வாழ்க தமிழ்!

Monday, July 7, 2014

நள தமயந்தி புராணம்

Image
               தர்மராஜா சிந்தனையுடன் நடமாடிக் கொண்டிருந்தார்.எதற்காக சூதாடினோம், எதற்காக நாட்டையும், தம்பியரையும், மனைவியையும் பணயம் வைத்து அவமானப்பட்டோம். என் ஒருவனது தவறான முடிவால், இன்று எல்லாரும் சிரமப்படுகின்றனரே! இதைத்தான் விதி என்பதோ! ஏன் மனிதனை இப்படி கஷ்டங்கள் வாட்டுகின்றன! கிருஷ்ணா! என்னைப் போல் கஷ்டப்பட்டவர் உலகில் யாரும் இருக்கமாட் டார்கள். இனியும் இருக்கக் கூடாது, என்று பெருமூச் செறிந்த வேளையில், சிரிப்பொலி கேட்டது.சிரித்தவர் வியாச மகரிஷி. தர்மராஜா அவரது திருவடிகளில் விழுந்து வணங்கினார். சாதாரணமான மகரிஷியா அவர்! பராசர முனிவருக்கும், யோஜனகந்தி என்னும் செம்படவர் குலத்தில் வளர்ந்த பெண்ணுக்கும் பிறந்த பிள்ளையான அவர், மகாபாரதம் என்னும் காவியம் எழுதும் பாக்கியம் பெற்றார். உலகில் தர்மம் நிலைக்க வேண்டும் என்பதற்காக எழுதப்பட்ட பொக்கிஷம் அது. இந்த கலியுகத்திலும், நமது பாரதத்தின் மூலை முடுக் கெல்லாம் ஒலிக்கும் தர்மம் என்னும் கோஷத்திற்கு காரணம் இந்த இதிகாசம் தான்.இந்தக் காவியத்தை எழுத அவர் பட்டபாடு கொஞ்ச நஞ்சமல்ல. அக்காலத்தில், சில மகரிஷிகளுக்கு கதை சொல்லத் தெரியும். ஆனால், எழுதத்தெரியாது. எனவே, நல்ல எழுத்தர்களைத் தேர்ந்தெடுத்துக் கொள்வார்கள். மகாபாரதம் தர்மத்தை நிலைநிறுத்த எழுதப்பட்ட இதிகாசமல்லவா! இதை எழுதும் பொறுப்பை விநாயகப்பெருமான் முன்வந்து ஏற்றுக்கொண்டார். யானைக்கு அழகே தந்தம் தான்! ஆனால், அந்த ஆனை முகத்தான் தன் தந்தத்தையே ஒடித்து, வியாசர் சொல்லச் சொல்ல எழுத ஆரம்பித்து விட்டார். எழுதுகோலாக தந்தத்தை ஒடித்துக் கொண்டவர், எழுதுவதற்காக அவர் தேர்ந்தெடுத்த பொருள் தெரியுமா? புராணங்களில் வர்ணிக்கப்படும் மேருமலை. 
அப்போது, வியாசர் விநாயகருக்கு ஒரு நிபந்தனை விதித்தார்.

ஐயா, கணபதி! நீர் எழுதுவதெல்லாம் சரி! நான் சொல்வதை சற்றும் தாமதிக்காமல் எழுதி விட வேண்டும். ஏனென்றால், நான் ரொம்ப வேகமான ஆள். சற்று தாமதித்தாலும், திரும்பச் சொல்லமாட்டேன், சரியா? என்றார்.இவரே இப்படி என்றால், பார்வதி பாலகனான கணேசன் விடுவாரா என்ன!அதெல்லாம் இருக்கட்டும் ஓய்! நான் எழுதும்போது, நீர் நிறுத்திவிட்டால்,அப்படியே எழுந்து போய்விடுவேன். ஆனால், தான் எழுத்தராக இருக்க வேண்டுமானால், இந்த நிபந்தனைக்கு வியாசர் கட்டுப்பட வேண்டும் என்று சொல்லி விட்டார்.ஆரோக்கியமான போட்டிதானே! வியாசர் விடாக்கண்டனாக ஸ்லோகங்களை அள்ளி விட, விநாயகர் வேகமாக எழுதித் தள்ளினார்.ஒரு கட்டத்தில் வியாசருக்கு மூச்சு முட்டிவிட்டது. எவ்வளவு ஸ்லோகங்களைச் சொன்னாலும், கணநேரத்தில் எழுதி விடுகிறாரே இந்தக் கணபதி! உஸ்... என்று மூச்சு வாங்கியவர், ஒரு தந்திரம் செய்தார்.கணேசா! நீர் எழுதுவதெல்லாம் சரி... சில சமயங்களில் நான் சில ஸ்லோகங்களைச் சொல்லி, அதற்கு விளக்கம் கேட்பேன், நீர், விளக்கத்தைச் சொல்லிக்கொண்டே, அடுத்து நான் சொல்லும் ஸ்லோகங் களையும் எழுத வேண்டும். என கண்டிஷன் போட்டார். இப்படி மடக்கப் பார்க்கிறீரா? என்று ஆனைமுகன் தலையை ஆட்டினார். வேதங்களைத் தொகுத்தவருக்கே இவ்வளவு தைரியம் என்றால், வேதநாயகனின் பிள்ளைக்கு எவ்வளவு தைரியம் இருக்கும்! இவர்களது போட்டி தொடர்ந்தது. சில கடுமையான பொருளுள்ள இப்போது, ஒரு சுவையான...ஆனால், கடினமான ஸ்லோகம் ஒன்றைச் சொல்லி விளக்கம் கேட்பார் வியாசர். கணபதி இதற்குரிய பொருளை அரை நொடிக்குள்சொல்லி விட, அதற்குள் அடுத்த ஸ்லோகத்தை சுதாரித்து சொல்லத் தொடங்குவார் வியாசர். இப்படியாக பெரும் சிரமமெடுத்து வியாசர் தயார் செய்தது மகாபாரதம். அதில் தன்னையும் ஒரு பாத்திரமாக்கிக் கொண்ட வியாசர், தர்மராஜா முன் தோன்றினார். தர்மரின் மனக்குறிப்பை அறிந்த அவர், தர்மராஜா! நீ ஒருவனே உலகில் கஷ்டப்படுபவன் போலவும், உனக்கு மட்டுமே தாங்க முடியாத கஷ்டங்கள் வந்தது போலவும் நினைக்கிறாய். இது சரியல்ல! நமக்கு ஒரு கஷ்டம் வரும் போது, நம்மிலும் கஷ்டப்படுபவர் கøளைப் பார்த்து ஆறுதலடைய வேண்டும். உனக்கு நிடத மகராஜன் நளனைப் பற்றித் தெரியுமா? அவனும் உன்னைப் போலவே சூதாட்டத்தில் நாடிழந்தவன்.

சிறிய கடமை ஒன்றை செய்யாமல் விட்டதற்காக பெரும் இழப்பைச் சந்தித்தவன். அவனும் உன்னைப் போலவே நல்லவன். உனக்காவது, தெரிந்தே துன்பம் வந்தது. அவனுக்கோ, மக்களைக் காக்க வேண்டிய தேவர்களே சோதனைகளைக் கொடுத்தனர். அவனுடைய வரலாற்றைக் கேள். அதன்பிறகு, உனக்கு வந்துள்ள துன்பம் மிகச்சிறியது என்பதை உணர்வாய், என்றார். தர்மராஜா அந்தக் கதையைக் கேட்கத் தயாரானார். நளமகாராஜனின் கதையைக் கேட்பவர்களுக்கு சனிபகவானால் ஏற்படும் கெடுபலன்கள் நடக்காது என்பது நீண்டகால நம்பிக்கை. அது மட்டுமல்ல! இந்த சரிதத்தைப் படிப்பவர்களுக்கு தன்னம்பிக்கையும் அதிகரிக்கும். நாமும் சனிபகவானை வணங்கி, இந்தக் கதையைத் துவக்குவோம். அன்று அதிகாலையில், குகைக்கு வெளியே கொட்டும் மழையில் பாதுகாப்புக்கு நின்ற தன் கணவன் ஆகுகனைக் காண வேக வேகமாக வெளியே வந்த அவனது மனைவி ஆவென அலறி விட்டாள். ரத்தச்சகதியாகி வெளியே கிடந்தான் ஆகுகன். என் அன்பே! தியாகத்தின் திருவிளக்கே! தர்மத்தின் தலைவனே! தங்களுக்கா இந்தக்கதி! பிறருக்கு உபகாரம் செய்த உங்களது உயிரையா இறைவன் பறித்துக் கொண்டான்! இறைவா! இதுதான் உனது அரசாங்கத்தின் தர்மமா! என்று கொதித்தாள். அவளது அலறல் கேட்டு, குகைக்குள் இருந்த துறவி ஓடி வந்தார். பாசபந்தங்களைத் துறந்த அவரது மனதில் கூட வேடனின் மரணம் சோக அலைகளை எழுப்பியது. கணவனின் உடல் மீது கதறியபடியே விழுந்த அவள் அதன் பின் எழவில்லை. என்னுடைய உயிர் காக்க இந்த வேடனும், அவனது மனைவியும் உயிர் துறந்தனரே, என்று கவலைப்பட்ட துறவி முதல்நாள் நடந்த நிகழ்ச்சிகளை நினைத்துப் பார்த்தார்.

அவர் அந்த காட்டுக்குள் வழி தெரியாமல் திகைத்துக் கொண்டிருந்த போது தான், ஆகுகனைச் சந்தித்தார். முன் பின் தெரியாதவர் என்றாலும், அந்த முனிவரின் முகத்தில் இருந்த தேஜஸ் அவனைக் கவர்ந்தது. தவவலிமையில் சிறந்தவரே! வர வேண்டும், வரவேண்டும். தாங்கள் இந்த அடர்ந்த காட்டுக்குள் எப்படி வந்தீர்கள்? இங்கே கொடிய மிருகங்கள் மட்டுமல்ல, நாகங்களும் திரிகின்றன. இப்போது மாலை நேரம் வேறு. சற்றுநேரத்தில் இருட்டிவிடும். மிருகங்கள் இரவில் தான் உணவு தேடி அதிகமாக வெளியே உலவும். தாங்கள் அவற்றிடம் சிக்கிக்கொண்டால்...நினைத்துப் பார்க்கவே முடியவில்லை. உங்களுக்கு நல்ல நேரம் என்பதால் தான் என் கண்ணில் பட்டீர்கள். வாருங்கள். எனது குகையில் தங்கி காலையில் செல்லலாம். காட்டின் எல்லை வரை நானே பாதுகாப்பாக வந்து வழியனுப்பி வைக்கிறேன், என்றான். முனிவரும் அவன் சொன்னதிலுள்ள நியாயம் அறிந்து, அவனுடன் குகைக்குச் சென்றார். புலித்தோல் விரித்து அதில் அவரை அமரவைத்தான் ஆகுகன். அவனது மனைவி ஆகுகி, தேனில் ஊற வைத்த பலாச்சுளைகளை அவருக்கு அளித்தாள். மிருகங்களைக் கொன்று தின்னும் வேடர்களாயினும், அவர்களது உள்ளத்திலுள்ள இரக்க குணத்தைக் கண்டு மகிழ்ந்தார். அவனைப் பற்றி விசாரித்தறிந்தார். சுவாமி! நான் பிறந்து வளர்ந்ததெல்லாம் இந்தக் காட்டில் தான். என் பெற்றோரைப் பற்றி எனக்குத் தெரியவில்லை. எப்படியோ வளர்ந்தேன், இங்குள்ள மிருகங்களெல்லாம் எனக்கு நண்பர்கள் போல. ஏதாவது, ஒரு மிருகம் எனக்கு துன்பம் செய்ய வருகிறதென்றால் அதை மட்டுமே அடித்து உண்போம். இல்லாவிட்டால், பட்டினியாக இருந்து கொள்வோம், என்றான். முனிவர் அவனது நல்ல குணத்திற்காக சந்தோஷப் பட்டார். குழந்தைகளே! நீங்கள் இருவரும் மனமொத்து குடும்பம் நடத்துவது பற்றியும், முன்பின் தெரியாதவர்களையும் உபசரிக்கும் விதத்தையும் பார்த்து மகிழ்கிறேன். நீங்கள் நீண்டகாலம் வாழ வேண்டும். என்னை <உபசரித்ததற்கு பதில் உபகாரம் ஒன்று செய்ய வேண்டும். துறவியான என்னிடம் பொருளா இருக்கும், உங்களுக்குத் தருவதற்கு! ஆனால், அருள் என்னும் பொருள் நிறைய இருக்கிறது. அதை உங்களுக்கு தருகிறேன். உங்களுக்கு ஒரு விஷயத்தை <<உபதேசிக்கிறேன், என்றார்.

அவர்கள் பணிவுடன் நின்றனர்.குழந்தைகளே! மாட்டு வண்டியை நீங்கள் பார்த்திருக்கிறீர்களா? என்றார். ஆம் என அவர்கள் தலையசைத்தனர். அந்த வண்டியில் மாடு தானாகவே போய் தன்னைக் கட்டிக்கொள்ளுமா? என்றார். இல்லை, வண்டிக்காரன் தான் கட்டுவான், என்றனர் அவர்கள். அதுபோல், வண்டி மாட்டின் மீது தானாக வந்து ஒட்டிக் கொள்ளுமா? என்றார். அதற்கும் அவர்கள், இல்லை, என்றனர். ஆக, ஒரு மாட்டை வண்டியில் பூட்டுபவன் வண்டிக்காரன். ஒன்றை ஒன்று தானாக பற்றிக் கொள்வதில்லை. அதுபோல், <உயிர் என்ற மாட்டை அதனதன் பாவ, புண்ணியங்களுக்கு ஏற்ப, உடம்பு என்ற வண்டிக்குள் இறைவன் என்னும் வண்டிக்காரன் பூட்டி விடுகிறான். வண்டியைப் பயன்படுத்த தேவையில்லை என்றால், வண்டியையும், மாட்டையும் வண்டிக்காரன் எப்படி கழற்றி விடுகிறானோ, அதுபோல், உயிர்கள் அதனதன் பாவ, புண்ணிய பலன்களை அனுபவித்த பிறகு., இறைவன் உயிரை உடலில் இருந்து எடுத்து விடுகிறான். எனவே உயிர் பிரிவதற்குள் ஒவ்வொருவரும் இறைவனைச் சரணடைய வேண்டும். நீங்கள் சிவாய நம என்றும், ஓம் நமோ நாராயணாய என்றும் இறைவனின் திருநாமத்தைச் சொல்லி மறுபிறவிக்குரிய பலாபலனை சேர்த்து வையுங்கள், என்றார் முனிவர். அரிய கருத்தொன்றை, படிக்காத தங்களுக்கு புரியும் வகையில் எடுத்துரைத்த முனிவருக்கு அவர்கள் நன்றி கூறினர். உறங்கும் நேரம் வந்துவிட்டது. ஆகுகன் அவரிடம்,முனிவரே! தாங்கள் அயர்ந்து உறங்குங்கள். இந்தக் குகையில் இருவர் தான் படுக்க முடியும். நானும், ஆகுகியும் உள்ளே படுத்தால் தாங்கள் வெளியே படுக்க நேரிடும். இரவில் மிருகங்கள் உங்களைத் தாக்கிவிடும்.

நீங்களும், நானும் உள்ளே படுத்து ஆகுகி வெளியில் இருந்தால் அவளுக்கும் ஆபத்து. எனவே, மிருகங்கள் வந்தாலும் அவற்றை வேட்டையாடும் திறனுள்ள ஆயுதபாணியான நான் வெளியில் படுப்பதே சரி! நீங்களும் ஆகுகியும் உள்ளே படுங்கள். இவள் பதிவிரதை. தாங்கள் அவளுக்கு தந்தை போன்றவர். இருவரும் உள்ளே உறங்குவதில் தவறில்லை. நான் ஆயுதத்துடன் பாதுகாவல் செய்கிறேன், என்றான். இத்தகைய பெருந்தன்மையை முனிவர் எதிர்பார்க்கவே இல்லை. எவ்வளவு உயர்ந்த பண்பு கொண்டவன் இந்த வேடன் என அசந்து போனார். அவனுடைய வேண்டுகோளை அவரால் மறுக்க முடியவில்லை. குகைக்குள் முனிவரும் ஆகுகியும் படுத்துவிட்டனர். ஆகுகன் வெளியே காவல் இருந்தான். நள்ளிரவில் சற்று கண் அயர்ந்து விட, ஆயுதம் கீழே கிடந்தது. இந்த சமயத்தில் சிங்கம் ஒன்று அவன் மீது பாய்ந்து அவனை ரத்தச்சகதியாக்கி விட்டு போய்விட்டது. இதைக் கண்ட ஆகுகி அலறினாள். கணவன் மீது பாசம் கொண்ட அவளது உயிரும் பிரிந்தது. தனக்காக தம்பதியர் இருவரும் உயிர் விட்ட பரிதாப நிலையைக் கண்டு முனிவர் வருந்தினார். ஆனாலும், என்ன செய்ய முடியும்?அவர்களது உடல் மீது மந்திர நீரை தெளித்தார். கட்டைகளைப் பொறுக்கி வந்து அடுக்கி, அவர்களது உடல்களுக்கு தீ மூட்டினார். அவர்கள் எரிவதைப் பார்த்து மனம் பொறுக்கவில்லை. அருகில் இருந்த ஏரியில் மூழ்கி அவரும் உயிரை விட்டுவிட்டார்.அந்த தியாகச்செம்மலான வேடனே நிடதநாட்டு அரசன் நளனாகப் பிறந்தான். அவனது மனைவி ஆகுகி, விதர்ப நாட்டின் அரசன் பீமனின் மகளாகப் பிறந்து தமயந்தி என்னும் பெயர் பெற்றாள். இவர்களால் பலன் பெற்ற முனிவர், முற்பிறவியில் தன்னால் உயிரிழந்து பிரிந்த அவர்களை மீண்டும் சேர்த்து வைக்க பிறவியெடுத்தார், ஒரு அன்னப் பறவையாக! இவர் மானிடராகப் பிறந்திருக்கலாமே! ஏன் ஒரு அஃறிணைப் பொருளாக வடிவம் கிடைத்தது?

முற்றும் துறந்தவர் அந்த முனிவர். அவரது உயிர் இருந்தாலும், போனாலும், யாரும் கவலைப்படப் போவதில்லை. அவர் என்ன செய்திருக்க வேண்டும்? அப்பனே! நானோ முற்றும் துறந்தவன், நீயும், உன் மனைவியுமே வழக்கம் போல் உள்ளே படுத்துக் கொள்ளுங்கள். நான் வெளியே இருக்கிறேனே! என்று சொல்லியிருக்க வேண்டும். அப்படி செய்யாமல், இரண்டு உயிர்கள் பலியாகக் காரணமாகி விட்டதன் விளைவாக அவர் மனித நிலையில் இருந்து தாழ்ந்து அன்னமாகப் பிறந்தார். முற்பிறவியில் செய்த பாவத்திற்கு பரிகாரமாக, இப்பிறவியில் அந்த தம்பதியரை மீண்டும் இணைத்து வைக்க உதவி செய்தார். நிடத நாடு...வயல்களில் செந்நெல் விளைந்து கயல்மீன்கள் துள்ளும் செழிப்பான பூமி. தேன் சிந்தும் பூக்களைக் கொண்ட ஏராளமான சோலைகள் பார்ப்பவர் கண்களைக் குளிர வைக்கும். தாமரையில் அமர்ந்திருக்கும் லட்சுமியைப் போல் லட்சணமான மங்கையர்கள் அங்கே நிறைந்திருந்தார்கள். மணம் மிக்க மலர்களை அவர்கள் கூந்தலில் சூடியும், மார்பில் சந்தனக்குழம்பு பூசியுமே வெளியே செல்வார்கள். அவ்வாறு அவர்கள் சூடிய மலர்களின் மிச்சமும், சந்தனக்குழம்பின் சொச்சமும் தெருவெங்கும் சேறு போல கிடந்தது. அந்தச் சேற்றிலே நடக்கும் யானைகள் வழுக்கி கீழே விழுந்தனவாம். அந்தளவுக்கு அங்கே செல்வச் செழிப்பு. எல்லாருமே பணக்காரர்கள் என்பதால் அங்கே இன்பம் மட்டுமே பொங்கி வழிந்தது. இப்படிப்பட்ட செழிப்பான நிடதநாட்டின் தலைநகரம் மாவிந்தம். இங்கே அறிஞர்களும், கவிஞர்களும் ஏராளமாக வாழ்ந்தனர். அதாவது, கலைமகளுக்கு சொந்த இடம் பிரம்மலோகம் என்றால் யாரும் நம்பமாட்டார்கள். அவளது ஊர் எது எனக் கேட்டால் அது மாவிந்தம் என்று சொல்லக்கூடிய நிலைமை இருந்தது.

நமது ஊரில் மழை பெய்தால், தூறல் தரையிலே விழுந்து மண்வாசனை எழும். அந்த மண் மணமே நமக்கு ஒரு மயக்கத் தைத் தரும். ஆனால், நிடதநாட்டில் மழை பெய்தால் சாம்பிராணி போல் மணக்குமாம். ஏன் தெரியுமா? இளம்பெண்கள் நீராடிவிட்டு, கூந்தலை காயவைக்க அகில் புகை இடுவார்கள். அந்தப் புகை ஊரையே நிறைத்திருக்கும். மழை பெய்யும் போது, புகை நீரில் கரைந்து மழைநீருக்கே மணம் வந்துவிடுமாம். அந்த ஊரிலுள்ள பெண்களின் கற்புநெறியைப் பற்றி சொல்ல வேண்டுமே! கேட்டால், கண்களில் நீர் துளிர்க்கும். நளன் ஆண்ட நிடதநாட்டில் குடிசையே கிடையாது. எல்லாருமே மாடமாளிகைகளில் தான் வசித்தனர். மாளிகை மாடத்திலே நிற்கும் பெண்கள் எட்டி எட்டி பார்ப்பார்கள், வேலைக்கும், வியாபாரத்திற்கும் சென்ற தங்கள் கணவன்மார் திரும்பி வருகிறார்களா என்று! தூரத்தில் யாரோ ஒருவர் வருவது தெரிந்தவுடன், ஆஹா..அவர் தான் வருகிறார் என்று முகம் சிவக்க காத்திருப்பார்களாம். அருகில் வந்ததும், வேறு யாரோ எனத் தெரிந்ததும், அவர்கள் அழுதே விடுவார்களாம். ஏன் தெரியுமா? பிற ஆண்மகன் ஒருவனை தன் கணவன் என எண்ணி, இவ்வளவு நேரமும் எட்டி எட்டி பார்த்தோமே என்று! எத்தகைய கற்புத்திறனுக்கு சொந்தக்கார நாடாக நமது தேசம் இருந்திருக்கிறது! இப்படி ஒரு யுகத்தில் நம்மால் வாழ முடியவில்லையே என்ற ஏக்கம் கூட பிறக்கிறதல்லவா! அந்த ஊரிலே அலறல் சப்தம் ஆங்காங்கே கேட்கும்...ஐயோ! பசிக்கிறதே, ஐயோ, என் கணவன் என்னை அடிக்கிறானே, ஐயோ! என் மனைவி இப்படி கத்துகிறாளே என்கின்ற அலறல் அல்ல அது! அவ்வூர் பெண்கள் தங்கள் கால்களில் அணிந்திருக்கும் தங்கச் சலங்கைகளின் சப்தமே அது! அது இனிய இசை போல் ஒலிக்குமாம்!

