வாழ்க தமிழ்!

Friday, May 29, 2015

அரங்கேற்றுக் காதையில் அறிவியல் தொழில்நுட்பம்! By முனைவர் க.மோகன்

பாமரன்  /  at  7:35 AM  /  கருத்துரை இடுக

தமிழர்கள் தொழில்நுட்பத்தில் சிறந்தவர்களாகவும் மதிநுட்பம் வாய்ந்தவர்களாகவும் இருந்துள்ளனர். நாடகக்கலை தமிழ்நாட்டில் மிகப் பழங்காலத்திலிருந்தே வளர்க்கப்பட்டது. நடிப்பை மட்டும் கொள்ளாமல், நாடக அரங்கு அமைக்கின்ற தொழிற்நுட்பங்களையும் அறிந்து வைத்திருந்தனர். அத்தகைய அறிவியல் தொழில்நுட்பத்தை இளங்கோவடிகள் சிலப்பதிகார, அரங்கேற்றுக் காதையில்
(95-113) விரிவாக விளக்கியுள்ளார்.
சிற்ப நூல்களில் வல்லவர்களாகிய செயிற்றியனார், பரத சேனாபதியார், மதிவாணனார் போன்றோர் எழுதியுள்ள நூல்களின் அடிப்படையில், நாடக அரங்கம் அமைப்பதற்குரிய இடத்தைத் தேர்தெடுத்து, பொதியமலை போன்ற மலைகளில் வளர்ந்துள்ள மூங்கிலில் ஒரு கணுவுக்கும், மற்றொரு கணுவுக்கும் ஒரு சாண் இடைவெளியிருக்கும் மூங்கிலை இருபத்து நான்கு பெருவிரல் அளவுகோலாக நறுக்கி எடுத்துக்கொண்டு, ஏழுகோல் அகலமுடையதாகவும், எட்டுக்கோல் நீளமுடையதாகவும், தரையிலிருந்து ஒரு கோல் உயரமுடையதாகவும் அரங்கு அமையும்.
அரங்கின் உயரம் அரங்கின் பலகையிலிருந்து மேற்பலகையாகிய உத்திரப் பலகை நாலுகோல் உயரத்திலிருக்கும். உள்ளே போகவும், வெளியே வரவும் ஏற்ற வாயில்கள் இரண்டும் அழகாக அமைக்கப் பெற்றிருக்கும். அரங்கின் மேல்நிலையில் நால்வகை வருணத்தார் படம் எழுதப் பெற்றிருக்கும். அரங்கிலுள்ள தூண்களின் நிழல் அரங்கில் விழாதபடி பொருத்தமான நிலையில் விளக்குகள் பொருத்தப்பட்டிருக்கும்.
மூன்று வகையான திரைச்சீலைகள் அமையும். திரைச்சீலைக்கு "எழினி' என்று பெயர். நாடக அரங்கில் அமைக்கப்படும் எழினி மூன்று வகைப்படும். அவை ஒருமுக எழினி, பொருமுக எழினி, கரந்துவரல் எழினி எனப்படும். இடத்தூணிலிருந்து வலப்பக்கத்துச் செல்லும் ஒருமுகத் திரைச்சீலை (ஒருமுக எழினி), இருபக்கமிருந்து வரும் பொருமுகத் திரைச்சீலை (பொருமுக எழினி), மேலிருந்து கீழ்நோக்கி வரும் மறைந்திருக்கும் திரைச்சீலை. இவ்வாறாக மூன்று திரைச்சீலைகள் நாடக அரங்கில் அமைக்கப்பட்டிருக்கும்.
மேல் விதானத்தில் ஓவியங்கள் அழகுபெற வரையப் பெற்றிருக்கும். முத்துக்களாலான மாலைகள், சரியும், தூக்கும், சில தொங்கவிடப் பெற்றிருக்கும். இவ்வாறு புதுமைகள் பல அமைந்த அரிய தொழில்நுட்பத்துடன் நாடக அரங்குகள் அமைக்கப்பட்டன. இதனை அழகுடன் விளக்கியுள்ளார் இளங்கோவடிகள். பாடல் வருமாறு:

எண்ணிய நூலோர் இயல்பினில் வழாஅது
மண்ணகம் ஒருவழி வகுத்தனர் கொண்டு
புண்ணிய நெடுவரைப் போகிய நெடுங்கழைக்
கண்ணிடை ஒருசாண் வளர்ந்தது கொண்டு
நூல்நெறி மரபின் அரங்கம் அளக்கும்
கோல் அளவு இருபத்து நால்விர லாக
எழுகோல் அகலத்து எண்கோல் நீளத்து
ஒருகோல் உயரத்து உறுப்பின தாகி
உத்திரப் பலகையோடு அரங்கின் பலகை
வைத்த இடைநிலம் நாற்கோ லாக
ஏற்ற வாயில் இரண்டுடன் பொலியத்
தோற்றிய அரங்கின் தொழுதனர் ஏத்தப்
பூதரை எழுதி, மேல்நிலை வைத்துத்
தூண்நிழல் புறப்பட மாண்விளக்கு எடுத்தாங்கு
ஒருமுக எழினியும் பொருமுக எழினியும்
கரந்துவரல் எழினியும் புரிந்துடன் வகுத்தாங்கு
ஓவிய விதானத்து உரைபெறு நித்திலத்து
மாலைத் தாமம் வளையுடன் நாற்றி
விருந்துபடக் கிடந்த அரும்தொழில் அரங்கத்து!

-முனைவர் க.மோகன்

பகிர்
இயல்(கள்): , , , , , இதழ் வெளியான நாள்: Friday, May 29, 2015

0 கருத்து(கள்):

காப்புரிமை © 2013 தமிழ்மொழி - தமிழால் நாமும் நம்மால் தமிழும் பயனுற வேண்டும் இத்தளத்தை நிர்வாகிப்பது தமிழ்மொழி.வலை
. சேவை வழங்குநர் பிளாக்கர்.