வாழ்க தமிழ்!

Friday, May 29, 2015

ஆழ்வார் பாசுரங்களில் அறிவியல்! By புலவர் கி.கிருஷ்ணசாமி

பாமரன்  /  at  7:44 AM  /  கருத்துரை இடுக

அறிவியல் அறிஞர் ஜெகதீச சந்திரபோசும் மேல்நாட்டு அறிவியல் மேதைகளும் மரம், செடி, கொடிகளுக்கு உயிர் உண்டு என்பதையும், அவை இனிமையான இசை கேட்டு உறங்கும், வளரும் என்பதையும் கண்டுபிடித்துள்ளனர். ஆனால், இவர்களுக்கு முன்பே, தொல்காப்பியர் மரம், செடி, கொடிகளுக்கு உயிர் உள்ளதென்றும், ஓரறிவுயிரானது உடம்பினால் மட்டும் அறியும் என்பதை ""ஓரறிவதுவே உற்றறி வதுவே'' (தொல்.மரபியல்-27) என்றும், ஓரறிவுயர் யாவை என்பதை ""புல்லும் மரனும் ஓரறிவினவே'' (சூத்திரம் 28) என்றும் கூறியுள்ளார்.
ஆழ்வார்கள் பாசுரங்கள் சிலவற்றில் அறிவியல் தொடர்பான செய்திகள் பல உள்ளன. திருமங்கையாழ்வார், திருக்கோவலூர் என்னும் தலத்தைச் சிறப்பித்துப் பாடியுள்ளார். திருக்கோவலூரில் அழகான சோலைகள் உள்ளன. அச்சோலைகளில் கோங்கு, சுரபுன்னை, குரவம் ஆகிய மலர்கள் பூத்துக் குலுங்குகின்றன. அம்மலர்களில் தேன் உண்ணும் வண்டுகள் ஒலிக்கும் இசை கேட்டு அருகில் வயலிலுள்ள கரும்புகள் உறங்கும் என்றும், அவை இசையால் வளரும் என்றும் பெரிய திருமொழியில் பாடியுள்ளார்.

""கோங்கு அரும்பு சுரபுன்னை குரவுஆர் சோலைக்
குழாம் வரிவண்டு இசைபாடும் பாடல் கேட்டுத்
தீங் கரும்பு கண் வளரும் கழனி சூழ்ந்த
திருக்கோவலூர் அதனுள் - கண்டேன் நானே''
(பெ.தி-1141)

மரங்களின் இனமான கரும்பு, வண்டின் குழாம்கள் பாடும் இசைக்கு உறங்குவதுடன் இசையால் வளரும் என்கிறார்.
ஆண்டாள் தம் திருப்பாவையில், மழை பொழிவதைப் பாடுகையில், "மழைக்கு அதிபதியான வருணதேவா, நீ சிறிதும் ஒளிக்காமல் கடலில் புகுந்து நீரை எடுத்து ஆகாயத்தில் பரவி, ஊழிக்காலத்திலும் அழியாத திருமாலின் கரிய மேனியைப்போல் கறுத்து, வலிமையான தோள்களை உடைய பத்மநாபனின் வலக்கையில் உள்ள சக்கரத்தைப்போல் மின்னலை உண்டாக்கி, இடக்கையில் உள்ள வலம்புரிச் சங்குபோல் ஒலித்து, சங்கு சக்கரத்திற்குச் சிறிதும் தாளாத சார்ங்கம் என்னும் வில்லில் இருந்து இராமாவதாரத்தில் அம்பு மழை பொழிவதுபோல் உயிரினங்கள் வாழ்வதற்கு மழை பொழிய வேண்டும்' என்று வருணனை வேண்டி ""ஆழி மழைக் கண்ணா! ஒன்று நீ கைகரவேல் / ஆழியுள் புக்கு, முகந்து கொடு ஆர்த்தேறி'' (பா-4) என்று பாடியுள்ளார்.
மேகம் கடலில் புகுந்து தண்ணீரைக் குடித்து வானிலிருந்து மழை பொழியும் என்றும், மேகம் முகந்த கடல் தண்ணீரில் உள்ள உப்பை நீக்கி இனிமையான சுவை தரும் நீரை மழையாகப் பொழிந்து உயிரினங்களைக் காக்கும் என்றும் பாடியுள்ளார்.
மேகம் கடலில் புகுந்து தண்ணீரைக் குடித்து மழையாகப் பொழிவதை ஆங்கிலேய அறிவியல் மேதைகள், மேனாட்டு அறிவியல் அறிஞர்கள் கண்டுபிடித்துச் சொல்வதற்கு முன்பே இவ்வரிய அறிவியல் உண்மையை ஆண்டாள் பாடியுள்ளார்.

பகிர்

0 கருத்து(கள்):

காப்புரிமை © 2013 தமிழ்மொழி - தமிழால் நாமும் நம்மால் தமிழும் பயனுற வேண்டும் இத்தளத்தை நிர்வாகிப்பது தமிழ்மொழி.வலை
. சேவை வழங்குநர் பிளாக்கர்.