அந்த நாட்டி<லுள்ள குளங்களில் தாமரை மலர்கள் வேண்டுமானால் தத்தளிக்கும். ஆனால், மக்களின் மனம் தத்தளித்ததாக சரித்திரமில்லை. அங்குள்ள மக்களுக்கு தெளிவாகத் தெரிபவை நல்ல நல்ல புத்தகங்களிலுள்ள அறிவு சார்ந்த வரிகள். ஆனால் தெரியாத வரிகள் பெண்களின் இடுப்பு வளைவுகள். புடவை கட்டுவதில் அப்படி ஒரு ஒழுக்கம்.அங்கு அம்மா தாயே என்ற ராப்பிச்சைக் குரலை யாருமே கேட்டதில்லை. எல்லாருமே பணக்காரர்கள் என்பதால் பொறாமைக்கும், வஞ்சனைக்கும் இடமில்லை. எல்லா வீட்டாரும் மனதாலும் குணத்தாலும் ஒன்றுபட்டே வாழ்ந்தனர். இப்படிப்பட்ட சிறப்புடைய நிடதநாட்டின் மன்னனே நளன். பிற நாட்டு மன்னர்கள் இவனைப் பார்க்கவே அஞ்சுவார்கள். அந்தளவுக்கு மரியாதை...பயம். எதிரிகள் வருவதே இல்லை. தப்பித்தவறி ஆசைப்பட்டு வந்தால், வந்த வேகத்திலேயே புறமுதுகிட்டு ஓடி, தங்கள் நாட்டையும் இவனிடமே ஒப்படைத்து விட்டு உயிர் பிழைத்தால் போதுமென கண்காணாத இடத்திற்கு ஓடிவிடுவார்கள். வீரத்தில் மட்டுமல்ல, அழகிலும் மன்மதன். இவனை விரும்பிய கன்னிப்பெண்களுக்கு எண்ணிக்கையில்லை.இவன் பல சமயங்களில் வீதிவழியே தேரில் கம்பீரமாக உலா வருவான். பொதுவாக, பெண்களுக்கு வீரமான ஆண்கள் மீது நாட்டம் அதிகம். அவர்கள் பருந்தையும், கிளியையும் ஒரே கூட்டில் அடைத்து வைத்து, அவற்றுக்கு உணவூட்டியபடியே அவன் தேரில் செல்வதை ஓரக்கண்ணால் பார்ப்பார்கள். தங்கள் மேல் அவன் பார்வை பட்டு, அவனுடைய மனைவியாகும் பாக்கியம் தங்களுக்கு கிடைக்காதா என்ற ஏக்கம் அந்த அழகுக் கண்களில் வெளிப்படும். இங்கே, இன்னொரு விஷயத்தைக் கவனிக்க வேண்டும். அதெப்படி...பருந்தையும், கிளியையும் ஒரே கூட்டில் அடைத்து வைக்க முடியும்? கிளியின் வாழ்வு அதோகதியாகி விடாதோ என்று நீங்கள் நினைப்பது நியாயம் தானே!

அரசாட்சி அருளாட்சியாக இருந்தால் எந்த நாட்டிலும் இது சாத்தியம். கோழியைப் பார்த்ததும் காலையில் விழிக்க வேண்டும் என்ற உணர்வு வரும். குருவியைப் பார்த்தால் காலையிலேயே உழைக்க வேண்டும் என்ற எண்ணம் உருவாகும். இப்படியாக, மனிதர்கள் இயற்கையைப் பார்த்து இந்தக் காலத்தில் கற்றுக் கொள்ள வேண்டியுள்ளது. ஆனால், மாறுபட்ட குணமே இல்லாத, நிடதநாட்டின் மக்கள் கொண்ட ஒற்றுமையைப் பார்த்து பருந்தும், கிளியும் கூட ஒற்றுமையாக இருந்தது. மனிதனின் வாழ்வைப் பார்த்து இயற்கை அங்கே பாடம் கற்றது. எவ்வளவு உயர்ந்த நிலை பாருங்கள்! ஒருநாள், நளன் நந்தவனத்துக்கு மலர் பறிக்கத் தன் தேரில் சென்றான். தேர் எழுப்பிய புழுதியை அவனைப் பார்த்துக் கொண்டிருந்த பெண்களின் தலையில் சூடிய பூக்களில் இருந்து வழிந்த தேன் நனைத்து அடக்கியது. நந்தவனத்தை அவன் அடைந்ததும், அங்கிருந்த தடாகத்தில், இதுவரை அவன் பார்த்திராத அன்னப்பறவையை அவன் கண்டான். அதன் மாசுமருவற்ற வெண்மை நிறம், அங்கு நின்ற பச்சை செடிகளில் பிரதிபலித்து, தோட்டமே வெண்மையானது போல ஒரு தோற்றம் ஏற்பட்டது. அதன் கால்கள் சிவப்பாக இருந்தன. அதன் பிரதிபலிப்பில் தடாகத்து நீரும் சிவப்பாக மாறியது போல் தோற்றம் கொண்டது. அந்த அழகை ரசித்த நளன், அந்த அன்னத்தைப் பிடிக்க ஆசை கொண்டான். அங்கு நின்ற பணிப்பெண்ணிடம், அழகு மங்கையே! அதோ! தடாகத்தில் மிதந்து கொண்டிருக்கும் அந்த அன்னத்திற்கு எவ்வித பாதிப்பும் இல்லாமல், மெல்லிய <உன் கைகளும் அதன் மீது பட்டு நோகாத வகையில் பிடித்து வா, என்றான்.பறவையைப் பிடிக்க ஆசை. அவனே கூட அதை எட்டிப் பிடித்து விடுவான். அன்னத்தின் இறக்கையைப் பிடித்து இழுத்தால் அவன் கையில் சிக்கிவிடாதா என்ன! ஆனால், அது தன் கைபட்டு நொந்து போவதை விரும்பாமல், ஒரு பெண்ணின் மென்மையான கையால் தூக்கி வரச்சொல்கிறான். இது நளனின் கருணையை வெளிப் படுத்துகிறது.

அவனது இரக்க சுபாவத்தைக் கண்ட அன்னம் அவனிடம் தஞ்சம் புக எண்ணியது. கரையோரமாக மிதந்து வந்து, தானாகவே அந்த பெண்ணின் கையில் அடைக்கலமானது. அவள் மகிழ்ச்சியுடன் தன் மன்னன் முன்னால் அதை விட்டாள்.அது அவனைப் பார்த்து பேச ஆரம்பித்தது.ஒரு பறவை பேசுகிறதே! நம்ப முடியவில்லையே! கிளிக்கு எப்படி பேசும் சக்தி உண்டோ. அதுபோல், கலைவாணியின் சின்னமான அந்த அன்னமும் திக்கித் திக்கிப் பேசியது.மகராஜனே! நான் சொல்வதைக் கேள்! எட்டுத்திக்குகளிலும் உன் பெயரும் புகழும் பரவியிருப்பதை நான் அறிவேன். அப்படிப்பட்ட மாவீரனான உன் தோள்களில் தவழ்ந்து விளையாட உனக்கேற்ற மனைவி வேண்டுமல்லவா! அப்படிப்பட்ட ஒருத்தியை நான் அறிவேன். அவள் பெயர் தமயந்தி. அழகில் சுந்தரி, என்று சொல்லும் போதே, யார் அந்த தமயந்தி? அந்த அன்னத்தைப் பற்றி இந்த அன்னம் சொன்னவுடனேயே அவள் என் மனதை ஆக்கிரமிக்கக் காரணம் என்ன? அவளை நான் முன் பின் பார்த்ததில்லையே! அதற்குள் எப்படி மனதில் புகுந்தாள் அந்த சொப்பனசுந்தரி, என்று திகைத்தான் நளன். நம் எல்லோர் வாழ்வும் முந்தைய பிறவியின் தொடர்ச்சி என்பதை நம்மால் அறிந்து கொள்ள முடிந்தால், நம் சொந்தங்களைத் தேடி அவர்கள் எங்கிருந்தாலும் போய் விடுவோமே! இறைவன் ஏனோ அதற்கு அனுமதிப்பதில்லை. நளன் முற்பிறவியில் வேடனாகவும், தமயந்தி அவன் மனைவியாகவும், அந்த அன்னம் தங்களைத் தேடி வந்த முனிவர் என்பதையும் அவன் அறியமாட்டானே!அன்னம் தன் பேச்சைத் தொடர்ந்தது. நளனே! உன் முகத்தைப் பார்த்தாலே நான் சொல்லும் பேரழகி உன் மனதுக்குள் புகுந்துவிட்டாள் என்று தெரிகிறது. அவள் விதர்ப்ப தேசத்து இளவரசி. அவளது குணத்தைப்பற்றி கூறுகிறேன், கேள், என்றது. தன்னையும் மறந்து அந்தப் பறவை பேசுவதைக் கவனித்தான் நளன்.

அழகில் மன்மதனே! உன் ரதி தமயந்தி அச்சம், நாணம், மடம், பயிர்ப்பு என்னும் நான்கு குணங்களும் அவளுக்கு நால்வகைப் படைகளாக காவல் நிற்கின்றன. அவளது மெய், வாய், கண், மூக்கு, செவியை ஐந்துவித அமைச்சர்களாகக் கருதி, அவற்றிடம் ஆலோசனை கேட்ட பிறகே எதையும் செய்வாள். ( புலன்களை அதன் வழியில் விடாமல், அவற்றை தன் கைக்குள் அடக்கி வைத்திருக்கிறாள் என்பது பொருள்) அவள் அணிந்துள்ள சிலம்பு முரசைப் போல் ஒலிக்கும். வேலையும், வாளையும் இணைத்துச் செய்யப்பட்டவையோ எனக் கருதுமளவு, அவளது கண்கள் கூர்மையானவை. அவளது முகம் நிலாவைப் போல் பிரகாசமாக இருக்கும். அவளை பெண்களின் அரசி என்று சொல்லலாம், என்ற பறவையை அன்புடன் தடவிக்கொடுத்தான் நளன்.அவனது சூடான கைகள் பட்டு இதமும் சுகமும் அடைந்த அந்த அன்னப்பறவை, தமயந்தியின் அழகை மேலும் வர்ணித்தது.நளனே! அவளது இடையழகைப் பற்றி சொல்கிறேன் கேள்! வண்டுகள் பறந்தாலே போதும், அவற்றின் சிறகுகள் எழுப்பும் காற்றைத் தாங்காமல் அவளது சிற்றிடை வளைந்து போகும். அப்போது அவளது கால்கள் அசைந்து அதில் அணிந்துள்ள தண்டைகள் குலுங்கும். அவளது கூந்தல் அடர்ந்து நீளமாக இருக்கும். மன்மதன் காதல் கணை தொடுக்க வேண்டுமானால், அவளது பிறை போன்ற நெற்றியில் தான் தன் மலரம்பை கூர்மை செய்து கொள்வதாக ஊருக்குள் ஒரு பேச்சு. குரலைக் கேட்க வேண்டுமே! அவள் செந்தமிழ் தேன்மொழியாள், இவ்வாறு அன்னம் தான் கண்ட தமயந்தி என்னும் அன்னத்தைப் பற்றி சொல்லிமுடிக்கவும், அவளைப் பார்க்காமலே மனதுக்குள் காதல் கோட்டை கட்டி விட்டான் நளன். மணந்தால் தமயந்தி என்னும் நிலைக்கு வந்துவிட்ட அவனது மனம் அவளை நேரில் காண வேண்டுமெனத் துடித்தது. அத்துடன், அந்த அன்னம் அவளைப் பற்றி தன்னிடம் இந்தளவுக்கு சிபாரிசு செய்வானேன் என்று எண்ணி குழப்பமடைந்தது.அதைத் தீர்த்துக் கொள்ளஅன்னமே! தமயந்தியைப் பற்றி இந்தளவுக்குப் புகழ்ந்தாயே! அவளுக்கும், உ<னக்கும் என்ன சம்பந்தம்? என்று கேட்டான் நளன்.

சொல்கிறேன், கேள், என்ற அன்னம், நளனே! இந்த உலகிலேயே அழகாக நடை பயில்பவர்கள் நாங்கள் தான் என்று இறுமாப்பு கொண்டிருந்தோம். ஒருநாள், தமயந்தி நாங்கள் அலைந்து கொண்டிருந்த தடாகத்தின் பக்கமாக வந்தாள். அவளது அழகும், நடை எங்களையும் விட நளினமாக இருந்ததைக் கண்ட நாங்கள் வெட்கப் பட்டு தலை குனிந்தோம். ஆஹா...இவளல்லவோ உலகப் பேரழகி. இவளைப் போல இனிமேல் நாங்களும் நடக்க வேண்டும். இவளிடமல்லவா நடை பயில வேண்டும் என்று எண்ணினோம். இப்படிப்பட்ட பேரழகு பெட்டகத்திற்கேற்ற கட்டழகன் நீயே என்று முடிவெடுத்தோம். நீ தமயந்தியை மணந்து கொண்டால், உனது நந்தவனத்திற்கே வந்து அந்த பேரழகியின் செல்லப்பறவைகளாக இருந்து, அவளிடம் நடை கற்றுக் கொள்வோம், என்றது.அந்தப் பறவையின் வித்தியாசமான விளக்கம் நளனை மிகவும் கவர்ந்தது. அந்த கட்டழகியை எனக்கு திருமணம் செய்து வைக்க உதவி செய்வாயா அன்னமே என்று தன்னை மறந்து கேட்டான்.நிச்சயமாக! உனக்காக நான் தமயந்தியிடம் தூது போகிறேன். அவளிடம் உன்னைப் பற்றி எடுத்துரைக்கிறேன். கண்டதும் வருவதல்ல காதல்! அது மனங்களின் இணைப்பில் விளைவது! உங்கள் மனங்களை இணைக்க நான் ஒரு பாலமாக இருப்பேன். தமயந்தி உன் மார்பில் சாய்வது உறுதி. அவளை மனைவியாக அடையும் பாக்கியம் உனக்கே கிடைக்கும், வருந்தாதே, எனக்கூறிய அன்னம், அவனிடம் விடைபெற்று விதர்ப்ப நாடு நோக்கி பறந்தது.பறவையை அனுப்பி விட்ட நளன், தமயந்தியின் அழகை கற்பனை செய்து பார்த்தான். அவளை மனதிற்குள்ளேயே ஓவியமாக வடித்தான். அந்த ஓவியம் அப்படியே அவனது கண்களில் பிரதிபலித்தது. தமயந்தி...தமயந்தி... என புலம்ப ஆரம்பித்து விட்டான். ஏ அன்னமே! விதர்ப்பம் போய் சேர்ந்து விட்டாயா? என் தமயந்தியைப் பார்த்தாயா? அவளிடம் எனது காதலைச் சொல்லி விட்டாயா? அவள் என்ன சொன்னாள்? போ...போ... என் பேரழகுக்கு முன்னால், அந்த நளன் என்ன மன்மதனா என்று அவள் ஒதுக்கி விட்டால், என் நிலை என்னாகும்...என்னால் சிந்தித்தே பார்க்க முடியவில்லையே! அன்னமே! என் அன்னத்தைப் பார்த்து விட்டு உடனே வந்துவிடு. என் இதயம் உடைந்து நொறுங்கிப் போவதற்குள் விரைந்து வா, என்று உருகி உருகி தனக்குத்தானே பேசினான்.

அவனது இந்த புலம்பல் யார் காதிலாவது விழுந்தால், ஐயோ! நம் மகாராஜாவுக்கு பைத்தியம் பிடித்து விட்டதா? என்பார்கள். தோகை விரித்த மயிலை அவன் பார்த்தால் தமயந்தி இந்த மயிலைப் போல இருப்பாளோ என்பான். குயிலின் குரல் கேட்டால், அவளது குரலும் இப்படித்தான் இருக்குமோ என்று எண்ணுவான். காற்றில் அசைந்தாடும் பூங்கொடிகளைப் பார்த்தால், கொடிகளே! உங்களைப் போல் தான் என் தமயந்தியின் இடையழகும் இருக்குமோ, வாருங்கள், என் அருகே வாருங்கள், என்று பித்துப்பிடித்தவன் போல அந்தக் கொடிகளை வருடி விட்டான். மலர்களின் வாசனையை நுகர்ந்த அவன், மலர்களே! நீங்கள் <தரும் வாசனையை விட என் தமயந்தியின் கூந்தல் நறுமணம் மிக்கதாக இருக்குமா? என்று கேட்டான். இப்படி தமயந்தி தாசனாகி, நளமகாராஜா தவித்துக் கொண்டிருந்த வேளையில், அன்னப்பறவை தமயந்தியின் இல்லத்தை அடைந்தது. தமயந்தி என்று அழைத்தது. ஆ...பேசும் பறவையா, தமயந்தி ஆவலோடு ஓடிவந்தாள். அதன் அழகு அவளைக் கவரவே தன் மடியில் தூக்கி வைத்து வருடினாள். அன்னமே! நீ யார்? எங்கிருந்து வருகிறாய்? உனக்கு என்ன வேண்டும்? என் பெயரை நீ எப்படி அறிவாய்! சொல்! என்று கேள்விகளை அடுக்கினாள். என் உயிர் உன் கையில், என்று சம்பந்தமில்லாமல் பதிலளித்தது அன்னம். ஐயோ! உன்னை யாரேனும் துன்புறுத்த எண்ணியுள்ளார்களா? இனி, அந்தக் கவலை வேண்டாம், நீ என்னுடனேயே இருந்துவிடு, என்ற தமயந்தியிடம், எனக்கு ஒன்றுமில்லை தமயந்தி! நான் சொன்ன இந்த வார்த்தைகளுக்கு சொந்தக்காரன் நிடதநாட்டு மன்னன் நளன். ஏன் அவருக்கென்ன? அவரது உ<யிர் யார் கையில் சிக்கியிருக்கிறதாம், என்றாள் ஏதும் அறியாமல். கேள் பெண்ணே! என்ற அன்னம், தமயந்தி! நளனின் மனது தங்கம். அவனது இதயத்திற்குள் ரத்தம் பாயவில்லை! அன்பும், இரக்கமும் மட்டுமே ஆறு போல் ஓடுகிறது. அவனது ஆட்சி தர்மத்தைக் கட்டிக்காக்கும் நல்லாட்சியாக விளங்குகிறது. அன்பில் மட்டுமல்ல! நான் பார்த்ததிலே அவன் ஒருவனைத் தான் நல்ல அழகன் என்றும் சொல்வேன்.

அவனது பரந்த தோள்களைப் பார்க்கும் இளம்பெண்களெல்லாம், அவன் நினைவாகவே கிடக்கிறார்கள். உம்...;நீயும் பேரழகி. அந்தக் கட்டழகனைப் போன்ற ஒருவன், உனக்கு கணவனானால், என்னைப் போன்ற அழகான அன்னங்களெல்லாம் காட்டுக்குள் போய் ஒளிந்து கொள்ள வேண்டியது தான்! அதன் பின் நாட்டுக்குள் அழகு காட்ட நாங்கள் தேவையில்லை, என்றது. அன்னம் சொன்ன வார்த்தைகள் தமயந்தியின் நெஞ்சில் ஆழமாகப் பாய்ந்தது. பெண்ணுக்கு தேவை அன்புக்கணவன், அவனே அழகனாகவும் அமைந்து விட்டால் இன்னும் மகிழ்ச்சி. அவனுக்கு செல்வமும் கோடிகோடியாய் இருக்கிறதென்றால் இரட்டிப்பு சந்தோஷம். இப்படி எல்லாம் இணைந்த வடிவாக அல்லவா இந்த அன்னம் சொல்லும் வாலிபர் என் கண்ணில் தெரிகிறார்! அவரை மணந்து கொள்ளலாமே... தமயந்தியின் எண்ண அலைகளை அன்னம் புரிந்து கொண்டது.கடந்த பிறவியில் என்ன செய்தோம், ஏது செய்தோம் என்பதை நாம் அறியமாட்டோம். ஆனால், நமக்கு ஒரு துன்பம் வருகிறதென்றால், அது கடந்த பிறவியில் செய்த பாவத்தின் பலனே! இன்பம் வருகிறதென்றாலும், கடந்த பிறவியில் செய்த புண்ணியத்தின் பலனே! அன்னப்பறவையின் செயல் இதை நமக்கு எடுத்துக் காட்டுகிறது. இதன் மூலம் மனிதப்பிறவி எடுத்துள்ள ஒவ்வொருவரும், இதுவரையில் ஏதேனும் தவறு செய்திருந்தாலும், அவற்றிற்கெல்லாம் பிராயச்சித்தமாக இந்தப் பிறவியிலேயே ஏதேனும் பரிகாரம் தேடிக் கொள்ள வேண்டும்.தமயந்தி அந்த அன்னத்திடம், அன்னமே! நீ சொல்லும் அந்த ஆணழகனை நான் இதுவரைக் கண்டதேயில்லை. ஆனாலும், என்னவோ... அவனோடு பலகாலம் வாழ்ந்தது போன்ற உணர்வு என்னுள் எழுகிறது. என்னை அறியாமல் அவன்மேல் காதல் வயப்பட்டு விட்டேன். எனக்காக அவனிடம் தூது போய் என் காதலை அவனிடம் சொல்வாயா? என்று நாணத்துடன் சொன்னாள்.

மகிழ்ச்சியடைந்த அன்னப்பறவை, சரி, தமயந்தி! உன் காதலனுடன் சேர்த்து வைப்பது என் பொறுப்பு. உன்னிலும் உயர்ந்தவள் இந்த உலகில் யாருண்டு! கவலை கொள்ளாதே! உடனே நிடதநாடு நோக்கி பறக்கிறேன். உன் உள்ளம் கவர் கள்வனிடம் உன் காதலைத் தெரிவித்து விடுகிறேன், என்று சொல்லிவிட்டு வேகமாக பறந்தது.தமயந்தி தன் காதல் நிறைவேறுமோ அல்லது ஏதேனும் இடைஞ்சல் வருமோ என்ற கவலையிலும், நளனை எப்போது காண்போமோ என்ற ஏக்கத்திலும் முகம் வாடியிருந்தாள். அப்போது அவளது தோழிகள் வந்தனர்.அவர்களுக்கு ஆச்சரியம்! எப்போதும் மலர்ந்த தாமரை போல் இருக்கும் நம் இளவரசியின் முகம், சூரியன் அஸ்தமான பின் வாடித் தொங்கும் சூரியகாந்தி போல் மாறியது ஏன் என்று புரியாமல் தவித்தார்கள். உடல்நிலை சரியில்லையோ! அவர்களுக்கு கலக்கம்.உடனே அவர்கள் அரசியிடம் ஓடினார்கள். மகாராணி! நம் இளவரசியார் நந்தவனத்தில் அமர்ந்திருக்கிறார்கள். அவர்களது முகம் என்றுமில்லாத வகையில் வாடிப்போய் உள்ளது. நாங்கள் காரணம் ஏதும் கேட்கவில்லை. தங்களிடமே சொல்லிவிடலாம் என விரைந்து வந்தோம், என்றனர். பெற்றவளுக்கு இதைக்கேட்டு பதட்டம். கையோடு தன் கணவன் வீமராஜனிடம் ஓடினாள். விஷயத்தைச் சொன்னாள். மன்னனுக்கோ மகள் மேல் கொள்ளைப் பாசம். இருவருமாய் இணைந்து நந்தவனத்துக்கு ஓடி வந்தனர்.மகளின் தலையைக் கோதிய தாய்,தமயந்தி, வா! அரண்மனைக்குச் செல்லலாம். உன் முகத்தில் என்ன வாட்டம்? எனக் கேட்டாள். உடம்பைத் தொட்டுப் பார்த்தாள். சூடு ஏதும் தெரியவில்லை.அரசனும்,அரசியும் அவளை அரண்மனைக்குள் அழைத்துச் சென்றனர். உள்ளே சென்றதும், அவள் தன்தந்தையின் காலடிகளில் விழுந்தாள்.

மகளே! உனக்கு என்னாயிற்று! திடீரென ஏன் இப்படி காலில் விழுகிறாய்? என்றான். அவளிடமிருந்து பதிலேதும் இல்லை. பெருமூச்சு மட்டுமே வெளிப்பட்டது. அவளது முகம் வியர்த்திருந்தது.வீமராஜனுக்கும், அவன் மனைவிக்கும் ஓரளவு புரிந்து விட்டது. இது இளவயது வியாதி தான் என்று! இருவரும் அவளை படுக்க வைத்து, சேடிப்பெண்களை அழைத்து மயிலிறகால் விசிறும்படி உத்தரவிட்டு, தங்கள் அறைக்குச் சென்றனர். அன்பரே! நம் பெண்ணின் மனநிலை நமக்கு புரிந்துவிட்டது. அவளுக்கு சிறந்த மணாளனைத் தேர்ந்தெடுக்க வேண்டிய காலகட்டம் வந்துவிட்டதை அவள் நமக்குச் சொல்லாமல் சொல்லியிருக்கிறாள். நமக்கு ஒரே செல்ல மகள். அவள் விரும்பும் கணவன் அமைய வேண்டுமே! எல்லா நாட்டு மன்னர்களுக்கும் ஓலை அனுப்புவோம். சுயம்வரத்துக்கு ஏற்பாடு செய்வோம். நம் அன்புப் பெண்ணுக்கு யாரைப் பிடித்திருக்கிறதோ, அவனை அவளே தேர்வு செய்து கொள்ளட்டுமே, என்றாள்.சரியான யோசனை சொன்னாய். உடனடியாக ஏற்பாடு செய்து விடுகிறேன், என்றவன், பலநாட்டு மன்னர்களுக்கும் தகவல் அனுப்பினான். என் குமாரத்தி தமயந்திக்கு திருமணம் செய்ய உத்தேசித்துள்ளேன். அவள் விரும்பும் கணவனைத் தேர்ந்தெடுத்துக் கொள்ளும் வகையில், சுயம்வரம் நடத்தப்படும். இன்னும் ஏழே நாட்கள். அடுத்த வாரம் சுயம்வரம், என்று அந்தந்த நாடுகளுக்குச் சென்று அறிவிக்கும்படி தூதர்களை அனுப்பினான். தன் நாட்டு மக்களுக்கு இளவரசிக்கு சுயம்வரம் நடக்கும் விபரத்தை முரசறைந்து தெரிவித்தான். மக்கள் மகிழ்ந்தனர். தமயந்தியின் சுயம்வர விபரமறிந்த மன்னர்கள் மகிழ்ந்தனர். அவள் தனது மனையாட்டியனால் அதை விட உயர்ந்த யோகம் தங்களுக்கு ஏதுமில்லை என அவர்கள் எண்ணினர். ஏழுநாட்கள் என்று அறிவித்திருந்தாலும் கூட, அதற்கு முன்னதாகவே விதர்ப்பநாடு வந்து சேர்ந்தனர்.

