நதிமூலம்

உலகில் தொண்ணூறு சதவிகித ஆறுகள் மலையில்தான் தோன்றுகின்றன என்பதைத் தமிழ் இலக்கியங்கள் அழுத்தமாகக் கூறுகின்றன. ""வான் பொய்ப்பினும் தான் பொய்யா மலைத்தலைய கடற்காவிரி'' (பட்டினப்பாலை-5,6), ""மலைத்தலையத் தொடுத்த மல்லல் பேரியாற்று'' (பெருங்கதை -3:24), ""கல்லிடைப் பிறந்து போந்து கடலிடைக் கலந்த நீத்தம்'' (கம்பர்-ஆற்றுபடலம்-19) என்னும் சான்றுகளில் இருந்து அறிய முடிகிறது.
பூமியின் அடிப்பகுதியில் நீர் நிறைந்துள்ளது என்பதும், அதனைக் கிணறுகள் வெட்டுவதன் மூலம் வெளிக்கொணர முடியும் என்பதும் யாவரும் அறிந்த உண்மை. ஆனால், உயரமான மலைகளின் உச்சியில் நீர் ஒழுக்குத் தோன்றி, அது பெருகி ஆறாக மாறிக் கரைபுரண்டு ஓடுவது நமக்கு வியப்பைத் தரும் செய்தி.
மழைக் காலங்களில் மலைச் சாரல்களில் பொழியும் நீர் பெருகி ஆறாக வருகிறது என்பது உண்மையாக இருப்பினும், மழையே இல்லாத கோடைக் காலத்தில் மட்டும் மலை அருவிகளில் நீர் பெருகி ஓடுவதைக் காண்கிறோம். இது எவ்வாறு இயலும்? கோடைக் காலத்தில் வரும் நீர் எங்கிருந்து வருகிறது? அந்த நதிமூலம் என்ன என்பதை ஆராய்வோம்.
19, 20-ஆம் நூற்றாண்டுகளில் பூமிஇயல் விஞ்ஞானிகள் இதனை ஆராய்ந்து ஒரு முடிவைக் கண்டுபிடித்துள்ளனர். இமயமலை போன்றவற்றில் வேண்டுமாயின் பனிக்கட்டிகள் உருகி ஆறாக வரலாம். ஆனால், உயரம் குறைந்த மற்ற மலைகளில் இருந்து நீர் எவ்வாறு வருகிறது?
"மழைக்காலத்தில் மழை நீர் பாறைகளில் உள்ள சந்துகளின் வழியாக உள்ளே சென்று தங்குகிறது. கோடைக்காலத்தில் பாறைகள் விரிவடைவதால் சந்துகளில் தேங்கியுள்ள நீர் வெளியேறி நீரோடையாகி பல நீரோடைகள் இணைந்து ஓர் அருவியாகி பின் ஆறாக உருவெடுக்கிறது' கோடைக் காலத்தில் மலையில் இருந்து நீர் பெருகுவதற்கு விஞ்ஞானிகள் கண்டு பிடித்த காரணம் இதுதான்.
இது சென்ற இரண்டு நூற்றாண்டுகட்கு முன்னர் கண்டுபிடிக்கப்பட்ட உண்மை. ஆனால், இந்த உண்மை தமிழர்களால் ஆயிரம் ஆண்டுகட்கு முன்பே அறியப்பட்டிருந்தது என்பதைப் பின்வரும் சான்றுகளால் மெய்ப்பிக்கலாம்.
திருக்குறளுக்கு உரை எழுதிய பரிமேலழகர்,

""இருபுனலும் வாய்ந்த மலையும் உருபுனலும்
வல்லரணும் நாட்டிற்கு உறுப்பு'' (737)

எனும் குறளுக்கு எழுதிய விளக்கத்தில் ""இடையதன்றி ஒருபுடையதாகலும், தன் வளந்தருதலும், மாரிக்கண் உண்ட நீர் கோடைக்கண் உமிழ்தலும் உடைமை பற்றி "வாய்ந்த மலை' என்றார்'' என்று கூறியுள்ளது வியக்கத்தக்கது.
பத்துப்பாட்டினுள் ஒன்றாகிய முல்லைப் பாட்டு எனும் நூலில் அருவியைப் பற்றிக் குறிப்பிடும்போது புலவர் நப்பூதனார், ""முடங்குஇறை சொரிதரும் மாதிரள் அருவி'' (87) என்று கூறியுள்ளார். இதற்கு உரை எழுதிய நச்சினார்க்கினியர், ""மூட்டு வாய்களினின்றும் சொரிதலைச் செய்யும் பெருமையை உடைய திரண்ட அருவி'' என்று விளக்கம் அளித்துள்ளார். மூட்டுவாய் என்பது புவியியல் அறிஞர்கள் கூறிய Lip of hard rock  என்று கொள்வது பொருத்தமாக இருக்கும்.
இவற்றின் மூலம் நம் முன்னோர்கள் ஒரு பொருளைக் கூர்ந்து நோக்குவதிலும் அதன் உண்மைத் தன்மையை ஆய்ந்து அறிந்து எடுத்துரைப்பதிலும் உலக மக்கள் எவருக்கும் பின்தங்கியவர்கள் அல்லர் என்பது தெளிவாகிறது.
-கா.மு.சிதம்பரம்

பகிர்
இயல்(கள்): , , , , இதழ் வெளியான நாள்: Tuesday, July 28, 2015

0 கருத்து(கள்):

காப்புரிமை © 2013 தமிழ்மொழி - தமிழால் நாமும் நம்மால் தமிழும் பயனுற வேண்டும் இத்தளத்தை நிர்வாகிப்பது தமிழ்மொழி.வலை
. சேவை வழங்குநர் பிளாக்கர்.