இந்த சமயத்தில், தமயந்தியிடமிருந்து தூது சென்ற அன்னம் நளமகராஜனின் இல்லத்தை அடைந்தது. அவன் போர்க்களத்தில் வீரத்திருமகன். வாளால் பருந்துகளுக்கும், கழுகுகளுக்கும் விருந்து வைப்பவன். அதாவது, எதிரிகளை மாய்த்து அவர்களது உடலை அவற்றுக்கு கொடுப்பவன். அப்படிப்பட்ட வீரத்திருமகன், இந்த காதல் விஷயத்தில் சோர்ந்து கிடந்தான். அன்னம் வந்து சேர்ந்ததும் ஆவலுடன் அதனருகே அமர்ந்து கொண்டான்அன்னங்களின் தலைவனே! நீ என் தமயந்தியைப் பார்த்தாயா? அவள் என்ன சொன்னாள்? நிச்சயமாக சம்மதித்திருப்பாளே! உம்...அங்கே என்ன நடந்தது? நான் அவளைப் பார்க்காமலே ஏற்றுக்கொண்டது போல, அவளும் என் காதலை ஏற்றாளா? என்றான் அவசரமும் படபடப்பும் கலந்து! அவனது அவசரத்தைப் புரிந்து கொண்ட அன்னம்,உன்னையும் அவள் ஏற்றாள். உன் பெருமையை உணர்ந்து கொண்டாள். கண்டதும் காதல் கொள்வதே உலகில் இயல்பு. நீங்களோ காணாமலே காதல் கொண்டீர்கள். காதலுக்கு மட்டும் தான் இத்தகைய சக்தி இருக்கிறது<, எனறது.நளன் இவ்வாறு பேசிக்கொண்டிருந்த வேளையில், நிடதநாட்டுக்கு வீமராஜன் அனுப்பிய தூதுவர்கள் வந்து சேர்ந்தனர். அவர்கள் வாயில்காவலர்களிடம், தங்கள் வந்த காரணத்தைக் கூறினர். காவலர்கள் நளனிடம் இதுபற்றி அறிவிக்க, நளன் அவர்களை அழைத்து விஷயத்தைத் தெரிந்து கொண்டான். உடனே புறப்பட்டு வருவதாக உங்கள் ராஜாவிடம் சொல்லுங்கள், என அவர்களை அனுப்பிவிட்டு, தேரைக் கொண்டு வர சொன்னான். சாரதியிடம்,விதர்ப்பநாடு நோக்கி விரைந்து செல், என உத்தரவிட்டான். படைவீரர்கள் புடைசூழ விதர்ப்பநாட்டை அடைந்தான். இப்போதெல்லாம் திருமணத்துக்கு மணப்பொருத்தம் பார்க்கிறார்கள். நளன் எப்படி பொருத்தம் பார்த்தான் தெரியுமா? தங்கம் போல் மின்னும் நெல்மணிகள் கொத்துக் கொத்தாக குலுங்கும் கதிர்களையுடைய வயல்சூழ்ந்த நாடு தன்னுடையது. விதர்ப்பநாடோ, குவளைக் கொடியில் பூத்துள்ள மலர்களில் இருந்து சிந்தும் தேன் வயல்களை நிறைத்து சகதியாக்க, அதில் செந்நெல் கதிர்கள் விளைந்த செழிப்பைக் கொண்டதாம்.ஆஹா! இரு நாடுகளுமே செழிப்பில் குறைந்தவையல்ல. மிகுந்த பொருத்தம் தான், என்று தனக்குள் சொல்லிக் கொண்டான்.இங்கே இப்படியிருக்க, இந்திரலோகத்திற்கு சென்றார் நாரத முனிவர்.

நாராயணா! என்ற மந்திரத்தை முழக்கியபடியே சென்ற நாரதரை இந்திரன் வரவேற்றான்.சிவபெருமானின் நெற்றிக்கண்ணையும் குளிரச் செய்யும் வகையில் மகதி என்னும் யாழ் மீட்டி இனிமையாய் பாடும் மாமுனிவரே, வர வேண்டும், வர வேண்டும், ஆசனத்தில் அமருங்கள். எல்லா லோகங்களுக்கும் சென்று வருபவர் நீங்கள். ஏதேனும்விசேஷத்தகவல் உண்டா? என்றான்.நாரதர் சிரித்தார்.நினைத் ததைத் தரும் கற்பகமரம், கேட்டதைத் தரும் சிந்தாமணி ஆகியவற்றையெல்லாம் கொண்ட பெரும் செல்வனே! தேவாதி தேவனே! வஜ்ராயுதம் ஏந்தி தேவர்களுக்கு துன்பம் தந்த பறக்கும் மலைகளில் சிறகுகளை வெட்டி வீசிய வீரத்திருமகனே! விசேஷம் இல்லாமல் இங்கே வருவேனா! என்றதும், என்ன சங்கதி? என்று ஆவலுடன் கேட்டான் இந்திரன். இந்திரா! வழக்கமாக உன்னைக் காண பலதேசத்து மன்னர்களும் வருவார்களே! இன்று யாரையும் காணவில்லையே, கவனித்தாயா? என்றார்.இதுபற்றி இந்திரன் ஏற்கனவே குழம்பிப்போயிருந்தான்.ஆம்! நாரத முனிவரே! இதற்கான காரணம் என்ன என்று தெரிந்தால் என் குழப்பம் தீரும். என்றான். (அக்காலத்தில், பூலோக மன்னர்கள் இந்திரனைக் காண அடிக்கடி வருவார்கள் என்ற தகவல் நளவெண்பாவில் மறைமுகமாகச் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது)விதர்ப்பநாட்டு இளவரசி தமயந்திக்கு சுயம்வரம் நடக்கப்போகிறது. பூலோக மன்னர்களெல்லாம் அங்கு போய் குவிந்திருக்கிறார்கள். அதனால் தான் உன்னைக் காண யாரும் இங்கு வரவில்லை, என்றதும், அந்தளவுக்கு அவள் பேரழகியா அல்லது இந்திரலோகத்தைப் போல் பெரும் செல்வம் படைத்தவளா? என்று கேட்டான். இந்திரா! தமயந்தி, உன் லோகத்தில் இருக்கும் ரம்பை, ஊர்வசி, திலோத்துமா ஆகியோரின் அழகையெல்லாம் ஒன்று சேர்த்தது போல கடைந்தெடுத்த வடிவம். வண்டுகள் மொய்க்கும் இயற்கை நறுமணத்தைக் கொண்ட கூந்தலை உடையவள். இளமையான யானைப்படையை உடைய வீமனின் மகள். அவன் குலம் தழைக்க வந்த அணையாவிளக்கு. மன்மதனே அவளது விழியழகை நினைத்துக் கொண்டு தான் காதல் பாணத்தையே மக்கள் மீது தொடுப்பான், என்றார் நாரதர்.

அவரது சொற்கள் இந்திரனின் மனதில் ஆசை அலைகளை எழுப்பின. அந்த தமயந்தி இந்திரலோகத்து ராணியானால் எப்படியிருக்கும்? இங்கே ஏற்கனவே பேரழகி இந்திராணி இருக்கிறாள். அவளையும் மிஞ்சும் வகையில் இன்னொரு ராணி வந்தால்... அவன் கற்பனைச் சிறகை விரித்தான். அது மட்டுமல்ல! இந்திரனின் அவையில் வீற்றிருந்த அக்னி, வருணன், எமதர்மராஜன் ஆகியோருக்கும் தமயந்தியின் மீது ஆசை ஏற்பட்டது. அனைவருமாக சேர்ந்து விதர்ப்ப தேசத்திற்குசெல்ல முடிவாயிற்று. அப்போது, அவர்களது ஞானதிருஷ்டியில், நிடதநாட்டு அரசன் நளனை தமயந்தி விரும்புகிறாள் என்பது பட்டது. அதற்கேற்றாற் போல், நளன் சுயம்வர மண்டபத்தை நோக்கி, வேகமாக தன் தேரில் மற்றவர்களை முந்திச்செல்லும் வகையில் சென்று கொண்டிருப்பதைக் கண்டனர். அவனைத் தடுத்து நிறுத்தி, தாங்கள் முந்திக்கொள்ள வேண்டும் என்று கண்ணிமைக்கும் நேரத்தில் விதர்ப்பநாடு வந்து நளனைத் தடுத்தனர்.தன் முன்னால் வந்து நிற்கும் தேவேந்திரனைக் கண்ட நளன் அவனை வணங்கினான்.தேவேந்திரரே! என்னை ஏன் தடுக்கிறீர்கள்? நான் தமயந்தி சுயம்வரத்தில் கலந்து கொõள்ள வேகமாகச் சென்று கொண்டிருக்கிறேன். உங்களுக்கு நான் என்ன செய்ய வேண்டும்? என்றான்.நளனே! நான் இப்போது உனக்கு ஒரு கட்டளையிடப் போகிறேன். அதை நீ முடித்துத் தர வேண்டும், என்றான்.யார் எந்தப் பணியைத் தந்தாலும் இல்லை என்று சொல்லாமல், அதை முடித்து தரும் இயற்கையான குணமுடைய நளன், இந்திரன் தன் ஆசைக்கே தடை விதிக்கப்போகிறான் என்பதை சற்றும் யோசிக்காமல், சொல்லுங்கள் தேவேந்திரா! தங்கள் கட்டளையை நிறைவேற்ற நான் தயார்< என்று வாக்களித்து விட்டான். மதம் படைத்த யானைப்படையை உடைய மாபெரும் மன்னனே! நாங்கள் தேன்சிந்தும் மலர் சூடிய தமயந்தியைப் பெண் பார்க்க வந்துள்ளோம்.

எங்கள் நால்வரில் யாரேனும் ஒருவரது தகுதி, திறமையறிந்து யாரை அவளுக்குப் பிடித்துள்ளதோ, அவர்களுக்கே அவள் மாலை சூட்ட வேண்டும் என சொல்லி வர வேண்டும், என்று கிடுக்கிப் பிடி போட்டான் இந்திரன்.நளன் அதிர்ந்துவிட்டான்.யாராவது நம்மிடம் ஏதாவது செய்து கொடுக்க வேண்டும் எனக் கேட்டால், அவசரப்பட்டு வாக்கு கொடுத்து விடக்கூடாது. அவரது கோரிக்கையை வற்புறுத்திக் கேட்டு, நம்மால் செய்ய முடியுமானால் தான் வாக்கு கொடுக்க வேண்டும். நளசரித்திரம் படிக்கும் நமக்கு இது ஒரு பாடம்.ஆனாலும் என்ன செய்வது? கொடுத்த வாக்கை மீற முடியுமா? தன் மனதில் இருக்கும் மங்கைநல்லாளின் மீதான ஆசையை தூக்கி எறிந்து விட வேண்டியது தான்! ஒருநாளாவது தமயந்தியுடன் வாழ்ந்தால் அந்த நாள் தன் வாழ்வின் பொன்னாள் என்று நினைத்திருந்த நளனுக்கு, தன் காதல் கானல் நீராகிப் போனது கண்டு வருந்தினான். சரியென தலையாட்டி விட்டான். தமயந்தியை நளன் காதலிப்பது தேவர்களுக்கு தெரியும். தமயந்தியும் அதே நிலையில் இருப்பதையும் அறிவார்கள். மற்றவர்களை தூது அனுப்பினால் தமயந்தி மறுத்து விடுவாள். காதலனையே தூது விட்டால் அவளால் என்ன செய்ய முடியும்? இப்படிப் போனது தேவர்களின் கணக்கு.நளனுக்கும் தன் காதலை தேவர்களிடம் சொல்ல முடியாமல் போய்விட்டது. ஏனெனில், கொடுத்த வாக்கை மீற அவனால் முடியவில்லை. அதேநேரம் தமயந்தியிடம் தூது சென்று, இந்த விஷயத்தை எடுத்துச் சொன்னால், அவளது கண்ணாடி இதயம் நொறுங் கிப் போகுமே!நெஞ்சில் ஆசைக்கனலை மூட்டிய வேகத் தில், அதில் ஏமாற்றம் என்னும் தண்ணீரை ஊற்றி அணைக் கும் பித்தலாட்டக் காரனே என தன்னைத் திட்டவும் செய்வாளே... அவன் யோசித்தான்.

அப்போது தான் இன்னொரு சிக்கலும் எழுந்தது.தன் விஷயம் ஒருபக்கம் இருக்கட்டும்! தேவர்கள் அவர்கள் பாட்டுக்கு, தமயந்தியிடம் தங்களுக்காக தூது செல் என சொல்லிவிட்டார்கள். தமயந்தி கன்னிமாடத்தில் இருப்பாள். அவளைச் சந்திக்க வேண்டுமானால், பெரும் கட்டுக்காவலை மீறிச் செல்ல வேண்டியிருக்குமே! என்ன செய்யலாம்? என்று யோசித்தான் நளன். இந்திரனிடமே அதுபற்றி கேட்டான். தேவேந்திரா! உனக்காக நான் தூது போக தயாராக இருக்கிறேன். ஆனால், அரண்மனைக் கன்னிமாடத்தில் காவல் பலமாக இருக்குமே! அதை எப்படி கடந்து செல்வேன்? என்றான். நளனே! நீ தமயந்தியைத் தவிர யார் கண்ணிலும் பட மாட்டாய் எனஉறுதியளிக்கிறேன். வெற்றியுடன் போய் வா, என்று வழியனுப்பி வைத்தான்.இதனால் தைரியமடைந்த நளன் தமயந்தி இருக்கும் குண்டினபுரம் அரண்மனைக்குச் சென்றான். அந்த ஊர் தான் விதர்ப்பநாட்டின் தலைநகரம். ஊருக்குள் நுழைந்ததும் அசந்து விட்டான். ஊரின் அழகு அவனை மயக்கியது. அந்த ஊரிலுள்ள வீடுகள் மனைசாஸ்திரப்படி அரண்மனை போல் கட்டப்பட்டிருந்தன. தெருக்கள் நேராக மிக நீண்டதாக இருந்தன. நகரின் அழகை ரசித்தபடியே, தன் கனவுக்கன்னியிடம், தான் செய்யப்போகும் காதல் தியாகத்தைப் பற்றி பேசுவதற்காக நளன் கன்னிமாடம் சென்று சேர்ந்தான். அவனை முன் பின் பார்த்திராவிட்டாலும், கன்னிமாடத்திற்குள் புகுந்து தன்னருகே வருமளவு தைரியம் நளனைத் தவிர யாருக்கு வரும் என்று கணித்துவிட்ட தமயந்தியின் விழிகள் நளனின் விழிகளைச் சந்தித்தன. குவளை மலரும், தாமரை மலரும் ஒன்றுக்கொன்று பார்த்தது போல அமைந்ததாம் அந்த சந்திப்பு. தமயந்தியின் கண்கள் குவளை போலவும், நளனின் கண்கள் தாமரை போலவும் இருந்தன. கண்கள் கலந்ததும் காதல் ஊற்றெடுத்தது.

நளனின் பேரழகு தமயந்தியை பைத்தியம் போல் ஆக்கிவிட்டது. ஒரு கட்டத்தில், அவனை அப்படியே அணைத்துக் கொள்ளலாமா என்று கூட தோன்றியது. ஆசை வெட்கத்தை வெல்லப் பார்த்தது. ஆனால், பெண்மைக்கே உரிய நாணம் அவளைத் தடுத்துவிட்டது. அதே நேரம் அன்னம் சொன்ன அடையாளங்களால் அவன் நளன் தான் என்பதை உறுதிப்படுத்திக் கொண்டதும், கண்களில் ஆனந்தக்கண்ணீர் துளிர்த்தது.அப்போது, அவள் தன் பவளவாய் திறந்தாள்.நீங்கள் யார்? அரண்மனையின் கட்டுக்காவலை மீறி கன்னிமாடத்துக்கே வந்துவிட்டீர்களே! <உங்களை இங்கே அனுமதித்தது யார்? ஒருவேளை காவலர்கள் கண்ணில் படாமல் மாயாஜாலம் நிகழ்த்தி வந்தீர்கள் என்றால், ஒருவேளை நீங்கள் தேவலோகத்தைச் சேர்ந்தவரோ? உண்மையைச் சொல்லுங்கள், என்றாள் மெல்லிய குரலில்.குயில் போல் இருந்தது அவளது தேன்குரல்.தமயந்தி! நீ நினைப்பது சரியே! நான் தான் நளன். உன்னை மணம் முடிக்கவே மற்ற அரசர்களையெல்லாம் முந்திக்கொண்டு இங்கு வந்து சேர்ந்தேன். ஆனால், இங்கு வந்ததும் நிலைமை மாறிவிட்டது. உன்னை மணம் முடிக்க இயலாத நிர்ப்பந்தத்தில் இருக்கிறேன், என்றதும், தமயந்தியின் ஆனந்தக்கண்ணீர் சோக நீராய் மாறியது.மாமன்னரே! ஏன் அப்படி சொல்கிறீர்கள்? காணாமலே காதலித்தவர்கள் நாம். அன்னம் தங்களைப் பற்றி சொன்ன அடுத்த கணமே, என் இதயம் உங்கள் இதயத்துடன் சங்கமித்து விட்டது. இதயமில்லாதவளாய் நிற்கும் என்னிடம், இரட்டை இதயத்தைக் கொண்டுள்ள நீங்களா இப்படி பேசுகிறீர்கள்? அப்படி என்ன நிர்ப்பந்தம்? என்றாள் அந்த பைங்கொடி.தமயந்தி! நான் வரும் வழியில் இந்திரன் முதலான தேவர்களைக் கண்டேன். தேவலோகத்தில் சுகத்தைத் தவிர வேறு எதையுமே அனுபவிக்காத அந்த சுகவாசிகள், உன் பேரழகு பற்றிக் கேள்விப்பட்டு, உன்னை மணம் முடிக்க இங்கு வந்துள்ளார்கள். அதிலும், இந்திரன் உன் மேல் உயிரையே வைத்திருக்கிறார். உன்னையும், என்னையும் பிரிக்க முடியாது என்று தெரிந்து கொண்ட அவர், என்னையே தூது அனுப்பினார். நானும் அவசரப்பட்டு வாக்கு கொடுத்து விட்டேன்.

என் வாக்கைக் காப்பாற்றும் நிர்ப்பந்தத்தில் இருக்கிறேன். நீ அவருக்கு மாலை அணிவித்து மணாளனாக ஏற்றுக்கொள். பூலோக ராணியாக வேண்டிய நீ, தேவலோக ராணியாகப் போகிறாய், என்றான்.கண்ணீர் சிந்த நின்ற தமயந்தி, மன்னரே! உங்கள் நிலையைப் புரிந்து கொண்டேன். ஆனால், ஒன்றை மட்டும் புரிந்து கொள்ளுங்கள். இந்த தமயந்தி உங்களைத் தவிர யாருக்கும் சொந்தமாக மாட்டாள். இந்த சுயம்வரம் ஏற்பாடு செய்யப்பட்டதே உங்களுக்காகத் தான். நீங்கள் வந்ததும், உங்களை அடையாளம் கண்டு மாலை அணிவிக்கலாம் என இருந்தேன். ஆனால், இப்போது இப்படி ஒரு சிக்கலில் நீங்கள் மாட்டியிருக்கிறீர்கள் என்பதை அறிந்து வேதனைப்படுகிறேன். நளமகாராஜரே! தேவர்களுடன் இணைந்து சுயம்வர மண்டபத்துக்கு வாருங்கள், என்ற அந்த அழகுப்பாவை அங்கிருந்து புறப்பட்டாள்.நளனும் அவளிடம் விடைபெற்று தேவர்களிடம் வந்து சேர்ந்தான். இந்திரனிடம் நடந்ததைச் சொன்னான். தேவர்கள் மகிழ்ந்தனர். தமயந்தி தங்களை மறுக்கவில்லை என்பதை அறிந்து ஆறுதலடைந்தனர். அதே நேரம், சுயம்வர மண்டபத்துக்கு நளனை அவள் வரச்சொல்லியிருக்கிறாள் என்ற தகவல் அவர்களுக்கு நெருப்பாய் சுட்டது. இருப்பினும், தங்களுக்காக, தன் காதலையே தியாகம் செய்ய முன்வந்த நளனுக்கு ஒரு வரத்தை அளித்தனர்.நளனே! நீ செய்த தியாத்துக்காக ஒரு வரத்தை அளிக்கிறோம். உணவு. தண்ணீர், நகைகள், ஆடைகள், மலர் மாலை, நெருப்பு ஆகியவற்றை நீ எந்த இடத்தில் இருந்தாலும் நினைத்தவுடன் அவை கிடைக்கும் சக்தியை அளிக்கிறோம், என்றனர். மறுநாள், சுயம்வர மண்டபத்துக்கு அங்கு வந்துள்ள அரசர்கள் அனைவரும் வந்து சேரும்படி அழைப்பு விடுக்கப்பட்டது. அனைத்து நாட்டு அரசர்களும் புறப்பட்டனர்.

தேவர்கள் சென்ற பிறகு, நளன் மன்னர்கள் தங்கியிருந்த அரண்மனைக்குப் போய்விட்டான்.தமயந்தி ஆழ்ந்த வருத்தத்தில் இருந்தாள்.யாரைக் காதலித்தோமோ, அவனே, மற்றவர்களுக்கு என்னைக் காதலியாக்க தூதாக வந்தது எவ்வளவு பெரிய கொடுமை! இவன் என்ன மனிதன்! அன்னப்பறவை சொன்னது முதல் இவனே கதியென இருந்தோமே! இப்போதோ இவன் தூதனாகி விட்டான். இவனை நாடி என் மனம் செல்வதைத் தான் புரிந்து கொள்ள முடியவில்லை. இப்படிப்பட்டவன் கடைசி வரை என்னைக் காப்பாற்றுவானா? அவள் தனக்குள் அரற்றினாள். மயக்கமே வந்துவிடும் போல் இருந்தது. சந்தேகப்பூக்கள் அவளது மனதுக்குள் பூத்தாலும், ஆசை மட்டும் விடவேயில்லை. அவன் எவ்வளவு பெரிய கட்டழகன். ஆண்மை அவனோடு பிறந்தது. காதலையே துறக்க முடிவெடுத்த இவனைத் தியாகி என்று நினைக்க என் மனம் ஏன் நினைக்கவில்லை? அவனைப் பார்க்கும் முன் என் உள்ளம் தான் நிடதநாட்டை நோக்கிப் போயிற்று! அவனைப் பார்த்த பிறகு, உயிரும் போய்விட்டதே! தீயிலே விழுந்த இளம் தளிர் போல என் மனம் தவிக்கிறதே! கொக்குகளாலும், நாரைகளாலும் கொத்தி தின்னப்படும் மீன் போல் துடிக்கிறேனே! என் அன்பரே! தாங்களா இப்படி ஒரு வார்த்தை சொன்னீர்கள். உங்களுக்காக என் உயிர் வேண்டுமானால் போகும். ஆனால், என் காதல் என்றும் ஜீவித்திருக்கும், என்று புலம்பியவள் அவ்வப்போது மயக்கநிலைக்கும் சென்று திரும்பினாள்.அப்போது மாலைப் பொழுது வந்துவிட்டது. தமயந்தியின் புலப்பம் அதிகமாயிற்று.இந்த வானத்தைப் பாருங்களேன்! ஓரிடத்தில் பிறை நிலா இருக்கிறது. ஆனாலும், நிலவின் குளிரால் அதற்கு எந்த பயனுமில்லை. அந்த வானத்தில் அப்படி என்ன தான் வெப்பமோ? கொப்புளங்கள் பல தோன்றியிருக்கின்றன.

நட்சத்திரங்களைத் தான் சொல்கிறேன். அந்த வானத்தின் நிலை போல் தான் என் மனமும் புண்பட்டிருக்கிறது. அந்த நிலவுக்கு என் மேல் கோபமோ தெரியவில்லை, அதன் கதிர்கள் என் உள்ளத்தை நெருப்பாய் சுடுகின்றன. அதென்னவோ தெரியவில்லை. இன்றைய இரவுப் பொழுது வெகுவாக நீளுமென்றே நான் கருதுகிறேன், என்றாள். அந்த இரவில் நளன் தன்னுடன் யாருமறியாமல் இருந்திருந்தால் காதல் மொழி பேசி இனிய இரவாக கழிந்திருக்குமே என ஏக்கப்பெருமூச்சு விட்டாள். பஞ்சணையில் படுத்தாள். அது முள்ளாய் குத்தியது. உலகிலேயே கொடிய வியாதி காதல் தான் போலும்! காதலனை நினைத்து விட்டால் காதலியருக்கு தூக்கமே கிடையாது என்று அவள் படித்திருக்கிறாள். இப்போது அதனை அவளே உணர்கிறாள். என்னைத் துன்பத்திற்குள்ளாக்கும் இரவே போய் விடு. கதிரவனே விரைந்து வா! விடியலுக்குப் பிறகாவது என் வாழ்விலும் விடியல் ஏற்படுகிறதா பார்ப்போம், என எண்ணியபடியே, ஒவ்வொரு நொடியையும் தள்ளினாள். ஒரு வழியாய், அந்த விடியலும் வந்தது. விடிய விடிய கண் விழித்ததால், குவளை மலர் போன்ற அவளது கண்கள் சிவந்திருந்தன.அன்றைய தினம் தான் சுயம்வரம். மனதுக்குப் பிடித்தவன் மணாளனாக அமைந்தால் தான் சுயம்வரம் இனிக்கும். காதலனோ காதலைத் தியாகம் செய்துவிட்டான். யார் கழுத்தில் மாலை அணிந்தால் என்ன! ஏதோ, ஜடம் போல் மாலையைத் தூக்கிக் கொண்டு உணர்வற்றவளாய் மண்டபத்துக்குள் நுழைய வேண்டியது தான்! அவளும் இதோ நுழைந்து விட்டாள். அவளது காதில் அணிந்திருந்த முத்துக்கம்மல் அவளது எழிலை அதிகமாக்கியிருந்தது.மன்னர்களெல்லாம் தமயந்தியின் அழகை ரசிக்க அப்படியும், இப்படியுமாய் தலையை தூக்கி பார்க்க முயன்றனர். ஆனால், தோழிகள் அவளைச் சுற்றி நின்றதால் அவள் அவர்களின் பார்வையில் படவில்லை. அந்த மண்டபத்தில் இந்திரன், எமன், அக்னி முதலான தேவர்களும் மன்னர்களின் வரிசையில் எழில் பொங்க வீற்றிருந்தனர்.

நளன் எவ்வித உணர்வும் இல்லாமல் ஒரு ஆசனத்தில் அமர்ந்திருந்தான். தோழிப்பெண் தமயந்தியிடம் ஒவ்வொரு மன்னரையும் அறிமுகம் செய்து வைத்தபடியே முன்சென்றாள். தமயந்தி அழகிய மாலையுடன் அவள் சொல்வதைக் கேட்க விரும்பாமல் பின்சென்றாள். தமயந்திக்கு முதலில் அறிமுகப்படுத்தப்பட்டவன் சோழ மன்னன். காவிரிநதி தீரத்துக்குச் சொந்தக்காரன். அந்த ஆற்றிலே ஓடுவது தண்ணீரல்ல! அமுதம், அதற்கு பொன்னி என்றும் பெயருண்டு என்று எடுத்துச் சொல்கிறாள். அடுத்து பாண்டிய மன்னனை அறிமுகப்படுத்துகிறாள். இவன் சொக்கநாதரின் அருள்பெற்ற வம்சத்தில் பிறந்தவன். முன்னொரு காலத்தில் இவனது முன்னோர் செண்டால் மேரு மலையையே அடித்துப் பிளந்தார்களாம், என்று அவனது வீரத்தைப் புகழ்ந்தாள். கங்கைக்கரையிலுள்ள காந்தார நாட்டின் மன்னனும் சுயம்வரத்துக்கு வந்திருந்தான். அவனது தேசத்தின் பெருமையையும் சொல்லி பாராட்டினார்கள். அடுத்து சேரநாட்டின் மன்னனை அறிமுகம் செய்தாள். அடுத்து குருநாடு, அவந்தி நகரத்து மன்னன் என்று பட்டியல் நீண்டு கொண்டே போனது. ஓரிடத்தில் தோழி அயர்ந்து நின்று விட்டாள்.ஏனெனில், நளனைப் போலவே உருவம் கொண்ட நான்கு பேர் அமர்ந்திருந்தனர். தமயந்தியும் அவர்கள் நால்வரும் நளனைப் போலவே இருப்பது கண்டு அசந்துவிட்டாள். இதெப்படி சாத்தியம்? ஒரே வடிவத்தில் நால்வரா? இந்த உ<லகத்திலா இந்த அதிசயம்? அப்படியானால், இவர்களில் யார் என் நளன்? ஐயோ! இது தேவர்களின் வேலையாகத்தான் இருக்க வேண்டும். என்னை விரும்பிய தேவர்கள், என் நளனை என்னிடமே தூது அனுப்பியது போதாதென்று இப்போது இப்படி வந்து அமர்ந்திருக்கிறார்களே! இந்த இக்கட்டான நிலையில் என் நளனை எப்படி கண்டுபிடிப்பது? என்று சிந்தித்த தமயந்திக்கு, ஒரு பொறி தட்டியது.

நிஜமான நளனும் இங்கிருக்கிறான். மற்றவர்களும் எனது கண்களுக்கு மட்டுமே தெரியும்படி நளனைப் போலவே இருக்கின்றனர். தேவர்களை அடையாளம் காண்பது எளிது. தேவர்களின் கண்கள் இமைக்காது. அவர்களது பாதங்கள் நிலத்தில் படாமல் அந்தரத்தில் நிற்கும். அவர்கள் அணிந்து வரும் மாலைகள் வாடாது. இங்கே இந்திரன், அக்னி, வருணன் எமதர்மன் ஆகிய தேவர்கள் அமர்ந்துள்ளனர். அவர்களது அடையாளத்தை இவற்றைக் கொண்டே கணித்து விடலாம். நிஜமான நளனைக் கண்டுபிடித்து விடலாம் என்ற மகிழ்ச்சியுடன் கண்களால் துழாவினாள் தமயந்தி. எல்லாருமே காதல் பார்வையை அவள் மீது வீசிக்கொண்டிருந்தனர். தமயந்தி மிகத்தெளிவாக கணித்து, நிஜமான நளனுக்கு மாலை அணிவித்து விட்டாள். தேவர்கள் மட்டுமல்ல! மற்ற நாட்டு மன்னர்களும் அதிர்ச்சியடைந்து விட்டனர். ஏமாற்றமும், மான உணர்வும் அவர்களின் மனதைப் புண்ணாக்கி விட்டது. அந்த ஆத்திரத்துடன் அவர்கள் ஒவ்வொருவராய் வெளியேறினர். அவர்களது செந்தாமரை முகங்கள் வெண்தாமரை ஆகி விட்டன ஏமாற்றத்தால்.தமயந்தியின் முகமும் அப்படித்தான் ஆகியிருந்தது. எதனால் தெரியுமா? நிஜ நளனுக்கு மாலை சூட்டிய வெட்கம் தாளாமல்! நளனும் பெரும் மகிழ்ச்சியை அடைந்தான். தன் தமயந்தி தனக்கு கிடைத்து விட்டதில், அவனது உள்ளம் ஆனந்தக் களியாட்டம் போட்டது. தமயந்தியோ எப்போது அவனைத் தனிமையில் சந்தித்து அவனுடன் பேசி மகிழ்ந்திருக்கலாம் என்று அவசரப்பட்டுக் கொண்டிருந்தாள். காளையுடன் நடந்து செல்லும் பசுவைப் போல நளனுடன் அவள் கிளம்பினாள்.தேவர்கள் கடும் கோபத்துடன் சுயம்வர மண்டபத்தை விட்டு வெளியேறினர். எல்லாரும் இங்கு வந்து சுயம்வரத்தை முடித்துக் கொண்டு கிளம்பிக் கொண்டிருந்த வேளையில் தான், தேவலோகத்தில் இருந்து ஒரு வி.ஐ.பி., தள்ளுநடை போட்டு வந்து கொண்டிருந்தார். அவரது பெயர் சனீஸ்வரன். கலிபுருஷன் என்றும் அவரைச் சொல்வார்கள்.

அவருக்கு என்ன ஆசை தெரியுமா? தமயந்தியைத் திருமணம் செய்ய வேண்டுமென்பது. ஆனால், என்ன செய்வது? அவர் கால் ஊனமானவர். மெதுவாக சுயம்வரம் முடிந்ததைக் கூட அறியாமல் விதர்ப்பநாடு நோக்கி வந்து கொண்டிருந்தார்.ஜோதிட சாஸ்திரத்திலும் இது தெளிவாக இருக்கிறது. மற்ற கிரகங்கள் வேகமாக ஒரு ராசியைக் கடந்து விடும். குரு ஒரு வருஷம், ராகு, கேது ஒன்றரை வருஷம் என சற்று அதிக காலம் சஞ்சரிப்பர். ஆனால், சனீஸ்வரர் மட்டும் இரண்டரை வருஷம் ஒரு ராசியில் இருப்பார். காரணம் இவரது மெதுவான நடையால் தான்.இவருக்கு ஒரு குணம் உண்டு. நல்ல மனங்களை கெட்ட வழியில் திருப்பி விடுவார். ஆனால், எல்லாரையும் அப்படி செய்யமாட்டார். எவனொருவன் கடமையைச் சரிவர செய்யத் தவறுகிறானோ அவனுக்கே அம்மாதிரியான குணநலனை தண்டனையாகக் கொடுத்து விடுவார்.அவர் தன் எதிரே முகத்தைத் தொங்கப் போட்டுக் கொண்டு வந்து கொண்டிருந்த இந்திரன், அக்னி, வருணன், எமதர்மனைப் பார்த்தார்.தேவேந்திரனுக்கு வணக்கம் தெரிவித்த அவரிடம் தேவேந்திரன்,சனீஸ்வரரே! எங்கே போய்க்கொண்டிருக்கிறீர்? என்று கேட்டான்.சனீஸ்வரர் அவனிடம்,விதர்ப்ப நாட்டு இளவரசி தமயந்திக்கு சுயம்வரமென அறிந்து அங்கு சென்று கொண்டிருக்கிறேன். அவள் பேரழகியாம்< என்றதும், சரியாப் போச்சு, தமயந்தியின் சுயம்வரம் முடிந்து விட்டது. நாங்களும் அவளை மணம் முடிக்கவே சுயம்வரத்தில் பங்கேற்க இங்கு வந்தோம். ஆனால், அவளோ நிடதநாட்டின் அரசன் நளனுக்கு மாலை சூட்டி அவனது மனைவியாகி விட்டாள். அங்கே உமக்கு இனி வேலை இல்லை. வந்த வழியே திரும்பிச்செல்லும், என்றான் இந்திரன்.

சனீஸ்வரரின் முகம் சிவந்து விட்டது.என்ன! வானுலகத் தேவர்களை விட அறிவிலும், அழகிலும் சிறந்த ஒருவன் பூமியில் இருக்கிறானா? அவனுக்கு தமயந்தி மாலை சூடி விட்டாளா? அந்த அகம்பாவம்பிடித்த பெண்ணை நான் பிடிக்கிறேன்.அவளது கணவன் மன்னன்என்னும் பதவியைத் துறந்து, பிச்சை எடுக்கும் நிலைமைக்கு ஆளாக்குகிறேன், என்று கூக்குரலிட்டார்.இந்திரன் சிரித்தான்.சனீஸ்வரரே! மணமகள் கிடைக்காத ஆத்திரத்தில் துள்ளிக்குதிக்காதீர். உம்மால் யாரைப் பிடிக்க முடியும் என்பதை மறந்து விட்டுப் பேசுகிறீர். தமயந்தி கற்புடைச் செல்வி. தன் அறிவால், நளனைப் போலவே மாறியிருந்த எங்களைக் கூட அடையாளம் கண்டு ஒதுக்கிவிட்டு, அவளது காதலனை மணாளனாகப் பெற்ற புத்திசாலி. புத்திசாலிகளை நீர் அணுகமுடியாது என்பதை மறந்து விடாதீர். நளனோ வீரம் மிக்கவன். யாருக்கும் எந்த துன்பமும் இழைக்காதவன். தன் மக்களை கண்போல் பாதுகாப்பவன். அவனருகிலும் <<உம்மால் நெருங்க முடியாது. நான் சொல்வதைக் கேளும். எங்களுடன் திரும்பி வாரும், என்றான். சனீஸ்வரரும் வேறு வழியின்றி, வந்த வழியே திரும்பினார்.இதற்கிடையே விதர்ப்ப நாட்டு அரண்மனையில், வீமராஜன் தன் மகளின் திருமணத்தை நடத்த தகுந்த ஏற்பாடுகளைச் செய்தான். ஜோதிடர்கள் திருமண நன்னாளைக் குறித்துக் கொடுத்தனர். குறிப்பிட்ட அந்த நாள் காலையிலேயே திருமணம். தோழிகள் தமயந்தியின் உடலையே மூடுமளவுக்கு மலர்களால் அவளை அலங்கரித்தனர். ஏராளமான நகைகள் அணிவிக்கப்பட்டன. இந்த நகைககளையெல்லாம் மிஞ்சும் புன்னகை முகத்தில் அரும்ப நின்ற தமயந்தியின் தங்கக்கழுத்தில் மங்கலநாண் பூட்டினான் நளன். அவர்களின் மனம் இன்ப வெள்ளத்தில் மிதந்தது.ஒரு நன்னாளில் தன் அன்பு மனைவியை அழைத்துக் கொண்டு, தனது நாட்டுக்குப் புறப்பட்டான் நளன். தேர் புறப்பட்டுச் சென்றது. செல் லும் வழியிலுள்ள இயற்கைக் காட்சிகளை தனக்கே உரித் தான கவிநயத்துடன் மனைவியிடம் விளக்கிச் சொல்லியபடியே இருவரும் மகிழ்ச்சியுடன் சென்று கொண்டிருந்தனர். பாவம்! இந்த மகிழ்ச்சி நீண்டகாலம் நீடிக்காது என்பது அவர்களுக்கு எப்படி தெரியும்?

வழியில், அவர்கள் ஒரு சோலையில் இளைப்பாறினர்.அந்தச் சோலையில் ஒரு அழகிய குளம் இருந்தது. அதில் இறங்கி நள தமயந்தி தம்பதியர் நீராடி மகிழ்ந்தனர். கரையேறிய தமயந்தியிடம் நளன், புன்னகைப் புயலே! அழகே வடிவாய் பேசும் பைங்கிளியே! இந்தச் சோலை எப்படியிருக்கிறது தெரியுமா? எங்கள் மாவிந்த நகரத்தில் நாங்கள் இளைப்பாறும் சோலையை அப்படியே உரித்து வைத்தது போல் இருக்கிறது, என்றான்.வந்தது வினை. தமயந்தி கோபித்துக் கொண்டாள்.நாங்கள் என்றால்... இவர் யாரைச் சொல்கிறார்? இவர் தான் மாமன்னராயிற்றே! அழகில் மன்மதன். இவரது ஊரில் இருக்கும் சோலையில் அந்த நாங்களுடன் தங்கியிருந்தாரோ! நாங்கள் என்று இவர் குறிப்பிட்டது பெண்களாக இருக்குமோ! அப்படியானால், எனக்கு முன்பே இவருக்கு பெண்களிடம் உறவு இருந்திருக்கிறது. இது தெரிந்தால், இவருக்கு நான் கழுத்தை நீட்டியிருக்கவே மாட்டேன். இந்த ஆண்களே இப்படித்தான்! வண்டுகள்! ஓரிடத்தில் ஒழுங்காக இருக்கமாட்டார்கள். மனைவி அருகில் இருக்கும் போது கூட அந்த நாங்கள் இவரது நினைவுக்கு வருகிறார்கள். இன்னும் ஊருக்குப் போனதும், இவர் அந்த நாங்கள் பின்னால் அலைவார். நான் போய் இழுத்துக்கொண்டு வர வேண்டும். என்ன மனிதர் இவர், காதல் மொழி பேசும் போது, என்னைத் தவிர வேறு யாரையும் ஏறிட்டுக்கூட பார்த்ததில்லை என்றார். இப்போது, யாரையோ சிந்திக்கிறார். அந்த அன்னம் மட்டும் இப்போது என் கையில்கிடைத்தால்... அதன் கழுத்தை திருகி விடுவேன், அது செய்த வேலை தானே இவ்வளவும்.. அவள் கோபத்துடன் முகத்தை வேறுபக்கமாகத் திருப்பிக்கொண்டாள்.

சந்தேகம்.... பெண்களுக்கே உரித்தான குணம், அதிலும் காதலித்து திருமணம் செய்யும் பெண்கள் இருக்கிறார்களே. அவர்கள் ஆண்களைப் பாடாய் படுத்தி விடுவார்கள். ஆண்கள் என்ன வார்த்தை பேசினாலும் சரி...அதைக் குதர்க்கமாக்கி, என்னென்னவோ சிந்திப்பார்கள். தமயந்தியும் இதற்கு விதிவிலக்கா என்ன! அவள் தன் கணவன் மீது சந்தேகப்பட்டு முகத்தைத் திருப்பியிருக்கிறாள். அப்பாவி நளன்...ஆஹா..இவளுக்கு என்னாயிற்று! இத்தனை நேரம் சந்தோஷமாகத்தானே பேசினாள். இப்போது சந்தோஷத்துக்கு தோஷம் வந்துவிட்டதே! ஏதாவது தப்பாக பேசி விட்டோமா! அப்படி வித்தியாசமாக ஏதும் பேசவில்லையே. அவன், அவள் முகத்தை மெதுவாகத் திருப்ப, அவள் பொசுக்கென்று எழுந்து விசுக்கென்று மீண்டும் முகத்தைத் திருப்பிக்கொண்டாள். ஆண், பெண் என்ற இனத்திற்கிடையே இறைவன் கொடுத்த வரப்பிரசாதம் தான் இந்த ஊடல். வள்ளுவரின் மனைவி வாசுகி, கணவரின் செயல்பாடுகளை கடைசி வரை கண்டுகொண்டதே இல்லை என்று சொல்வதை எல்லாம் ஒருபக்கம் நம்பவே முடியவில்லை. ஊடல் இன்பத்தில் அவர் நிரம்பவே திளைத்திருக்க வேண்டும். அந்த அனுபவ அறிவு இல்லாமலா, ஊடல் என்ற தனி அத்தியாயத்தையே அவர் படைத்திருக்க முடியும்!தமயந்தி! ஏன் உன் முகத்தில் திடீர் மாற்றம்? என்ன ஆனது உனக்கு? என்றான் கவலையுடன். மனைவி குளத்தில் குளித்ததில், புதுத்தண்ணீர் பிடிக்காமல் ஏதேனும் ஆகிவிட்டதோ என்ற கவலை அவனுக்கு!அவளது கொவ்வைச் செவ்விதழ் ஏதோ பேசத்துடித்தது. கண்கள் சிவந்திருந்தன. முகத்தில் அந்த நிழற்சோலையிலும் வியர்வைத்துளிகள். அந்தத்துளிகள் அவளது அழகு முகத்தில் முத்துக்களைப் பதித்தது போல் இருந்ததை, அந்த நிலையிலும் நளன் ரசித்தான். அந்த அழகு அவனை மயக்க அவளை அணைக்க முயன்றான். அவள் விலகிச் சென்றாள். தனது சந்தேகத்தை அவனிடம் எப்படி கேட்பது? தமயந்தி அமைதியாக இருந்தாள். அந்த அமைதி நளனை மேலும் சங்கடத்துக் குள்ளாக்கியது. நம்மிடம் ஏதோ தப்பு கண்டுபிடித்திருக்கிறாள். அதனால் தான் இந்த மாற்றம் என்பதைப் புரிந்து கொண்ட அவனும் ஏதும் பேசாமல் படீரென தரையில் விழுந்தான். தன் அன்பு மனைவியின் கால்களை எடுத்து தன் தலையில் வைத்துக் கொண்டான்.

அவளுக்கு பரமதிருப்தி. கணவன் காலடியில் கிடக்கிறான் என்றால் எந்தப் பெண்ணுக்குத் தான் இன்பம் பிறக்காது! இவன் தனக்காக எதையும் செய்வான் என்ற எண்ணம் மேலிட அவள் அவனை எழுப்பினாள். அப்படியே அணைத்துக் கொண்டாள். கோபம் பறந்தது. ஊடல் தீர்ந்தது. அவர்களது பயணமும் தொடர்ந்தது. கங்கைக்கரை வழியே அவர்கள் தங்கள் ஊரை அடைந்தனர். வான் முட்ட உயர்ந்து நின்ற மாளிகைகள் அங்கே இருந்தன. இது தான் நமது ஊர் என்று தமயந்தியிடம் மகிழ்ச்சியுடன் சொன்னான் நளன். ஊருக்குள் சென்ற புதுமணத்தம்பதியரை மக்கள் மகிழ்ச்சியுடன் வரவேற்றனர். வரவேற்பு வளைவுகளின் அழகில் சொக்கிப்போனாள் தமயந்தி. மக்களுக்கு இருவருமாக இணைந்து பரிசுகளை வாரி வழங்கினர். மக்கள் மகிழ்ந்து வாழ்த்தினர். நளமகாராஜன் தமயந்தியுடன் நிடதநாடு வந்து சேர்ந்து 12 ஆண்டுகள் ஓடிவிட்டது. அதுவரை அவர்களுக்குள் எந்த கருத்து பேதமும் வந்ததில்லை. இன்பமாய் வாழ்வைக் கழித்தனர். பிள்ளைச்செல்வங்கள் இருவர் பிறந்தனர். தங்கள் இன்ப வாழ்வின் சின்னங் களான அந்த புத்திரர்களைப் பார்த்து பார்த்து தமயந்தி மகிழ்ந்திருப்பாள். தாயுடனும், தந்தையுடனும் விளையாடி மகிழ்வதில் இளவரசர்களுக்கு தனி விருப்பம். ராஜாவாயினும், ராணியாயினும், பணமிருந்தாலும், இல்லாவிட்டாலும்... யாராயிருந்தால் என்ன! துன்பம் என்னும் கொடிய பேய் எல்லோர் வாழ்விலும் புகுந்து விடுகிறது. நள தமயந்தி மட்டும் அதற்கு விதிவிலக்கா என்ன! துன்பம் வந்தால் தெய்வத்திடம் நாம் முறையிடலாம். ஆனால், தெய்வமே துன்பத்தைக் கொடுக்க வரிந்து கட்டிக்கொண்டு வந்தால் என்ன செய்வது! ஆம்..தெய்வப்பிறவிகளான இந்திராதி தேவர்கள், தமயந்தி தங்களுக்கு கிடைக்காமல் போனதால் ஆத்திரம் கொண்டு, நளனுக்கு துன்பம் இழைக்க சதித்திட்டம் தீட்டினர்.

ஏற்கனவே, சனீஸ்வரர் தமயந்தியின் சுயம்வரத்துக்கு வந்தபோது, தாமதமாக வந்ததால், அதில் கலந்து கொள்ள இயலாமல் போயிற்று. மேலும், தமயந்தி தேவர்களைப் புறக்கணித்து, நளனுக்கு மாலையிட்டு விட்டதால், அவரது ஆத்திரம் அதிகரித்தது. தேவர்களை விட உயர்ந்தவன் ஒரு மானிடனா? என்று அவருக்கு பெரும் கோபம். இதனால், நளன் மீது வெறுப்பு அதிகரித்து அவனை ஒரு வழிசெய்ய நேரம்பார்த்துக் காத்திருந்தார். நள தமயந்தி 12 ஆண்டுகள் இணைந்து வாழ்ந்தனர். தங்கள் தேசத்து மக்களை கண்ணும் கருத்துமாய் பாதுகாத்தனர். மக்களும் மன்னன் சொல் கேட்டு நடந்து கொண்டனர். மன்னனும், மக்களும் கருத்தொருமித்து வாழும் நாட்டில் பிரச்னையை உண்டுபண்ண சனீஸ்வரரால் இயலாது. அவரும் 12 ஆண்டுகள் பொறுத்துப் பார்த்து, நளன் எங்காவது இடறமாட்டானா என்று கண்ணில் நல்லெண்ணெயை ஊற்றிக்கொண்டு காத்திருந்தார். உஹூம்...முடியவே முடியவில்லை. ஆனால், மனிதன் என்பவன் ஒரு பலவீனன் ஆயிற்றே! நளனுக்கு அன்றைய காலைப்பொழுது மோசமாக விடிந்தது. அந்தப்பொழுது சனீஸ்வரருக்கு இனிய பொழுதாகி விட்டது. அன்று காலை நளமகாராஜன் தன் பூஜையறைக்கு கிளம்பினான். பூஜையறைக்குள் நுழையும் முன்பு கால்களை நன்றாக அலம்ப வேண்டும். பலர் இப்போது அதைச் செய்வதே இல்லை. இப்போது கோயிலுக்கு போகிறவர்கள் கூட அதைச் செய்வது இல்லை. திருப்பதி போன்ற ஒன்றிரண்டு கோயில்களில் உள்ளே நுழையும்போதே நம் குதிகாலளவு தண்ணீர் படும்படி ஓட விட்டிருக்கிறார்கள். மற்ற இடங்களில் தெப்பக்குளத்தில் போய் கால் கழுவக்கூட வழியின்றி வற்றிப்போய்விட்டது. இதனால், சனீஸ்வரன் அநேகர் வீடுகளில் நிரந்தர வாசம் செய்து வருகிறார். ஆம்...கடவுள் தந்த நீர்நிலைகளை அழித்ததால், சனீஸ்வரனின் பிடிக்குள் நம்மை நிரந்தரமாகச் சிக்கச் செய்து விட்டார்!

நளனுக்கும் தண்ணீரால் தான் கண்டம் வந்தது. அவன் கால்களைக் கழுவினான். ஆனால், சரியாக கழுவவில்லை. சிலர் காலின் முன்பகுதியில் மட்டும் தண்ணீர் ஊற்றிவிட்டு செல்வார்கள். இது தவறான நடைமுறை. கால் கழுவும் போது குதிகால் நனையுமளவு கழுவ வேண்டும். நளனும் இதே தவறைச் செய்தான். ஏதோ நினைவில் முன்கால்களைக் கழுவியவன் குதிகாலைக் கழுவவில்லை. இந்த சிறு தவறை தனக்கு சாதகமாக்கிக் கொண்ட சனீஸ்வரர், நளனின் கால் வழியாக அவனது உடலில் புகுந்து பிடித்துக் கொண்டார். சனி என்றால் யாரும் பயப்பட வேண்டிய அவசியமே இல்லை. யார் ஒருவன் கடமை தவறுகிறானோ அவனை மட்டுமே அவர் பிடிப்பார். சின்னத்தவறைக் கூட அவர் சகித்துக் கொள்ளமாட்டார். அந்த வகையில் 12 வருடம் காத்திருந்து நளனைப் பிடித்தார் சனீஸ்வர பகவான்.ஒருவன் அன்றாடம் நாராயணா, சிவாயநம, சரவணபவ என்று தன் இஷ்ட தெய்வத்தின் பெயரை ஜபித்து வந்தால் அவனைத்துன்பங்கள் அணுகாது என்பது ஐதீகம். ஆனால், என்றாவது ஒருநாள் மறந்துபோனால் சனீஸ்வரர் அந்த நாளை தனக்கு இனியநாளாக்கிக் கொள்வார். அந்த நபரைப் போய் பிடித்துக்கொள்வார். ஒரு சிலர் நாத்திகம் பேசுகிறார்களே! உலகத்திலேயே பெரும் பணக்காரர்களாக இருக்கிறார்களே! துன்பம் என்பதே அவர்களுக்கு இல்லையா என்று கேட்கலாம். நாத்திகவாதி தான் எந்நேரமும் இறைவனின் நினைப்பில் இருக்கிறான். சிவன் இல்லை, நாராயணன் இல்லை, முருகன் இல்லை, பிள்ளையார் இல்லை என்று அநேகமாக தினமும் எல்லாக்கடவுள்களின் பெயரையும் பலமுறை உச்சரித்து விடுகிறான். இல்லை என்று சொல்பவனும் தன் பெயரை உச்சரித்ததால் பலனைக் கொடுத்து விடுவார் பகவான். அதனால் தானோ என்னவோ. நாத்திகர்கள் அதிகமாகப் பாதிக்கப்படுவதில்லை போலும்! சனீஸ்வரர் ஒருவனை அண்டிவிட்டால் போதும். கணவன், மனைவியைப் பிரிப்பார், சகோதரர்களைப் பிரிப்பார்...இப்படி பலவகை பிரிவினைகளை உருவாக்குவார்.

நளதமயந்தி அவர்களாகப் பிரியமாட்டார்கள் என்று! ஏனெனில், ஒருவர் மேல் ஒருவர் அவர்கள் மிகுந்த அன்பு கொண்டிருந்தனர். நளன் பிரிந்தால் தமயந்தி இறந்து போவாள். தமயந்தி பிரிந்தால் நளனின் உடலில் உடல் இருக்காது. இதனால் தான் ஏழரைச்சனி காலத்தில் உயிர்போகாது என்பார்கள். உயிரே போகுமளவு துன்பம் வருமே தவிர உயிரை அவர் அந்த சமயத்தில் பறிப்பதில்லை. தம்பதியரை பிரிக்கமுடியாது என்பதால், நளனுடைய அண்ணன் புட்கரன் என்பவன் மூலமாக துன்பம் கொடுக்க திட்டம்வகுத்தார் சனீஸ்வரர். இதற்காக அவனது நட்பையும் நாடிப்பெற்றார். புட்கரன் நெய்தல் நாட்டின் அரசனாக இருந்தான். அவனுக்கு ஆசை காட்டினார் சனீஸ்வரர்.புட்கரா! நீ உன் நாடு மட்டும் உனக்குப் போதுமென நினைக்கிறாய். உன்னிடம் அக்கறை கொண்ட நானோ, செல்வச்செழிப்பு மிக்க நிடதநாடும் உன்னிடம் இருந்தால் நல்லது என்று! அந்த நாட்டின் வளமனைத்தையும் எண்ணிப்பார். உன் நாட்டில் ஏற்கனவே உள்ள வளத்தையும் கணக்கிட்டுக் கொள். இரண்டையும் சேர்த்துக் கூட்டு. ஆஹா...பொருள் வளத்தில் உன்னை மிஞ்சும் மன்னர்கள் யாரும் உலகில் இருக்கமாட்டார்கள். எனவே, நிடதநாட்டை உன்னுடன் சேர்த்துக் கொள்ளேன், என்றார்.புட்கரன் சிரித்தார். சனீஸ்வரரே! நிடதநாட்டைக் கைப்பற்றுவதென்பது அவ்வளவு சுலபமா? என் சகோதரன் நளனின் படை வலிமை வாய்ந்தது. அவனை வெற்றிகொள்வது அத்தனை சுலபமல்ல. அவனிடம் வம்பிழுத்து இருப்பதையும் இழந்து விடக்கூடாதே! என்றான் சற்று அச்சத்துடன். புட்கரா! அப்படியெல்லாம் நான் விடுவேனா? கத்தியின்றி ரத்தமின்றி அவனதுதேசம் உனதாக ஒரு வழி சொல்கிறேன். சரியா? என்ற சனீஸ்வரரிடம், அது என்ன? என்று ஆவலுடன் கேட்டான் புட்கரன்.

புட்கரா! சூதாட்டம் மன்னர்களுக்கே உரித்தான இனிய பொழுதுபோக்கு. ஆம்...யாராவது ஒருவருக்கு...ஏனெனில், இதில் ஒருவர் தன் பொருளை இழந்து விடுவாரே! நளனைப் பற்றுவதற்கு நான் மிகுந்த சிரமப்பட்டேன். இப்போது, பற்றி விட்டேன். இனி அவனை என் இஷ்டத்திற்கு ஆட்டி வைப்பேன். அவனுடைய புத்தியை கெடுக்க வேண்டியது என் பொறுப்பு. நீ நளனுடன் சூதாடு. வெற்றி உன் பக்கமாக இருக்கும்படி செய்து விடுகிறேன், என்றார் சனீஸ்வரர். புட்கரனுக்கு ஆனந்தம் தாங்க முடியவில்லை. சூதாட்டத்தில் ஒருவேளை தனக்கும் தோல்வி வரக்கூடும் என்ற எண்ணமிருந்தாலும், சனீஸ்வரரே உறுதியளித்து விட்டதால் வெற்றிபெற்று, நாட்டை தனக்கே சொந்தமாக்கிக் கொள்ளலாம் என்று கணக்குப் போட்டுவிட்டான். சனீஸ்வரரிடம் அனுமதி பெற்று, நெய்தல் நாட்டில் இருந்து தனது காளை வாகனத்தில் ஏறி புட்கரன் நிடதநாடு நோக்கிச் சென்றான். திடீரென அண்ணன் முன்னறிவிப்பின்றி வந்தது கண்ட நளன், அண்ணா! திடீரென வந்துள்ளாயே! ஏனோ! என்று கேட்டான். நளனே! நான் உன்னோடு சூதாடுவதற்காகவே இங்கு வந்துள்ளேன். உனக்கு அதில் ஆர்வமில்லாமலா இருக்கும்! மன்னர்களுக்கே உரித்தான விளையாட்டு தானே இது! கொஞ்சம்புத்தி வேண்டும். புத்தியில்லாதவர்களுக்கு மட்டும் இது ஒத்துப்போகாது. நீ தான் மகாபுத்திசாலியாயிற்றே! என்று சற்று பொடி வைத்துப் பேசினான். ஒருவேளை நளன் மறுத்தால், அவனைப் புத்தி கெட்டவன் என்று சொல்லலாமே என்பது புட்கரன் போட்ட கணக்கு. அவனது கணக்கு தப்பவும் இல்லை. சரி அண்ணா! அதற்கென்ன! விளையாடி விட்டால் போகிறது, என்று ஒப்புதல் அளித்து விட்டான்.

இதைக் கேட்ட அமைச்சர்கள் அதிர்ச்சியடைந்தார்கள். ராஜாவுக்கு ஏன் இப்படி புத்தி போயிற்று? இந்த புட்கரன் கொடிய எண்ணத்துடன் வந்துள்ளான் என்பதை நளமகாராஜா புரிந்து கொள்ளவில்லையே! ஐயோ! இந்த தேசத்தைக் காப்பாற்றுவது நம் கடமை. மன்னன் தவறு செய்யும் போது, அமைச்சர்கள் இடித்துரைக்க வேண்டும் என்ற விதியின் அடிப்படையில் நாம் மன்னனுக்கு புத்தி சொல்வோம், என்று முதலமைச்சர் மற்ற மந்திரிகளிடம் கூறினார்.அவர்கள் நளனை அணுகினர்.மகாராஜா! தாங்கள் அறியாதது ஏதுமில்லை. இருப்பினும், தாங்கள் புட்கரனுடன் சூதாடுவது கொஞ்சமும் சரியில்லாதது. இந்த உலகத்தில் ஐந்து செயல்களை மிகமிகக் கொடிதானது என்றும், உயிரையும் மானத்தையும் அழித்து விடக்கூடியது என்றும் பெரியவர்கள் சொல்லி வைத்திருக்கிறார்கள். அடுத்தவன் மனைவியை விரும்புவது, பொய் சொல்வது, மது அருந்துவது, ஒருவன் இன்னொருவனுக்கு செய்கிற உதவியைக் கெடுப்பது..குறிப்பாக, ஒருவனுக்கு பணஉதவி செய்வதைத் தடுப்பது, சூதாடுவது ஆகியவையே அந்த பஞ்சமா பாதகச் செயல்கள். நீங்கள் சூதாட ஒப்புதல் அளித்தது எங்களை மிரளச் செய்திருக்கிறது. ஏதாவது, காரணம் சொல்லி அதை நிறுத்தி விடுங்கள். வேண்டாம் மன்னவரே! உங்களையும், தங்கள் அன்புத்துணைவியாரையும், மக்களையும் காக்க எங்கள் வார்த்தைக்கு மதிப்பளியுங்கள், என்றனர். ஒருவன் நல்லவனாக இருந்தாலும், அவனுக்கு கெட்ட நேரம் வந்துவிட்டால், யார் என்ன சொன்னாலும் கேட்கமாட்டான். அது மட்டுமல்ல! புத்தி சொன்னவர்களுக்கும் தொல்லை செய்யத் தொடங்கி விடுவான். நளன் புத்தியைக் கெடுப்பது சனீஸ்வரன் இல்லையா! அவனுக்கு இந்த புத்திமதி ஏறுமா? அமைச்சர்களின் சொல்லை அவன் கேட்க மறுத்து விட்டான். இதைத்தான் இவன் தலையில் சனி ஏறி நின்று நடனமாடுகிறான் என்று வேடிக்கையாகக் குறிப்பிடுவார்கள்.

அமைச்சர்கள் அவனது அமைதியைக் கண்டு பயந்து அவனுக்கு இன்னொரு முறை அறிவுரை சொன்னார்கள்.மகாராஜா! சூதாட்டம் ஒரு மனிதனின் குணத்தையும் உருவத்தையும் மாற்றி விடும். இதில் தங்கள் சொத்து சுகத்தை இழந்தவர்கள் வறுமையால் தோல் சுருங்கி, அடையாளமே தெரியாமல் போய்விடுவார்கள். இது ஒருவனின் குலப்பெருமையை அழித்து விடும். பணம் போய்விட்டால் தர்மசிந்தனை குலைந்து விடும். சமுதாயத்தில், ஏழை, எளியவர்கள், வாழத்தகுதியற்றவர்கள் கூட மானம் போகிற மாதிரி பேசுவார்கள். இதுவரை உறவுக்காரர்களாக இருப்பவர்கள், நம் செல்வமின்மை கண்டு ஓடி ஒளிந்து கொள்வார்கள். அவர்களிடையே உள்ள நல்லுறவு அழிந்து விடும். அதுமட்டுமல்ல அரசே! பகடைக்காயை கையில் எடுப்பவர்களும், விலைமாதர்களிடம் சுகம் தேடி அலைபவர்களும் வஞ்சக எண்ணங்களுக்கு இடம் கொடுப்பார்கள் என்று நம் முன்னோர் எழுதி வைத்துள்ளனர். நாங்கள் சொல்வதை நீங்கள் சிந்தித்துப் பாருங்கள், என்றனர். நளனுக்கோ இவர்கள் சொன்னதைக் கேட்டு ஆத்திரம் அதிகமானது. அமைச்சர்களே! உங்கள் புத்திமதி எனக்குத் தேவையில்லை. நான் புட்கரனுடன் சூதாடுவதாக ஒப்புதல் அளித்துவிட்டேன். இப்போது வேண்டாம் என்றால் மட்டும், என் மானம் மரியாதை போகாதா? நடக்கப் போவது நல்லதோ, கெட்டதோ அதை ஏற்க நான் தயாராக இருக்கிறேன். நீங்கள் யாரும் எனக்கு எதுவும் சொல்ல வேண்டாம், செல்லுங்கள் இங்கிருந்து! என்று கோபமாகக் கத்தினான்.விதியை மாற்ற யாரால் இயலும் என்ற அமைச்சர்கள் அங்கிருந்து கிளம்பிவிட்டனர்.உண்மை தான்! ஒரு சமயம் அந்த பெருமாளையே விதி விரட்டியடித்ததாம். அது என்ன?

பெருமாளுக்கும் பூமாதேவிக்கும் திருமணம் ஆயிற்று. அவரதுமுதல் மனைவி பூமா தான். புதிதாக திருமணமானவர்களை விருந்துக்கு அழைப்பது நமது கலாசாரம். புதுமணத்தம்பதிகளைசிவபார்வதி கைலாயத்துக்கு விருந்துக்கு அழைத்தனர். பெருமாள் புறப்பட்டு விட்டார். பூமாதேவி வர மறுத்துவிட்டாள். அன்பரே! தங்களோடு நான் வந்துவிட்டால், இந்த பூலோகத்திலுள்ள பொருட்களெல்லாம் எங்கு போய் இருக்கும்? எனக்கு இன்னொரு பெயர் அசலா (இருந்த இடத்தை விட்டு நகராதவள்) என்பதை தாங்கள் அறிவீர்களா! நான் நகர்ந்தால் பூகம்பம் அல்லவா ஏற்படும். மக்கள் என்னாவார்கள்? என் பிள்ளைகளை நானே அழிப்பேனா? மேலும், நீங்கள் ஓரிடத்தில் இருக்கமாட்டீர்கள். திடீர் திடீரென எங்காவது செல்வீர்கள்? அப்போதெல்லாம் நான் உங்களுடன் வந்து கொண்டிருக்க முடியுமா? நீங்கள் மட்டும் போய் வாருங்கள், என்றாள். பெருமாளுக்கு வருத்தம். கட்டிய மனைவியோடு, வெளியில் போய்க் கூட வரமுடிய வில்லையே என்று. மேலும், போகும் இடங்களில் பெருமாளைப் பார்ப்பவர்கள் எல்லாம், ஆத்துக்காரி வரலையா? என்று கேட்டார்கள். பெருமாளுக்கு என்ன பதில் சொல்வதென தெரியாமல் சங்கடப்பட்டார். எனவே, இரண்டாம் திருமணம் செய்வோமே என்று சமுத்திரராஜன் பெண்ணான லட்சுமியை மணந்து கொண்டார். அவளோ ஓரிடத்தில் இருக்கமாட்டாள். ஒரு வீட்டில் ஒருநாள் இருந்தால், மறுநாள் இன்னொரு வீட்டுக்குப் போய்விடுவாள். செல்வத்தின் அதிபதியல்லவா! நிலையில்லாமல் ஓடிக்கொண்டேயிருந்தாள். பெருமாள் அவளை அழைக்கச் செல்லும் நேரம், அவள் எங்காவது போயிருக்கிறாள் என்றே பதில் கிடைக்கும். பெருமாள் லட்சுமியுடன் சேர்ந்து ஓடி ஓடி, அவளது வேகத்துக்கு ஈடுகொடுக்க முடியாமல் நின்றுவிட்டார்.

பிறகு தன் மகன் மன்மதன் வீட்டுக்குச் சென்று அங்கே தங்கலாம் என்று சென்றார். செல்லும் வழியில் ஒரு முனிவர் பார்த்தார். உமது மகன் செய்த வேலையைப் பார்த்தீரா! அந்த பரமசிவனிடம் போய் அவர் மேல் அம்பு விட்டிருக்கிறான். அவர் கோபத்தில் நெற்றிக் கண்ணைத் திறந்திருக்கிறார். பஸ்பமாகி விட்டான், என்று சொன்னதும், மகன் இறந்த துக்கம் தாளாமல் தவித்தார் அவர். மீண்டும் பாற்கடல் வந்த அவர், ஆறுதலாக ஆதிசேஷன் மீது படுத்தார். அவனோ விஷக்காற்றை வெளியிட்டபடியே இருந்தான். சற்று வெளியே போய்வரலாம் என கருடன் மீது ஏறி அமர்ந்தார். பூரி என்ற ஊரின் மேலாக பறக்கும் போது, பூமியில் ஒரு பாம்பு ஊர்ந்து செல்வதைப் பார்த்த கருடன், சுவாமி! எனக்கு நாவில் எச்சில் ஊறுகிறது. இதோ! என் உணவான பாம்பு செல்கிறது. அதைப் பிடிக்கப் போகிறேன், என நுடுவழியில் அவரை இறக்கிவிட்டுச் சென்று விட்டான். தன்னைக் கவனிக்க யாருமே இல்லாததால், பகவான் ஒரு கட்டையாக தன்னை மாற்றிக்கொண்டு அங்கேயே தங்கிவிட்டார். இதனால் தான் பூரி கோயிலில், பெருமாள் கம்பு வடிவில் இருக்கிறார். பார்த்தீர்களா! அனுபவிக்க வேண்டுமென்ற விதியிருந்தால், பகவானாக இருந்தாலும் அதை அனுபவித்தே ஆக வேண்டும். நளமகாராஜாவுக்கும் கஷ்டங்களை அனுபவிக்க வேண்டுமென்றல்லவா விதி இருக்கிறது! அதை மாற்ற யாரால் இயலும்? புட்கரனும் அவனும் ஓரிடத்தில் அமர்ந்தனர். தம்பி நளனே! உன் தேசத்தில் மாடுகளைக் கூட உழவர்கள் கூட கரும்புகள் கொண்டு மேய்க்கின்றனர். உன் தேசத்து கடலில் பிரகாசமான முத்துக்கள் நிரம்பக் கிடைக்கின்றன. இத்தகைய செல்வவளம் மிக்க நீ, மிகப்பெரிய பொருள் ஒன்றைத் தான் பந்தயப் பொருளாக வைப்பாய் என நினைக்கிறேன். பொருளை முடிவு செய்து விட்டு, பந்தயத்தைத் துவக்குவோம், என்றான்.

அண்ணா! ஒவ்வொரு பொருளாக வைப்போம். வெற்றி பெற்றவர் எடுத்துக் கொள்வோம், என்ற நளன், முதலில் தன் கழுத்தில் கிடந்த தங்க மணிமாலையை பந்தயத்தில் வைத்தான். புட்கரன் தான் ஏறி வந்த எருதை பந்தயப்பொருளாக வைத்தான். அந்த எருதை யாராலும் அடக்க முடியாது. எதிர்ப்போரைக் கொன்று விடும். அப்படிப்பட்ட பலமிக்க எருது தனக்கு கிடைத்தால், தன்னைப் பாதுகாத்துக் கொள்ள அது உதவுமென நளன்நம்பினான்.பகடைக்காய் உருள ஆரம்பித்தது. முதல் உருளலிலேயே சனீஸ்வரன் தன் வேலையைக் காட்டிவிட்டார். காய்கள் புட்கரனின் சொல்லைக் கேட்டன. அவன் முத்துமாலையை வென்றான்.நளனே! நீ இழந்தது மிகச்சாதாரணமான பொருள். உம்...பெரிய பொருள் ஒன்றை வை. நானும் அதையே வைக்கிறேன், என்றான் புட்கரன். நளன் இரண்டு லட்சம் பொற்காசுகளை பந்தயப்பொருளாக வைத்தான். புட்கரனும் அதே அளவு ஒரு பையில் கட்டி வைத்தான். நளனும் புட்கரனும் அடுத்தடுத்து காயை உருட்டினர். நான்கு லட்சம் பொன்னும் போய்விட்டது புட்கரனுக்கு.நளனுக்கு கோபம் தலைக்கேறியது. கெட்டதைச் செய்யும் போது மனிதனுக்கு நிதானம் தவறுவது இயற்கை. உணர்ச்சிப்பிழம்பாக இருந்த நளன், தான் விட்ட நான்கு லட்சம் பொன்னையும், மணிமாலையையும் திரும்பப் பெறும் வகையில், புட்கரனே! நான் கோடி தங்கக்காசுகளை பந்தயப்பொருளாக வைக்கிறேன். நீ தயாரா? என்றான் ஆவேசமாக. புட்கரன் சற்று கேலியான தொனியுடன், நளனே! இதைத்தானே நான் முதலிலேயே சொன்னேன். நீ ஏதோ குழந்தை விளையாட்டு போல முத்துமாலை, இரண்டு லட்சம் என பந்தயப்பொருளை வைத்தாய். நானும் ஒரு கோடி வைக்கிறேன். பகடை உன் கைகளுக்கு பணிந்து நடந்தால், இப்போதே இரண்டு கோடி பொற்காசுகளுக்கு அதிபதியாகி விடுவாய். ஏற்கனவே நீ செல்வன், செல்வர்களைத் தேடித்தான் செல்வம் வரும். நானும் கோடி பொற்காசுகள் வைக்கத் தயார், என்றவன், பொன்மூடைகளை அடுக்கும்படி ஏவலர்களுக்கு கட்டளையிட்டான். பகடைகள் உருண்டன.

விதி தான் நளனைப் போட்டுப் பார்க்க வேண்டுமென முடிவு செய்து விட்டதே! அதிலும் சனீஸ்வரர் ரூபத்தில் அல்லவா வந்துள்ளது! இந்த சனீஸ்வரர் போல் உத்தமமான கிரகம் உலகில் இல்லை. அதனால் தான் அதற்கு ஈஸ்வரன் பட்டம் கொடுத்து,கடவுள் நிலைக்குக் கொண்டு சென்றிருக்கிறோம். எல்லா கிரகங்களும் நவக்கிரக மண்டபத்தில் இருந்தாலும், சனீஸ்வரருக்கு மட்டுமே கோயில்களில் தனி சன்னதி இருக்கிறது.குரு இருக்கிறாரே என சிலர் கேட்கலாம். அவர் குரு அல்ல. சனகாதி முனிவர்களுக்கும், பார்வதிதேவிக்கும் உபதேசம் செய்த தட்சிணாமூர்த்தியையே குரு என்று சொல்லும் வழக்கம் வந்துள்ளது. அவர் கிரகம் அல்ல. தேவர்களின் குருவான பிரகஸ்பதி. அவர் சிவாம்சம்.உயிர்கள் பிறக்கின்றன. புழுவாக, பூச்சியாக, மிருகமாக, பறவையாக... இப்படி பல வகை. இவற்றால் பிறவியில் இருந்து உய்வடைய முடியாது. இவை இறந்து போனால் மீண்டும் ஏதோ ஒரு பிறப்பெடுக்கும். மனிதப்பிறவி ஒன்றே மகத்தான பிறவி, இதற்கு மட்டுமே ஆறறிவு இருக்கிறது. இந்த ஆறாவது அறிவைப் பயன்படுத்தி, இறைவனை மீண்டும் அடைய வேண்டும் என்று சிந்திக்க வேண்டும். இறைவனை அடைய வேண்டுமானால் தவமிருக்க வேண்டும். தவம் என்றால் மூச்சடக்கி, பேச்சடக்கி, அக்னியில் நின்று முனிவர்கள் செய்த தவம் போன்றதல்ல இது! யார் ஒருவன் நல்லதைச் செய்கிறானோ அவனே தபஸ்வி, என்பார் சுவாமி விவேகானந்தர். பல மகான்களும்இதை ஒப்புக்கொள்கிறார்கள்.பூமியில் பிறந்தவன் நல்லதையே சிந்திக்க வேண்டும், நல்லதையே நினைக்க வேண்டும். ஒரு புட்கரன் வந்தான். நளனை உசுப்பி விட்டான். சூதாட அழைத்தான். நளனுக்கு எங்கே புத்தி போயிற்று? ஆண்டவன் கொடுத்த புத்தியை அவன் பயன்படுத்தியிருக்க வேண்டாமா? உனக்கு நாடு வேண்டுமானால் என்னோடு போரிடு. நீ வீரனாக இருந்தால் என்னை வெற்றி கொள். நாட்டை எடுத்துக்கொள்! என்றல்லவா சொல்லியிருக்க வேண்டும்.

இதுதானே மன்னனுக்குரிய தர்மம்! ஆனால், புத்தி கெட்ட இவனும் சூதாட ஒப்புக் கொண்டான். இப்படி பகுத்தறிவைப் பயன்படுத்தாத எந்த ஜீவனையும் இறைவன் தண்டித்தே தீருவான். அதற்காக, அவன் தன் சார்பில் நியமித்த பிரதிநிதி தான் சனீஸ்வரன். இரண்டு லட்சம் பொன்னையும் தோற்றான் நளன். சூதாட்டம் வெறிபிடித்த ஒரு விளையாட்டு. நகைகள், இரண்டு லட்சத்தை இழந்தாயிற்று! இதோடு எழுந்து போவோம் என்று போயிருக்க வேண்டும்! அவன் போகவில்லை. போகவும் முடியாது, ஏனெனில், சூதாட்டத்தில் ஜெயித்தவன், தோற்றவனை ஏளனமாகப் பார்ப்பான். கேவலமாகப் பேசுவான். இந்த வெறியுடன் தோற்றவன் தன்னிடமுள்ள மற்ற பொருட்களையும் பணயம் வைப்பான். மீண்டும் தோற்று ஒன்றுமில்லாமல் தெருவுக்கு வருவான். நளமகாராஜா புத்தி பேதலித்து கோடி பொன்னை பணயமாக வைத்தான். அவனது கஜானா இருப்பே அவ்வளவு தான்! பகடையின் உருளலில் ஒட்டுமொத்தமாக எல்லாவற்றையும் இழந்தான். ஒரு நிமிடத்துக்கு முன்னால், அவன் பேரரசன். இப்போது பிச்சைக்காரன். இந்த லட்சுமி இருக்கிறாளே! இவள் ஓரிடத்தில் நிலைக்கமாட்டாள். அவளுக்கு அசலா என்று ஒரு பெயருண்டு. அதாவது ஓடிக்கொண்டே இருப்பவள் என்று பொருள். நேற்று வரை நளனின் கஜானாவில் தன்னைச் சிறைப்படுத்திக் கொண்டு கிடந்தவள் இன்று புட்கரன் வீட்டுக்குப் போய்விட்டாள். நல்லவன் ஒருவன் கெட்டுப்போகிறான் என்றால், லட்சுமி தாயாரால் தாங்க முடியாது. அவள் கெட்டவன் வீட்டுக்குப் போய்விடுவாள். அப்படியானால் தானே நல்லவன் நல்லவனாக இருப்பான்! இவ்வளவு அயோக்கியத்தனம் செய்கிறான், இவன் வீட்டில் செல்வம் கொட்டிக்கிடக்கிறதே என்று நாமே கூட பல சமயங்களில் சில பணக்காரர்களைப் பற்றி அங்கலாய்க்கிறோம். இப்படிப்பட்டவர்களை மேலும் அழிக்கவும், அவர்கள் மனதில் நிம்மதியில்லாமல் செய்யவுமே லட்சுமி தாய் தன் ஓட்டப்பந்தயத்தை நிறுத்தாமல் ஓடிக்கொண்டே இருக்கிறாள் என்பது தான் நிஜம். எனவே, பணக்காரனாக இல்லையே என்று வருத்தப்படத் தேவையில்லை.

இவ்வுலகில் பொருளில்லாதவர் அவ்வுலகில் அருளைப் பெறுமளவிலான நிலைமை நிச்சயம் ஏற்படும்.மனிதனுக்கு புத்தி கெட்டு விட்டால். அவன் என்ன வேண்டுமானாலும் செய்வான். புட்கரன் நளனுக்கு ஆசை காட்டினான். தம்பி! பொற்காசுகள் போனால் என்ன! உன்னிடம் தேர்ப்படை, குதிரைப்படை எல்லாம் உள்ளதே! தேர் என்றால் சாதாரணத் தேரா அது! பத்துலட்சம் நவரத்தினங்களால் அவற்றை அலங்கரித்துள்ளாயாமே! அந்த தேர்கள்...இதோ, நீ இழந்த பணத்துக்கு சமம். அவற்றை வைத்து ஆடு! ஜெயித்தால், இங்கே இருக்கும் அத்தனையையும்...என் பொருட்களையும் சேர்த்து கூட எடுத்துக் கொள், என்றான்.சனீஸ்வரனே துணையிருக்கும் போது அவன் என்ன வேண்டுமானாலும் பேசத்தானே செய்வான்... உம்...அவனுக்கு பொங்குசனி காலம்! பேசுகிறான்... இதையறியாத நளன், அந்தக் கெட்டவன் சொன்னதை அப்படியே கேட்டான். பகடையை மிக மிக மிக கவனமாகத்தான் உருட்டினான்.அதுவும் சரியாகத்தான் உருண்டது...இவன் நான்கு என்ற எண்ணைச் சொல்லி உருட்ட, ஒரு பக்க பகடையில் இரண்டு புள்ளிகள்...அடுத்த கட்டையில் இரண்டு விழுந்து படீரென இன்னொரு சுற்று சுற்றியது...மூன்றாகிப் போய் விட்டது. அவ்வளவு தான்! அவ்வளவையும் தன் பெயரில் எழுதி வாங்கிக் கொண்டான் புட்கரன். அடுத்து யானைப்படை பறிபோயிற்று. அடுத்து காலாட்படையை தோற்றான். வக்கிரபுத்தி படைத்த புட்கரன், நளனே! இப்போது ஒன்றைக் கேட்கிறேன். உன் அரண்மனையில் அழகான பெண்கள் சேடிகளாக (பணிப்பெண்கள்) இருக்கின்றனர். அவர்களை வைத்து ஆடேன். நீ வென்று விட்டால், அவர்களுக்கு நிகராக தோற்ற அனைத்தையும் தந்து விடுகிறேன், என்றான்.

சூதாட்ட வெறி கண்ணை மறைக்க, தன்னிடம் இதுவரை பணிசெய்த பெண்கள் என்று கூட பாராமல், அவர்களையும் வைத்து சூதாட முன்வந்தான் நளன். வழக்கம் போல் பகடை உருள, அவர்களையும் புட்கரனிடம் இழந்து விட்டான் நளன்.நளனின் எல்லாப் பொருட்களும் போய்விட்டன. ஆம்...நாடே போய்விட்டது. அசையாப் பொருள்களுடன் அரண்மனையில் அசைந்தாடிய பெண்களும் பறி போனார்கள். இனி அவர்கள் புட்கரனின் பணியாட்களாக இருப்பார்கள். விளையாட என்ன இருக்கிறது? நளன் திகைத்துப் போய் எழுந்தான். நளனே! ஏன் எழுந்திருக்கிறாய்? கையில் வெண்ணெய் இருக்கிறது. நெய்க்கு அலையலாமா? இன்னும் ஒரு முக்கியப்பொருள் உன்னிடம் இருக்கிறது. அந்தப் பொருள், இங்கே நீ என்னிடம் தோற்ற அத்தனைக்கும் சமம். அந்தப் பொருளை வைத்து நீ விளையாடு. அவ்வாறு விளையாடி ஜெயித்தால், உன் தேசத்தை உன்னிடமே தந்து விட்டு, அப்படியே திரும்பி விடுகிறேன். என்ன விளையாடலாமா? என்றான். தன்னிடம் அப்படி எந்தப் பொருளும் இல்லாதபோது, இவன் எதைப் பற்றிச் சொல்கிறான் என நளன் விழித்தான்.புட்கரன் அட்டகாசமாக சிரித்தான். என்னப்பா இது! ஒரு கணவனுக்கு துயரம் வந்தால் மனைவி என்ன செய்வாள்? அதைத் துடைக்க முயல் வாள். உன்னிடம் ஒரு அழகுப்புயல் இருக்கிறதே! தேவர்கள் கூட அவளை அடைய முயன்று தோற்றார்களே! கருவிழிகள், மயங்க வைக்கும் பார்வை, தாமரைப் பாதங்கள், குறுகிய இடை... என்று இழுத்ததும், சே...பொருளை ஒருவன் இழந்து மதிப்பு மரியாதையின்றி நின்றால், அவனது மனைவிக்கல்லவா முதல் சோதனை வருகிறது.

எந்தத் தகுதியும் இல்லாத இவன், தன் தம்பியின் மனைவி என்று கூட பாராமல், அவளை வைத்து சூதாடச் சொல்கிறானே! இவன் ஒரு மனிதனா? என்று எண்ணி, அதே நேரம் ஏதும் பேச இயலாமல், இனி இந்தக் கொடிய சூதாட்டம் வேண்டாம். போதும், அதுதான் எல்லாவற்றையும் பெற்றுக்கொண்டாயே! மகிழ்ச்சியாக இரு, என்று சொல்லிவிட்டு, அங்கிருந்து வேகமாகப் போய்விட்டான்.இந்தத் தொடரை ஆரம்பம் முதல் வாசிக்கும் வாசகர்களுக்குத் தெரியும். வியாச மகரிஷி, மனைவியையே வைத்து சூதாடித்தோற்ற தர்ம மகாராஜாவுக்கு நளனின் கதையைச் சொல்கிறார். நளன் என்பவன் எல்லாப் பொருட்களையும் தோற்றான். ஆனால், தன் மனைவியை மட்டும் வைத்து சூதாட மறுத்துவிட்டான். இழந்த பொருளை சம்பாதித்து விடலாம். ஆனால், மனைவியை சம்பாதிக்க முடியுமா? நளனைப் போல் இல்லாமல், நீ உன் மனைவியைத் தோற்றாயே! என்று தர்மனின் புத்தியில் உரைக்கும்படி சொன்ன கதையே நளபுராணம். அதையே நாம் தொடர்ந்து படித்துக் கொண்டிருக்கிறோம். தன் அன்பு மனைவி தமயந்தியிடம் சென்று நடந்ததைச் சொன்னான். கணவன் இப்படி பொறுப்பற்று நடந்து கொண்டால், இக்காலத்துப் பெண்கள் அவனை உண்டு, இல்லை என பண்ணி விடுவார்கள். ஆனால், அக்காலத்தில் அப்படியில்லை. தன் மணாளனுக்கு இப்படி ஒரு நிலை விதிவசத்தால் வந்ததே என தமயந்தியும் வருத்தப்பட்டாள். தமயந்தி! சூதாடி நாட்டை இழந்து விட்டேன். வா! நாம் வேறு ஊருக்குப் போய் பிழைத்துக் கொள்ளலாம், என்ன சொல்கிறாய்? என்றான். அவள் மறுப்பேதும் சொல்லவில்லை. வருகிறேன் அன்பே, எனச்சொல்லி அவனுடன் கிளம்பி விட்டாள். இதைத்தான் வினைப்பயன் என்பது! சிலர் புலம்புவார்கள்! நான் நல்லவன் தானே! எனக்குத் தெரிந்து யாருக்கும் இப்பிறவியில் எந்தப் பாவமும் செய்யவில்லையே! ஆனாலும், ஏன் எனக்கு சோதனை மேல் சோதனை வருகிறது என்று! நல்லவராக இருந்தாலும், முற்பிறவியில், நாம் யாருக்கு என்ன செய்கிறோமோ, அதன் பலனை இப்பிறவியில் அனுபவித்தே தீர வேண்டும். அதைத் தான் நளதமயந்தி இப்பிறவியில் அனுபவிப்பதாக எண்ணிக் கொண்டனர்.

நளமகாராஜா நாட்டைத் தோற்ற விஷயம் ஊருக்குள் பரவிவிட்டது. தங்கள் மன்னரை வஞ்சகமாக புட்கரன் ஏமாற்றிவிட்டானே என்று அவர்கள் புலம்பினர். மேலும், மன்னர் நாட்டை விட்டு அருகிலுள்ள காட்டுக்குச் செல்லப்போகிறார் என்ற விஷயமும் அவர்களுக்குத் தெரிய வரவே, அவர்கள் கண்ணீர் விட்டனர். நளதமயந்தி அரண்மனையை விட்டு வெளியேறி தெருவில் நடந்தனர்.பணமிருப்பவர்கள் ஆட்டம் போடக்கூடாது. ஏனெனில், திருமகள் ஒரே இடத்தில் நிலைத்திருப்பவள் அல்லள்! எங்கே ஒழுக்கம் தவறுகிறதோ, அந்த இடத்தை விட்டு அவள் வேகமாக வெளியேறி விடுவாள். அதுவே அவள் செல்வத்தில் திளைத்து அட்டகாசம் செய்பவர் களுக்கு வழங்கும் தண்டனை. நேற்று வரை ராஜா, ராணியாக இருந்தவர்கள், இன்று அவர்களால் ஆளப்பட்ட குடிமக்களையும் விட கேவலமான நிலைக்குப் போய்விட்டார்கள். அரண்மனை அறையில் இருந்து வாசல் வரை பல்லக்கிலும், வாசலில் இருந்து தேரிலும் பவனி வந்து, தங்கள் கால்களைத் தரைக்கே காட்டாதவர்கள், இன்று நடக்கிறார்கள்... நடக்கிறார்கள்..மக்கள் இதைப் பார்த்து கண்ணீர் பொங்க அழுதார்கள். மகாராஜா! எங்கள் தெய்வமே! வேலேந்தி பகைவர்களை விரட்டியடித்த வேந்தனே! உன் வெற்றிக்கொடி இந்த தேசத்தில் நேற்று வரை பறந்தது. எங்களை நல்ல முறையில் கவனித்துக் கொண்டவர் நீங்கள். உடனே காட்டுக்குப் போக வேண்டாம். எங்களுடன் இன்று ஒருநாளாவது தங்குங்கள், என வேண்டினர். எங்களை தொடர்ந்து ஆளுங்கள், என்று மக்கள் கேட்குமளவுக்கு ஒரு ஆட்சி இருக்க வேண்டும். நளனின் ஆட்சி அப்படித்தான் இருந்தது. மக்களின் வேண்டுதலை ஏற்கலாமா? நளன் தமயந்தியின் பக்கம் திரும்பி, மக்கள் நாம் இங்கு ஒருநாள் தங்க வேண்டுமென விரும்புகிறார்கள். நீ என்ன சொல்கிறாய்? என்றான்.

இன்றிரவு தங்கிப் போகலாமே, என்று தமயந்தி சொல்லவில்லை, ஆனால், அவளது பார்வையின் பொருள் நளனுக்கு அவ்வாறு இருந்ததால், அவனும் மக்களுடன் தங்கலாமே என எண்ணி, அவர்களிடம் ஒப்புதல் அளித்தான். நளனின் பின்னாலேயே வந்த ஒற்றர்கள் மக்களும், நளனும் இவ்வாறு பேசுவதைக் கேட்டு உடனடியாக புட்கரனுக்கு தகவல் தெரிவித்தனர். சற்றுநேரத்தில் முரசு ஒலித்தது. நிடதநாட்டு மக்களே! நளன் இந்த நாட்டின் ஆட்சி உரிமையை இழந்து விட்டார். அவருக்கு யாராவது அடைக்கலம் அளித்தாலோ, அவருடன் பேசினாலோ அந்த இடத்திலேயே கொல்லப்படுவார்கள். இனி உங்கள் ராஜா புட்கரன் தான். அவர் இடும் சட்டதிட்டங்களுக்கு நீங்கள் கட்டுப்பட்டாக வேண்டும். மீறுபவர்கள் மரணக்கயிற்றில் உங்களை நீங்களே மாட்டிக் கொள்ளத் தயாரானதாக அர்த்தம். இது மகாராஜா புட்கரனின் உத்தரவு...., என்று முரசு அறைவோன் சத்தமாக நீட்டி முழக்கினான். நளன் தனது நிலை குறித்து வருந்தினான். சூதாட்டம் என்ற கொடிய விளையாட்டில் இறங்கி, நாட்டை இழந்தோம், ஏதுமறியா அபலைப் பெண்ணான இந்த தமயந்தியின் கால்கள் பஞ்சுமெத்தையையும், மலர்ப்பாதையையும், சிவப்புக் கம்பளத்øயும் தவிர வேறு எதிலும் நடந்தறியாதவை. இப்போது அவளை கல்லும், மண்ணும், முள்ளும் குவிந்த பாதையில் நடக்க வைத்து புண்படுத்துகிறோமே! இப்போது ஊரில் கூட இருக்க இயலாத நிலை வந்துவிட்டதே! தனக்கு ஆதரவளிப்பவர்களையும் கொல்வேன் என புட்கரன் மிரட்டுகிறானே! தன்னால் தமயந்தியின் வாழ்வு இருளானது போதாதென்று, இந்த அப்பாவி ஜனங்களின் உயிரும் போக வேண்டுமா! ஐயோ! இதற்கு காரணம் இந்த சூதல்லவா! என்று தனக்குள் புலம்பினான். பொழுதுபோக்கு கிளப்கள் என்ற பெயரில் நடக்கும் சூதாட்ட கிளப்களுக்கு செல்பவர்கள் நளனின் நிலையை உணர வேண்டும். சூதாட்டத்தில் கில்லாடியான ஒரு புட்கரன் பல நளன்களை உருவாக்கி விடுவான்.

சூதாடுபவர் மட்டுமல்ல...அவன் மனைவி, மக்களும் நடுத்தெருவுக்கு வந்துவிடுவார்கள். மானம் போகும், ஏன்...உயிரே கூட போகும்! நளதமயந்திக்கு இரண்டு செல்லப் பிள்ளைகள் பிறந்தார் கள் அல்லவா! அந்த மகளையும், மகனையும் அழைத்துக் கொண்டு அவர்கள் நாட்டை விட்டு வெளியேறினர். ஊர் மக்கள் கண்ணீர் விட்டு கதறினர். ஒரு துக்கவீட்டில், இறந்தவரின் உறவினர்கள் எப்படி சோகத்துடன் இருப்பார்களோ, அந்தளவுக்கு துயரமடைந்தனர் மக்கள். இதையெல்லாம் விட மேலாக, பால் குடி மறவாத பச்சிளம் குழந்தைகள் கூட, அன்று தங்கள் தாயிடம் பால் குடிக்க மறுத்து, சோர்ந்திருந்தன. நளன் வீதியில் நடக்க ஆரம்பித்தான். தமயந்தியின் பஞ்சுப்பாதங்கள் நஞ்சில் தோய்த்த கத்தியில் மிதித்தது போல் தடுமாற ஆரம்பித்தது. குழந்தைகளின் பிஞ்சுப்பாதங்களோ இதையும் விட அதிகமாக தள்ளாடின. அம்மா...அப்பா என அவர்கள் அழுதபடியே நடந்தனர். இந்த இடத்தில் ஒன்றை நாம் உணர்ந்து கொள்ள வேண்டும். நமக்கு என்னதான் ஆண்டவன் வசதியான வாழ்க்கையைக் கொடுத்திருந்தாலும், குழந்தைளுக்கு கஷ்டநஷ்டத்தைப் பற்றிய அறிவையும் ஊட்டி வளர்க்க வேண்டும். காலையில் நூடுல்ஸ், பூரி மசாலா, மல்லிகைப்பூ இட்லி, மணக்கும் சாம்பார் என விதவிதமாக குழந்தைகளுக்கு சமைத்துக் கொடுத்தாலும் கூட, பழைய சாதம் என்ற ஒன்று இப்படி இருக்கும் என்பதையும், கிராமத்து ஏழைக் குழந்தைகள் அதைச் சாப்பிட்டு விட்டு தான் பள்ளிக்கு கிளம்புகிறார்கள் என்பதையும் சொல்லித் தர வேண்டும், எதற்கெடுத்தாலும் கார், பஸ், ஆட்டோ என கிளம்பாமல், நடக்கவும் சொல்லித் தர வேண்டும். வாழ்வில் யாருக்கும் எப்போதும் ஏற்ற இறக்கம் வரலாம். அதைச் சமாளிப்பது பற்றிய அறிவு நம் பிள்ளைகளுக்கு இருக்க வேண்டும். வீட்டுக்குள்ளேயே இருந்த வரை புத்தருக்கு ஒன்றும் தெரியாது. வெளியே வந்த பின் தானே மரணம், நோய் பற்றியெல்லாம் உணர்ந்தார்! அதுபோல நம் பிள்ளைகளை சுதந்திரமாக உலகநடப்புகள் பற்றி தெரிந்து கொள்ள அனுப்ப வேண்டும்.

நளனின் பிள்ளைகள் ராஜா வீட்டுப் பிள்ளைகள்! அவர்களுக்கு தெருமுனை எப்படி இருக்கும் என்று கூட தெரியாது! அப்படிப்பட்ட பிள்ளைகள் இன்று தெருவில் சிரமத்துடன் நடந்தனர். நீண்ட தூரம் நடந்து நாட்டின் எல்லையை அவர்கள் கடந்து விட்டார்கள். எங்கே போக வேண்டும் என்று நளனுக்குப் புரியவில்லை. குழந்தைகள் மிகவும் தளர்ந்து விட்டார்கள். தமயந்தியோ பல்லைக் கடித்துக் கொண்டு நடந்தாள்.அப்பா! நாம் எங்கே போகிறோம்? கடக்க வேண்டிய தூரம் முடிந்து விட்டதா? இன்னும் போக வேண்டுமா? என்று அழுதபடியே கேட்டாள் மகள். மகனோ, அம்மாவின் கால்களைக் கட்டிக்ககொண்டு, அம்மா! என்னால் நடக்கவே முடியவில்லை. எங்காவது அமர்வோமா! என கண்ணீருடன் கெஞ்சலாகக் கேட்டான். பன்னீர் தூவி வளர்த்த தன் குழந்தைகளின் கண்களில் கண்ணீரா! தமயந்தியின் கண்களிலும் தாரை தாரையாய் கண்ணீர் வழிந்தது. நளனுக்கு அவர்களின் துயரத்தைப் பார்க்கும் சக்தி இல்லவே இல்லை. வெட்கம் வேறு வாட்டி வதைத்தது! ஆம்...எதைத் தொடங்கினாலும், ஒரு மனிதனுக்கு முதலில் தன் மனைவி, பிள்ளைகளின் முகம் நினைவுக்கு வர வேண்டும்..இதைச் செய்தால் அவர்களுக்கு நன்மை விளையுமா! கேடு வந்துவிடுமா என்று ஆராய வேண்டும்.இதைச் செய்யாத எந்த மனிதனாக இருந்தாலும், தன் மனைவி, பிள்ளைகள் முகத்தில் கூட விழிக்க இயலாத நிலை ஏற்படும்! என்ன தான் சனி ஆட்டினாலும், சுயபுத்தி என்ற ஒன்று இருக்கிறதல்லவா! அந்த புத்தியை இறைவன் தந்திருக்கிறான் அல்லவா! அந்த இறைவனைப் பற்றிய நினைப்பு வந்திருந்தால், இந்த சனியால் ஏதாவது செய்திருக்க முடியுமா! காலம் கடந்த பின் நளன் வருந்துகிறான். வரும் முன்னர் தன்னைப் பாதுகாத்து கொள்ளாதவனின் வாழ்க்கை எரிந்து தானே போகும்! நளன் தமயந்தியிடம், அன்பே! இனியும் பிள்ளைகள் கதறுவதை என்னால் தாங்க முடியாது. அதனால், நீ பிள்ளைகளுடன் உன் தந்தை வீட்டுக்குப் போ, என்றான். இதுகேட்டு தமயந்தி அதிர்ந்துவிட்டாள்.

அவள் தன் கணவனை ஏறிட்டுப் பார்த்தாள். கண்களில் தாரை தாரையாகக் கண்ணீர் வழிந்தது.அன்பரே! நீங்களா இப்படி சொன்னீர்கள்! காதல் வயப்பட்டு நாம் கிடந்த காலத்தில், கடைசி வரை பிரியமாட்டோம் என உறுதியளித்தீர்களே! அது காதல் மோகத்தில் சொன்னது தானா? என் மனதைத் திடப்படுத்திக் கொண்டு சொல்கிறேன், கேளுங்கள். ஒரு பெண் குழந்தைகளை இழந்தால் மீண்டும் பெற்றுக் கொள்ளலாம். ஆனால், அவள் தன் கணவனை இழந்துவிட்டால் பாதுகாப்பற்ற நிலையை அடைவாள். அவளது கற்புக்கு களங்கம் கற்பிக்கப்படும், அல்லது பாதுகாப்பற்ற நிலை ஏற்படும். எனவே, எந்த ஒரு பெண்ணும் தன் கணவனை இழக்க சம்மதிக்கவே மாட்டாள், என்றாள்.தன் மனைவியின் உறுதியான மனநிலை கண்டு, அந்த துன்பமான சூழலிலும் நளன் உள்ளூர மகிழ்ந்தான். ஆனாலும், மற்றொரு உண்மையை அவன் அவளுக்கு எடுத்துச் சொன்னான்.தமயந்தி! உனக்குத் தெரியாததல்ல! இருப்பினும் சொல்கிறேன் கேளுங்கள். ஒருவன் மரணமடைந்து விட்டால், அவனுக்கு இறுதிச்சடங்கு செய்ய பிள்ளைகள் வேண்டும். அப்படியானால் தான் அவன் சொர்க்கத்தை அடைவான் என்று சாஸ்திரங்கள் சொல்கின்றன. நீ கேட்கலாம், புண்ணியம் செய்தால் சொர்க்கத்தை அடைய முடியாதா என்று! நிச்சயம் அது முடியாது. எந்த வித தவறும் செய்யாமலும், பிறருக்கு வஞ்சனை செய்யாமலும் இருப்பவராக இருந்தாலும் கூட, எவ்வளவு நல்லறிவு பெற்ற உயர்ந்தவரானாலும் கூட, நல்ல பிள்ளைகளைப் பெறாத பெற்றோருக்கு சொர்க்கம் கிடைக்காது, என்றவனை இடைமறித்த தமயந்தி, ஐயோ! என்ன சொல்கிறீர்கள்! நீங்களே எனது சொர்க்கம், நான் வாழும் போது சொர்க்கத்தைத் தேடுகிறேன். நீங்கள் வாழ்க்கையின் முடிவுக்கு பிறகுள்ள விஷயங்களைப் பேசுகிறீர்களே! என இடைமறித்தாள்.
நளன் அவளைத் தேற்றினான்.

அன்பே! எவ்வளவு தான் பணமிருந்தாலும் சரி! புகழின் உச்சத்தில் இருந்தாலும் சரி! இன்னும் இந்த உலகத்தில் எவ்வளவு நற்பெயர் பெற்றிருந்தாலும் சரி! ஒருவனுக்கு இவையெல்லாம் மகிழ்ச்சி தராது. சாதாரண தட்டில் சோறிட்டு, அதை தன் பிஞ்சுக்கரங்களால் அளைந்து சாப்பிடுமே குழந்தைகள்! அந்தக் குழந்தைகளின் செய்கையும், அவை குழலினும் இனியதாக மழலை பேசுமே! அந்தச் சொற்களுமே இவ்வுலக சொர்க்கத்தை மனிதனுக்கு அளிக்கின்றன. தமயந்தி! பல அறிஞர்களும், புலவர்களும் அரிய பல கருத்துக்களை பேசுவதை நீ கேட்டு மகிழ்ந்திருப்பாய். ஆனால், அவற்றையெல்லாம் விட, பால் குடித்து அது வழிந்தபடியே, நம் குழந்தைகள் பேசும் பேச்சு தானே காதுகளை குளிர வைக்கிறது! எனவே குழந்தைகள் தான் நமக்கு முக்கியம். அவர்களை அழைத்துக் கொண்டு உன் இல்லத்துக்குச் செல். தயவுசெய்து நான் சொல்வதைக் கேள், என தன் கருத்தில் விடாப்பிடியாக இருந்தான் நளன். பிள்ளைகளும், மனைவியும் இனியும் தன்னால் கஷ்டப்படக்கூடாது என்பதில் கவனமாக இருந்தான். இப்போது, தமயந்தி வேறுவிதமாக கிடுக்கிப்பிடி போட்டாள். என் தெய்வமே! அப்படியானால் ஒன்று செய்வோம். நீங்களும் எங்களுடன் என் தந்தை வீட்டுக்கு வாருங்கள். அங்கே, நாம் வாழத் தேவையான பொருள் உள்ளது. அவர் என் சிரமத்தைப் பொறுக்கமாட்டார். உதவி செய்வார். புறப்படுங்கள், என்றாள். நளன் இந்த இடத்தில் தான் தன் உறுதியான மனப்பான்மையைக் காட்டினான். இப்போதெல்லாம் ஒருவனுக்கு கஷ்டம் வந்துவிட்டால் போதும். மனைவியை தந்தை வீட்டுக்கு அனுப்பி ஏதாவது வாங்கி வாயேன், என கெஞ்சுகிறான். இன்னும் சிலர், அடியே! உன் அப்பன் சம்பாதிச்சு குவிச்சு வைச்சிருக்கான். அதிலே நமக்கு கொஞ்சம் கொடுத்தா குறைஞ்சா போயிடும்! போ! அந்த கல்லுளி மங்கனிடம் ஏதாச்சும் வாங்கிட்டு வா, என திட்டுகிறான்.

இன்னும் சிலர் மனைவியை அவர்களது வீட்டுக்கே அனுப்பி, இவ்வளவு தந்தால் தான் உனக்கு வாழ்க்கையே! இல்லாவிட்டால் விவாகரத்து, என மிரட்டி பணிய வைக்கிறான். நளமகாராஜா அப்படி செய்யவில்லை. என் அன்புச்செல்வமே! பைத்தியம் போல் பேசாதே! இந்த உலகத்தில் பணம் உள்ள வரையில் தான் ஒருவனுக்கு மதிப்பு! ஏதோ நோய் நொடி வந்தோ, பிள்ளைகளை கரை சேர்க்கவோ ஆகிய நியாயமான வழிகளில் பணத்தைக் கரைத்தவன் கூட, ஒருவனிடம் உதவி கேட்டுச் சென்றால், அவன் இவனைக் கண்டு கொள்ள மாட்டான்! நானோ, சூதாட்டத்தில் பணத்தைத் தொலைத்தவன். உன் தந்தையின் முன் நான் தலைகுனிந்து தானே உதவி கேட்க வேண்டியிருக்கும். ஒன்றை மட்டும் புரிந்து கொள்! பணமில்லாதவன், ஒரு செல்வந்தனிடம் போய், எனக்கு உதவு என்று கேட்டால், அவன் அவமானத்துக்கு ஆளாவான். அது அவனது புகழை அழிக்கும். தர்மத்தின் வேரை வெட்டி வீழ்த்தி விடும். அதுமட்டுமல்ல! அவனது குலப்பெருமையையும் அழித்து விடும், என்று உணர்ச்சிவசப்பட்டு பேசினான்.அப்போதும் தமயந்தி விடவில்லை. அன்பே! நாம் கஷ்டத்தில் அங்கு வந்திருக்கிறோம் என்பதைக் கூட யாருக்கும் தெரியாமல் செய்துவிடலாம். வாருங்கள், என்றாள்.என்னைக் கோழையாக்க பார்க்கிறாயா தமயந்தி. நான் அரசனாக இருந்தவன். உன் தந்தை எனக்கு மாமனார் என்பது இரண்டாம் பட்சம் தான். அவரும் ஒரு அரசர்! ஒரு அரசன், இன்னொரு அரசனிடம் உதவி கேட்பதா! சூதில் தோற்று, ஒன்றுமில்லாமல் நிற்கும் என்னை ஆண்மையற்றவன் என்றும் எண்ணி விட்டாயா? பிறரிடம் உதவி கேட்பவன் பைத்தியக்காரன் என்கிறார்கள் பெரியோர். அப்படியானால், நானும் பைத்தியக்காரனா? நளன் ஆவேசப்பட்டான். இவர்களுக்குள் வாதம் வலுத்தது.

தமயந்தி நளனிடம், தாங்கள் செங்கோல் ஏந்தி முறை தவறாத ஆட்சி நடத்தினீர்கள். அப்படிப்பட்ட தர்மவானான உங்களிடம் ஒரு யோசனை சொல்கிறேன். இதையாவது, தயவு செய்து கேளுங்கள். நாம் காட்டு வழியில் வரும் போது, நம்முடன் ஒரு பிராமணர் சேர்ந்து கொண்டார் அல்லவா! அவருடன் நம் குழந்தைகளை அனுப்பி குண்டினபுரத்திலுள்ள எங்கள் தந்தை வீட்டில் சேர்க்கச் சொல்லிவிடுவோம். பிள்ளைகள் கஷ்டப்படக்கூடாது என்பது தானே உங்கள் நோக்கம்! அது நிறைவேறி விடும். நான் உங்களைப் பின்தொடர்கிறேன். உங்களைப் பார்க்காமல் என்னால் இருக்க முடியாது, வாழவும் முடியாது. இந்த யோசனையை ஏற்பீர்களா? என்னைக் கைவிட்டு சென்று விடாதீர்கள், என தமயந்தி, கல்லும் கரையும் வண்ணம் அழுதாள். செல்லப்பெண்ணாய் இருந்து, காதலியாகி, மனைவியாகி மக்களையும் பெற்றுத்தந்த அந்த அபலையின் கதறல் நளனின் நெஞ்சை உருக்கியது. அதேநேரம், பிள்ளைகளைப் பிரிய வேண்டுமே என்ற எண்ணம் இதயத்தை மேலும் பிசைந்தது. தேவை தானா! இவ்வளவு கஷ்டங்களும். கெட்ட வழியில் செல்லும் ஒவ்வொரு ஆணும் நளனின் இந்த நிலையை எண்ணிப் பார்க்க வேண்டும். சம்பாதிப்பதை விட, அதை நல்ல வழியில் கட்டிக் காக்கலாம். கெட்ட வழிகளில் செலவழித்து தானும் அழிந்து, குடும்பத்தையும் அழிப்பதை விட, இருப்பதில் பாதியை தர்மம் செய்திருந்தால் கூட புண்ணியம் கிடைத்திருக்கும். எதையுமே செய்யாமல், புட்கரன் உசுப்பிவிட்டான் என்பதற்காக அறிவிழந்த நளன் போல, எந்த ஆண்மகனும் நடந்து கொள்ளக்கூடாது. கெட்ட வழிகளில் ஈடுபடும்படி நம்மை வலியுறுத்தும் உறவுகள் மற்றும் நட்பிடமிருந்து விலகி நிற்க வேண்டும் என்பதை இந்த நிகழ்வு எடுத்துச் சொல்கிறது.

அதேநேரம், பெற்ற பிள்ளைகளைக் கூட ஒரு பெண் ஒதுக்கி வைக்கலாம். ஆனால், கட்டிய கணவனை எக்காரணம் கொண்டும், அவனது துன்பகாலத்தில் கைவிடவும் கூடாது. அவன் மனம் திருந்திய பிறகும், என்றோ செய்த தவறுகளை சுட்டிக்காட்டி அவனை மேலும் துன்பத்திற்கு ஆளாக்கவும் கூடாது. தமயந்தி தன் கணவனிடம்,ஏன் இப்படி செய்தீர்கள்? பகடைக்காயை தொடும்போது என் நினைவும், உங்கள் பிள்ளைகளின் நினைவும் இருந்ததா? என்று ஒருமுறை கூட கேட்டதில்லை. நல்லவனான அவனை விதி என்னும் கொடிய நோய் தாக்கியதாக நினைத்து, அவனது கஷ்டத்தில் பங்கேற்றாள். இன்றைய தம்பதிகள், நளதமயந்தி போல் சிரமமான நேரங்களில் ஒருவருக்கொருவர் குத்திக்காட்டி சண்டை போடாமல், அடுத்து என்ன செய்ய வேண்டும் என்பது குறித்து யோசிக்க வேண்டும். இனியும் பழைய தவறைச் செய்யக்கூடாது என்று உறுதியெடுத்துக் கொள்ள வேண்டும். நளனுக்கு இந்த யோசனை நல்லதாகப்பட்டது. ஒருவழியாய், பிள்ளைகளை தாத்தா வீட்டுக்கு அனுப்புவதென முடிவாயிற்று. ஆனால், புதுபூதம் ஒன்று கிளம்பியது. தங்களை பெற்றோர் பிரிந்து செல்லப் போகிறார்கள் என்பதை அறிந்த பிள்ளைகள் அழ ஆரம்பித்து விட்டார்கள். அப்பா! எங்களைப் பிரியப் போகிறீர்களா! எங்களை தாத்தா வீட்டுக்கு அனுப்பி விடாதீர்கள். இனிமேல், நான் நடந்தே வருவேன். என் கால்களை முட்கள் குத்தி கிழித்தாலும் சரி. என்னைத் தூக்கச் சொல்லி உங்களிடம் நான் இனி சொல்லவே மாட்டேன். அமைதியாக உங்களைப் பின் தொடர்ந்து வருவேன், என்று கல்லும் கரைய அழுதாள் மகள்.மகனோ அம்மாவைக் கட்டியணைத்துக் கொண்டு,அம்மா! உன்னிடம் நான் இனி உணவு கூட கேட்கமாட்டேன், பசித்தாலும் பொறுத்துக்கொள்வேன். நீ என்னைப் பிரிந்து விடாதே. என்னை உன்னோடு அழைத்துச்செல், எனக் கதறினான்.

அப்போது, அந்த காட்டில் இருந்த பூக்களில் இருந்து சிந்திய தேன், இவர்களது துயரம் கண்டு கண்ணீர் வடித்தது போல் இருந்ததாம். பிள்ளைகள் தங்கள் மீது கொண்டுள்ள பாசம் கண்டு கலங்கிய தமயந்தி வடித்த கண்ணீர், அவளது உடலில் அபிஷேக தீர்த்தம் போல் ஓடியது. பிள்ளைகளை மார்போடு அணைத்துக்கொண்டாள். என் அன்புச் செல்வங்களே! நீங்கள் இனியும் எங்களுடன் கஷ்டப்பட வேண்டாம். தாத்தா உங்களை நல்ல முறையில் பார்த்துக் கொள்வார். நாங்கள் விரைவில் அங்கு வந்துவிடுவோம். மீண்டும் வாழ்வோம் ஓர் குடும்பமாய், என்று ஆறுதல் மொழி சொல்லித் தேற்றினாள். அந்தணரை அழைத்த நளன், சுவாமி! தாங்கள் இவர்களை குண்டினபுரம் அரண்மனையில் சேர்த்து விடுங்கள். நாங்கள் மிக்க நன்றியுள்ளவர்களாக இருப்போம், என்றான். அவர்களது துயரநிலை கண்ட அந்தணரும், அதற்கு சம்மதித்தார். பிள்ளைகளுடன் குண்டினபுரம் கிளம்பிவிட்டார். நளனும், தமயந்தியும் கண்ணில் நீர் மறைக்க, தங்கள் குழந்தைகள் தங்கள் கண்ணில் இருந்து மறையும் தூரம் வரை அவர்களைப் பார்த்துக்கொண்டே நின்றனர். பின்னர், பிரிவு என்னும் பெரும் பாரம் நெஞ்சை அழுத்த, அதைச் சுமக்க முடியாமல் தள்ளாடியபடியே சென்றனர். அந்தக் கொடிய காட்டில் கள்ளிச்செடிகள் வளர்ந்து கிடந்த ஒரு பகுதி வந்தது. அந்த இடத்தைக் கடந்தாக வேண்டிய சூழல் அவர்களுக்கு ஏற்பட்டது. இந்த கொடிய காட்டை எப்படிக் கடப்பது என நளன் யோசித்துக் கொண்டிருந்த வேளையில், சனீஸ்வரர் இவர்களைப் பார்த்தார். ஆஹா! வசமாகச் சிக்கிக் கொண்டாயடா! வாழ்வில் ஒருமுறை தப்பு செய்தவனை நான் அவ்வளவு லேசில் விடமாட்டேன். தப்பு செய்தவர்கள் மீது எனக்கு இரக்கமே ஏற்படாது.. புரிகிறதா! பிள்ளைகளைப் பிரிந்தாய். உன் மனைவி என்னவோ புத்திசாலித்தனமாக உன்னைப் பின் தொடர்வதாக நினைக்கிறாள்! உன்னை மனைவியோடு வாழ விடுவேனா! இதோ வருகிறேன், என்றவர், தங்கநிறம் கொண்ட ஒரு பறவையாக மாறினார். வேகமாகப் பறந்து வந்து கள்ளிச்செடி ஒன்றின் மீது அமர்ந்தது அந்தப்பறவை.

பெண்களைஎந்தச் சூழலிலும் தங்கத்தின் மீதான ஆசை விடாது போலும்! கணவனுடன் கஷ்டப்பட்டுக் கொண்டிருந்த அந்த வேளையிலும், அந்த தங்கநிற பறவை மீது தமயந்தியின் கண்பட்டது.ராமபிரான் காட்டுக்குச் சென்ற போது, அந்தச் சிரமமான வாழ்க்கை நிலையிலும், தன் கண்ணில் பட்ட தங்க நிற மானைப் பிடித்துத் தரச்சொன்னாளே! சீதாதேவி...அது போல, தமயந்தியும் தன் கணவனிடம் குழைந்தாள்.அன்பரே! அந்தப் பொன்னிற பறவையைப் பார்த்தீர்களா! எவ்வளவு அழகாக இருக்கிறது! அதை எனக்குப் பிடித்துத் தாருங்களேன், என்றாள் கொஞ்சலாகவும், கெஞ்சலாகவும்.மங்கையரின் கடைக்கண் பார்வை பட்டுவிட்டால் மாமலையும் ஆடவர்க்கு ஓர் கடுகாம் என்பார்களே! இவனுக்குப் பொறுக்குமா? தன் காதல் மனைவி, தனக்காக நாட்டையும், சுகபோகங் களையும், ஏன்...பெற்ற பிள்ளைகளைக் கூட மறந்து தன்னோடு காட்டில் கல்லும் முள்ளும் காலுக்கு மெத்தை என நடக்கிறாளே! அவளது துன்பத்தை மறக்க இந்த பறவை உதவுமென்றால், அதை பிடித்தாக வேண்டுமல்லவா! அவ்வளவு தானே! சற்றுப் பொறு தமயந்தி! நீ இங்கேயே இரு! அதை நான் நொடியில் பிடித்து வருகிறேன், எனச் சொல்லி விட்டு கிளம்பிவிட்டான் நளன்.கெட்ட நேரத்தின் உச்சக்கட்டமாய் வந்த அந்தப் பறவையை, சனீஸ்வரன் என அறியாமல் அதை நோக்கி பூனை போல் நடந்தான் நளன். அது கையில் சிக்குவது போல பாவனை காட்டியது. அவனது கை இறக்கைகளின் மேல் படவும், சுதாரித்துக் கொண்டு பறந்து போய் வேறு கள்ளிச் செடியில் அமர்ந்தது. நளன் அங்கே ஓடினான். அது மீண்டும் பழைய செடிக்கேவந்து அமர்ந்தது. இந்த கண்ணாமூச்சி ஆட்டம் சற்றுநேரம் தொடர்ந்தது.

என்னிடமா பாவ்லா காட்டுகிறாய்? உன்னைப் பிடிக்கும் கலை எனக்குத் தெரியும், என்று மனதுக்குள் சொல்லிக்கொண்டவன், தன் இடுப்பில் கட்டியிருந்த பட்டு வேட்டியை அவிழ்த்தான். தமயந்தியை அழைத்தான். பூங்கொடியே! உன் ஆடையை நாம் இருவரும் உடுத்திக் கொள்வோம். என்னுடைய ஆடையை இந்தக் கள்ளிச்செடியில் அமர்ந்துள்ள பறவையின் மீது போட்டு பிடித்து விடுவோமா! என்றான். அவளும் ஆர்வமாக சரியெனத் தலையாட்டினாள். தன் பட்டாடையை பறவையின் மேல் போட்டான். அவ்வளவு தான்! பறவை பட்டாடையுடன் உயரே பறக்க ஆரம்பித்து விட்டது. கவுபீனம் (கோவணம்) மட்டுமே அணிந்திருந்த நளன், ஐயோ! பறவை எங்கோ பறந்து போகிறதே! என்றவன், ஹோ...ஹோ... என கூச்சலிட்டு நின்றான். அந்தப் பறவை நடுவானில் நின்றபடியே, ஏ மன்னா! பொருளின் மீது கொண்ட பற்று காரணமாகத்தானே ஏற்கனவே நாட்டை இழந்தாய். இப்போதும், அந்த ஆசை விடவில்லையோ! தேவர்களைப் பகைத்து இந்த இளம் நங்கையை மணம் செய்து கொண்டவனே! புட்கரனுடன் சூதாடும் மனநிலையை உனக்கு உருவாக்கி, உன்னை நாடு இழக்கச் செய்த சனீஸ்வரன் நானே! யார் ஒருவரை நான் பற்றுகிறேனோ, அவர்களின் மன உறுதியைச் சோதிப்பதே என் பணி. மனைவி, பொருட்களின் மீது ஆசைப்பட்டாலும், அவர்களுக்கு உரிய புத்திமதியைக் கனிவுடனும், கண்டிப்புடனும் சொல்வது கணவனின் கடமை. இல்லாவிட்டால், அந்தக் குடும்பம் நடுத்தெருவுக்கு வந்துவிடும் என்ற சிறிய இலக்கணம் கூட தெரியாமல் இருக்கிறாயே! வருகிறேன், என்று சொல்லிவிட்டு அங்கிருந்து மாயமாக மறைந்து விட்டது. விதியை எண்ணி வருந்தினான் அவன்.

ஒரு குடும்பத்தை அழிக்க மூன்று போதைகள் உலகில் உள்ளன. சூது, மது, மாது என்பவையே அவை. அதற்கு அடிமையானவர்கள் உடுத்திய துணியைக் கூட இழப்பது உறுதி. போதையில் தெருவில் ஆடையின்றி உருளும் எத்தனையோ ஜென்மங்களை இன்றும் பார்க்கத்தானே செய்கிறோம்! பணத்தாசையால் இன்றும் கூட விளையாட்டுகள் கூட சூதாக மாறி, இடுப்புத்துணியைக் கூட இழப்பவர்கள் இருக்கத்தானே செய்கிறார்கள்! இவர்களுக்காகத் தான் நளதமயந்தியின் வரலாற்றை வியாசர் மகாபாரதத்தின் கிளைக்கதையாக எழுதி வைத்தார். இதைப் போன்ற கதைகளை பெற்றோர் பிள்ளைகளுக்கு கற்றுக் கொடுத்தால், அவர்களின் மனதில் இளமையிலேயே நல்லெண்ணங்கள் பதியும். இதையெல்லாம் விட்டு, குழந்தைகளுக்கு போலிச்சான்று வாங்கக் கற்றுக் கொடுத்தால், அவர்களின் மனம் விஷமாகித்தானே போகும்! அவர்களெல்லாம், இன்று சனீஸ்வரனின் பிடிக்குள் சிக்கிக் கொண்டார்களே! கட்டிய துணியை இழந்த நளன், மனைவியின் ஆடையில் பாதியை வாங்கி உடுத்திக் கொண்டான். உடல் இரண்டாயினும் உயிர் ஒன்றாகட்டும் என்பார்களே! அப்படித்தான் நளதமயந்தி தம்பதியர் இருக்கிறார்கள். இப்போது ஆடையாலும் ஒன்றானார்கள். தமயந்திக்கு வயிற்றெரிச்சல் தாங்கவில்லை. சனீஸ்வரரையே சபிக்க ஆரம்பித்து விட்டாள். தர்மம் தவறி நடப்பவர்கள், பொய்யிலே பிறந்து பொய்யிலேயே வளர்பவர்கள், நெஞ்சில் ஈரமில்லாதவர்கள், மானத்தைப் பற்றி சற்றும் கவலைப்படாதவர்கள், தெய்வத்தை பழிப்பவர்கள், உழைப்பை நம்பாமல் பிச்சை கேட்பவர்கள்...இவர்களெல்லாம் நரகத்திற்குப் போய்ச் சேர்வர் என்கிறது சாஸ்திரம். ஏ சனீஸ்வரா! நீயும் இப்போது இந்த ரகத்தில் சேர்ந்துவிட்டாய். நீயும் நரகத்துக்குப் போவது உறுதி, என்று சொல்லி கண்ணீர் விட்டாள்.

பின்பு தன் கணவனிடம், மகாராஜா! நமக்கு துன்பம் வந்தால் தெய்வத்திடம் முறையிடலாம். ஆனால், தெய்வமே நமக்கு துன்பம் தர முன்வந்துள்ள போது, அதை யாரிடத்தில் முறையிட முடியும்! ஆம்..இது நம் விதிப்பலன். நடப்பது நடக்கட்டும். வாருங்கள். இந்த இடத்தை விட்டு கிளம்புவோம், என்றாள். நளனும் கிளம்பினான். காட்டுப்பாதையில் அவர்கள் நீண்டதூரம் சென்றனர். மாலை நேரமானது. சூரியன் மறைந்து இருள் சூழ்ந்தது. அந்தக் கரிய இருளில் தன் மனைவியுடன் நடந்தான் நிடதநாட்டு மன்னன். தமயந்தியோ தடுமாறினாள். பேய்களுக்கு கூட கண் தெரியாத அளவுக்கு இருட்டு..எங்கே தங்குவது? நடுக்காட்டில் அங்குமிங்குமாய் முட்செடிகள் வேறு. பாதுகாப்பாக இருக்க இடமே கிடைக்கவில்லை. அந்நேரத்தில் ஏதோ நல்வினையின் பலன் குறுக்கிட்டது போலும்! பாழடைந்து போன மண்டபம் ஒன்று நளனின் கண்களில் பட்டது. தமயந்தி! வா! இந்த மண்டபத்தில் இன்றைய இரவுப்பொழுதைக் கழிப்போம், என்றாள்.தூண்களெல்லாம் இடிந்து எந்த நேரம் எது தலையில் விழுமோ என்றளவுக்கு இருந்த அந்த மண்டபத்தில் அவர்கள் தங்கினார்கள். நளன் சற்றே பழைய நினைவுகளை அசைபோட்டான். பளிங்கு மாமண்டபத்தில், பால் போல் ஒளி வீசும் வெண்கொற்றக்குடையின் கீழ் தமயந்தியுடன் கொலு வீற்றிருந்த கோலமென்ன! கொடிய சூதாட்டத்தால், இந்த இடிந்த மண்டபத்தில் தங்க வேண்டிய சூழ்நிலை வந்ததென்ன! அந்த மண்டபத்தின் தரைக்கற்கள் பெயர்ந்து மண்ணாகக் கிடந்தது. சற்று சாய்ந்தால் கற்கள் உடலில் குத்தியது. காட்டுக்கொசுக்கள் ஙொய் என்று இரைந்தபடியே அவர்களின் உடலில் கழித்தன.

தமயந்தி கலங்கிய கண்களுடன், நிடதநாட்டு சோலைகளில் வண்டுகளின் ரீங்காரம் செய்ய, அதைத் தாலாட்டாகக் கருதி உறங்கினீர்களே! அப்படிப்பட்ட புண்ணியம் செய்த உங்கள் காதுகள், இங்கே இந்த கொடிய கொசுக்களின் இரைச்சலில் உறங்கும் நிலைக்கு தள்ளப்பட்டதே! என்று கணவனிடம் சொன்னாள். நளன் அவளிடம்,கண்மணியே! கெண்டை மீன் போன்ற உன் கண்களில் இருந்து கண்ணீர் வழியலாமா? மனதைத் தேற்றிக்கொள்! முன்வினைப் பயனை எல்லாருமே அனுபவித்தாக வேண்டும்! இப்பிறவியில் நாம் யாருக்கும் கேடு செய்யவில்லை. முற்பிறவிகளில் என்னென்ன பாவங்கள் செய்தோமோ! ஆனால், அதை உன்னையும் சேர்ந்து அனுபவிக்க வைத்துவிட்டேனே என்பது தான் கொடுமையிலும் கொடுமை, என்று வருத்தப்பட்டான் நளன். ஆண்கள் என்ன தான் தேறுதல் சொன்னாலும், பெண்கள் ஒன்றை இழந்துவிட்டால், அவர்களின் மனதை ஆற்றுவது என்பது உலகில் முடியாத காரியம். தமயந்தியின் நிலையும் அப்படித்தான். அன்பரே! வாசனை மலர்களால் ஆன படுக்கையில், காவலர்கள் வாயிலில் காத்து நிற்க படுத்திருப்பீர்களே! இங்கே, யார் நமக்கு காவல்! என்று புலம்பினாள். உடனே நளன், தமயந்தி! இழந்ததை எண்ணி வருந்துவது உடலுக்கும் மனதுக்கும் துன்பத்தையே தரும். இதோ பார்! இந்தக் காட்டிலுள்ள பூக்களும், செடிகளும், மரங்களும் தனித்து தூங்கவில்லையா? திசைகள் இருளில் மூழ்கி உறங்கவில்லையா? பேய்கள் கூட தூங்கிவிட்டன என்று தான் நினைக்கிறேன். எங்கும் நிசப்தமாயிருக்கிறது. இப்படி இரவும் பகலும் விழித்தால் உன் உடல்நிலை மோசமாகி விடும். உறங்கு கண்ணே! என் கைகளை மடக்கி வைக்கிறேன். அதைத் தலையணையாக்கிக் கொண்டு தூங்கு, என்றான். அவளும் கண்களில் வழிந்த நீர் அப்படியே காய்ந்து போக, தலைசாய்த்தாள். இருவருக்கும் தூக்கம் வரவில்லை. தன் அன்பு மனைவியின் அழகு முகத்தைப் பார்த்துக்கொண்டே இருந்தான்.

பாவம் செய்தவள் நீ! இல்லாவிட்டால் எனக்கு வாழ்க்கைப்பட்டிருப்பாயா! வீமராஜனின் மகளாகப் பிறந்து, நட்ட நடுகாட்டில், மண் தரையில் உறங்குகிறாய். உன்நிலை கண்டு என் உயிரும் உடலும் துடிக்கிறது. இந்தக் காட்சியைக் காணவா நான் உன்னைக் காதலித்தேன்! இப்படியொரு கொடிய வாழ்வைத் தரவா உன் கழுத்தில் தாலிக் கொடியைக் கட்டினேன்! என் இதயம் இப்படியே வெடித்து விட்டால் என்னைப் போல் மகிழ்பவர்கள் உலகில் இருக்க முடியாது! நான் இப்படியே மரணமடைந்து விடமாட்டேனா! என்று அழுதான்.பெண்கள் எவ்வளவு வேண்டுமானாலும் அழுவார்கள். ஆனால், கணவன் அழுதால் அவர்களால் தாங்க முடியாது.அன்பரே! தாங்கள் கண்ணீர் வடிக்குமளவு நான் தான் உங்களுக்கு கொடுமை செய்தேன்! அற்ப பறவை மீது கொண்ட ஆசையால், உங்கள் ஆடையை இழக்கச் செய்தேன்! என் முந்தானை உங்கள் ஆடையானதால், அதை விரித்து உங்களைப் படுக்க வைக்க இயலாமல் போனேன். இப்படி ஒரு கொடுமை இந்த உலகில் எந்த ஒரு பெண்ணுக்கும் வரக்கூடாது, என்று புலம்பித் தீர்த்தாள். இப்படி புலம்பியபடியே அவள் தன் கைகளை அவனுக்கு தலையணையாகக் கொடுத்து, கால்களை குறுக்கே நீட்டி, அதன் மேல் அவனது உடலைச் சாய்க்கச் சொல்லி, மண்டபத்து மணலும், கல்லும் அவன் முதுகில் குத்தாமல் இருக்க உதவினாள். ஒருவழியாக அவள் உறங்கத் தொடங்கினாள். இப்படி இவள் படும் பாட்டைக் கண்கொண்டு பார்க்க நளனால் முடியவில்லை. இவளை இங்கேயே விட்டுச்சென்று விட்டால் என்ன! இவள் காட்டில் படாதபாடு படுவாள் என்பது நிஜம்! ஆனாலும், அது நம் கண்களுக்குத் தெரியாதே! என்ன நடக்க வேண்டுமென அவளுக்கு விதி இருக்கிறதோ, அது நடக்கட்டும்! இவளை இப்படியே விட்டுவிட்டு கிளம்பி விடலாமா! நளனின் மனதில் சனீஸ்வரர் விஷ விதைகளை ஊன்றினார்.

ந ளன் கிளம்பி விட்டான். இரண்டடி நடந்திருப்பான், மனம் கேட்கவில்லை. மீண்டும் வந்து தமயந்தியை எட்டிப்பார்த்தான். ஏதுமறியா, அந்த பிஞ்சு இதயத்திற்கு சொந்தக்காரியான அவள், பச்சைமழலை போல், பால் மாறா முகத்துடன் தூங்கிக் கொண்டிருந்தாள். இவளை விட்டா பிரிவது? வேண்டாம்.. இங்கேயே இருந்து விடலாம்... என்று எண்ணியவனின் மனதில் கலியாகிய சனீஸ்வரன் மீண்டும் வந்து விளையாடினான். போடா போ, இவள் படும் பாட்டை சகிக்கும் சக்தி உனக்கில்லை, புறப்படு, என்று விரட்டினான்.ஆம்..கிளம்ப வேண்டியது தான்! அவள் படும்பாட்டை என்னால் சகிக்க முடியாது. புறப்படுகிறேன் என்று தனக்குள் சொல்லிக்கொண்டவனின் மனம் தயிர் கடையும் மத்தை கயிறைப் பிடித்து இழுக்கும்போது, அங்குமிங்கும் கயிறு போய்வருமே...அதுபோல் வருவதும், போவதுமாக இருந்தான். ஒரு வழியாக, உள்ள உறுதியுடன் அங்கிருந்து வேகமாகப் போய்விட்டான். செல்லும் வழியில் அவன் தெய்வத்தை நினைத்தான். தெய்வமே! அனாதைகளுக்கு நீயே அடைக்கலம். என் தமயந்தியை அனாதையாக விட்டு வந்து விட்டேன். உன்னை நம்பியே அவளை விட்டு வந்திருக்கிறேன். அவளுக்கு ஒரு கஷ்டம் வருமானால், அவளை நீயே பாதுகாத்தருள வேண்டும். இந்தக் காட்டில் இருக்கும் தேவதைகளே! நீங்கள் என் தமயந்திக்கு பாதுகாவலாக இருங்கள். அவள் என்னிடம் பேரன்பு கொண்டவள், நானில்லாமல் தவித்துப் போவாள். நீங்களே அவளுக்கு அடைக்கலம் தர வேண்டும், என வேண்டியபடியே நீண்டதூரம் போய்விட்டான். நள்ளிரவை நெருங்கியது. ஏதோ காரணத்தால், தூக்கத்தில் உருண்ட தமயந்தி கண் விழித்துப் பார்த்தாள். இருளென்பதால் ஏதும் தெரியவில்லை. காட்டுப்பூச்சிகளின் ரீங்காரம், ஆங்காங்கே கேட்கும் மிருகங்களின் ஒலி தவிர வேறு எதுவும் அவள் காதில் விழவில்லை. இருளில் தடவிப் பார்த்தாள். அருகில் இருந்த மணாளனைக் காணவில்லை.

மன்னா...மன்னா... எங்கே இருக்கிறீர்கள்? இந்த இருளில் என்னைத் தவிக்க விட்டு எங்கே உட்கார்ந்திருக்கிறீர்கள்? என்று, பக்கத்தில் எங்காவது அவன் இருப்பான் என்ற நம்பிக்கையில் மெதுவாக அவள் அழைத்தாள். சப்தமே இல்லை. சற்று உரக்க மன்னவரே! எங்கிருக்கிறீர்கள்? என்று கத்தினாள். பலனில்லை. போய் விட்டாரா! என்னைத் தவிக்க விட்டு எங்கோ போய்விட்டாரே! இறைவா! நட்ட நடுகாட்டில் கட்டியவர் என்னை விட்டுச்சென்று விட்டாரே! நான் துன்பத்தை மட்டுமே அனுபவிப்பதற்கென்றே பிறந்தவளா? ஐயோ! நான் என்ன செய்வேன்? அவள் புலம்பினாள். பயம் ஆட்டிப்படைத்தது. நடனமாடிக் கொண்டிருந்த மயில் மீது, வேடன் விடுத்த அம்பு தைத்ததும் அது எப்படி துடித்துப் போகுமோ அதுபோல இருந்தது தமயந்தியின் மனநிலை. கைகளால் தலையில் அடித்துக் கொண்டு, கூந்தல் கலைய அழுது புரண்டாள். விடிய விடிய எங்கும் போகத் தோன்றாமல் அவள் அங்கேயே கிடந்து என்னவரே! எங்கே போய்விட்டீர்கள்! இது உங்களுக்கே அடுக்குமா! இறைவா! ஒரு அபலைப் பெண்ணென்றும் பாராமல் இப்படி கொடுமைக்கு ஆளாக்கிப் பார்க்கிறாயே! என்று அந்தக் காட்டிலுள்ள புலியின் கண்களிலும் கண்ணீர் வழியும் வகையில் அவள் உருகி அழுதாள். அவளது துன்பத்தை சற்றே தணிக்கும் வகையில் சூரியன் உதயமானான். அவள் முன்னால் சில மான்கள் துள்ளி ஓடின. மயில்கள் தோகை விரித்தாட ஆரம்பித்தன. மான்களே! மயில்களே! நீங்கள் நீண்ட காலம் இந்தக் காட்டில் மகிழ்வுடன் வாழ வேண்டும். என் மன்னவரைக் கண்டீர்களா? அவர் எங்கிருக்கிறார்? என்னை அவரிடம் அழைத்துச் செல்லுங்கள், என்று கதறினாள்.அங்குமிங்கும் சுற்றினாள். அந்த நேரத்தில் வேகமாக ஏதோ ஒன்று அவளது கால்களைப் பற்றி இழுத்தது. தன்னை யார் இழுக்கிறார்கள் என்று பார்த்தபோது, மிகப்பெரிய மலைப்பாம்பு ஒன்றிடம் சிக்கியிருப்பதே அவளுக்கு புரிந்தது. அவள் அலறினாள்.

மகாராஜா... மகாராஜா...இந்தப் பாம்பிடம் சிக்கிக் கொண்டேன். அது என்னை விழுங்கிக் கொண்டிருக்கிறது. ஓடி வந்து காப்பாற்றுங்கள், என்ற அவளது அலறல் சுற்றுப்புற மெங்கும் எதிரொலித்தது. இதற்குள் பாம்பு அவளது வயிறு வரை உள்ளே இழுத்து விட்டது. அப்போது அவளது பேச்சு மாறியது. தாங்கள் என்னை விட்டுப் பிரிந்த போதே என் உயிர் பிரிந்திருக்க வேண்டும். அவ்வாறு பிரியாத கல் மனம் கொண்டவள் என்பதால், இந்தப் பாம்பு என்னை விழுங்குகிறது போலும்! இருப்பினும், இந்த கல் நெஞ்சத்தவளை மன்னித்து என்னைக் காப்பாற்ற ஓடோடி வாருங் கள், என்றாள். கிட்டத்தட்ட இறந்து விடுவோம் என்ற நிலை வந்ததும், என் இறைவனாகிய நளமகராஜனே! இந்த உலகில் இருந்து பிரிய அனுமதி கொடுங்கள், என்று மனதுக்குள் வேண்டிய வேளையில், வேடன் ஒருவன், ஏதோ அலறல் சத்தம் கேட்கிறதே எனக் கூர்ந்து கவனித்தபடி அந்தப் பக்கமாக வந்தான். அவனைப் பார்த்த தமயந்தி, மனதில் சற்று நம்பிக்கை பிறக்கவே, ஐயா! இந்தப் பாம்பிடமிருந்து என்னைக் காப்பாற்றுங்கள்,என்று கத்தினாள்.உடனே வேடன் அந்த பாம்பை தன் வாளால் வெட்ட, அது வலி தாங்காமல் வாயைப் பிளந்தது. இதைப் பயன்படுத்தி அவளை வெளியே இழுத்துப் போட்டான். பாம்பு வலியில் புரண்டபடிதவித்துக் கொண்டிருக்க, அவளை சற்று தள்ளி அழைத்துச் சென்றான் வேடன்.ஐயா! என்னைப் பாம்பிடம் இருந்து காப்பாற்றினீர்! இதற்கு பிரதி உபகாரம் என்ன செய்தாலும் தகும். தங்களுக்கு நன்றி, என்றாள். வேடன் அவளை என்னவோ போல பார்த்தான். இப்படி ஒரு பருவச்சிட்டா? இவளைப் போல் பேரழகி பூமிதனில் யாருண்டு, நான் ஒரு இளவஞ்சியைத் தான் காப்பாற்றியிருக்கிறேன்! என்று அவளை விழுங்கி விடுவது போல் பார்த்தவன், ஆம்..உன்னைக் காப்பாற்றியதற்கு எனக்கு பரிசு வேண்டும் தான்! ஆம்...அந்தப் பரிசு நீ தான்! என்றவன், அவளை ஆசையுடன் நெருங்கினான்.

வேடன் இப்படிச் சொன்னானோ இல்லையோ!அட தெய்வமே! இப்படி ஒரு சொல் என் காதில் விழுந்ததை விட, அந்தப் பாம்பின் பசிக்கே என்னை இரையாக்கி இருக்கலாமே! இவனிடமிருந்து எப்படி தப்பிப்பது? என யோசித்தவள், சற்றும் தாமதிக்காமல் அங்கிருந்து ஓட்டம் பிடித்தாள்.மனிதனை சூழ்நிலைகள் தான் மாற்றுகின்றன. பஞ்சணையில் படுத்தவள்...தோழிகள் மலர் தூவ கால் நோகாமல் நடந்து பழகியவள்...ஒரு கட்டத்தில், கணவனின் தவறால் காடு, மேடெல்லாம் கால் நோக நடக்கவே சிரமப்பட்டவள்... இப்போது, ஓடுகிறாள்... ஓடுகிறாள்...புதர்களையும், காட்டுச்செடி, கொடிகளையும் தாண்டி... கற்பைப் பாதுகாக்க உயிரையும் பொருட் படுத்தாத நம் தெய்வப்பெண்கள் இன்றைக்கும் நம் தேசத்துப் பெண்களுக்கு வழிகாட்டியாக இருக்கிறார்கள்.வேடனுக்கோ அந்த காடு, அவன் வீடு மாதிரி...பழக்கப்பட்ட அந்த இடத்தில் அவனுக்கு ஓடுவது என்பது கஷ்டமா என்ன! வேட்டையாடும் போது, வேகமாக ஓடும் சிறுத்தையைக் கூட விடாமல் விரட்டுபவனாயிற்றே அவன்...மான்குட்டி போல் ஓடிய அவள் பின்னால் வந்து எட்டிப்பிடிக்க முயன்றான். தன்னால், இனி தப்பிக்க இயலாது என்ற நிலையில் தமயந்தியும் நின்று விட்டாள்.அந்தப் பூ இப்போது புயலாகி விட்டது. கண்களில் அனல் பறந்தது. வேடனே அவள் தோற்றம் கண்டு திகைத்து நின்று விட்டான். அந்தக் கற்புக்கனலே வேடனை எரித்து விட்டது. அவன் பஸ்மமாகி விட்டான். வேடனிடமிருந்து அவள் தப்ப காரணம் என்ன தெரியுமா? தன் கணவன் தன்னைக் கைவிட்டுப் போனதால் தானே இந்த நிலை ஏற்பட்டது என்ற எண்ணம் அவள் மனதுக்குள் இருந்தாலும், அந்த நிலையிலும் கூட, அவள் தன் கணவனைத் திட்டவில்லை. இதெல்லாம் தனது தலைவிதி என்றே நினைத்தாள்.

நன்மை நடக்கும் போது கணவரைப் பாராட்டுவதும், கஷ்டம் வந்ததும் அதற்கு அவனையே பொறுப்பாக்கி திட்டுவதும் இக்காலத்து நடைமுறை. ஆனால், அக்காலப் பெண்கள் அவ்வாறு இல்லை. எந்தச்சூழலிலும் கணவனைத் தெய்வமாகவே மதித்தனர். அதனால் தான் மாதம் மும்மாரி பெய்தது. தங்களுக்கு துன்பம் செய்தவனை கற்புக்கனலால் எரிக்குமளவு பெண்கள் சக்தி பெற்றிருந்தனர். என்ன தான் சனியின் கொடியகாலத்தை அனுபவித்தாலும் கூட, தமயந்தி தன் கற்புக்கு வந்த சோதனையில் இருந்து தப்பித்தாள் என்றால், அவள் அனுஷ்டித்த பதிவிரதா தர்மம் தான் அவளைக் காத்தது.இந்த சமயத்தில் வணிகன் ஒருவன் அவ்வழியாக வந்தான். அவன் அவளைப் பற்றி விசாரித்தான். அவள் அழுவதற்கான காரணத்தைக் கேட்டான்.நான் முன் செய்த பாவத்தின் காரணமாக காட்டுக்கு வந்தேன். என் கணவரைப் பிரிந்தேன். அவரைத் தேடி அலைகின்றேன், என்றாள். அந்த வணிகன் நல்ல ஒழுக்கம் உடையவன். பிறர் துன்பம் கண்டு இரங்குபவன்.பெண்ணே! இந்தக் காட்டில் இனியும் இருக்காதே! இங்கிருந்து சில கல் தூரம் நடந்தால், சேதிநாடு வரும். அங்கே சென்றால், உன் பிழைப்புக்கு வழி கிடைக்கும். உன் துன்பம் தீரும்,என்றாள்.மனிதர்களில் நல்லவர்களும் இருக்கிறார்கள் என்று அவனுக்கு நன்றி சொன்ன தமயந்தி, வேகமாக நடந்து சேதிநாட்டை அடைந்தாள். கிழிந்த புடவையுடன் தங்கள் நாட்டுக்கு வந்த புதுப்பெண்ணைக் கண்ட சில பெண்கள், தங்கள் நாட்டு அரசியிடம் ஓடிச்சென்று, தாங்கள் கண்ட பெண்ணைப் பற்றிக் கூறினர்.அவளை அழைத்து வரும்படி அரசி உத்தரவிடவே, தோழிகள் தமயந்தியிடம் சென்று, தங்கள் நாட்டு அரசி அவளை வரச்சொன்னதாகக் கூறினர். தமயந்தியும் அவர்களுடன் சென்றாள்.அரசியின் பாதங்களில் விழுந்த அவள், விதிவசத்தால் தன் கணவனைப் பிரிந்த கதியைச் சொல்லி அழுதாள்.

அவள் மீது இரக்கப்பட்ட அரசி, அவளது கணவனைத் தேடிப்பிடித்து தருவதாகவும், அதுவரை பாதுகாப்பாக தன்னுடனேயே தங்கும்படியும் அடைக்கலம் அளித்தாள். ஒருவாறாக, தமயந்தி பட்ட கஷ்டத்துக்கு தற்காலிகத் தீர்வு கிடைத்தது. இதனிடையே, நளதமயந்தியால், அந்தணருடன் அனுப்பப்பட்ட அவர்களது பிள்ளைகள் விதர்ப்பநாட்டை அடைந்தனர். தங்கள் தாத்தா வீமனைக் கண்ட பிள்ளைகள் அரண்மனையில் நடந்த சம்பவங்களை விளக்கமாக எடுத்துச் சொன்னார்கள். வீமன் அந்த அந்தணரிடம், அந்தணரே! நீர் வேகமாக இங்கிருந்து புறப்படும்! நளனும் தமயந்தியும் எங்கிருந்தாலும் கண்டுபிடித்து அரண்மனைக்கு அழைத்து வாரும்,என உத்தரவிட்டார். அந்தணர் மட்டுமின்றி, பல தூதுவர்களை நாலாதிசைகளுக்கும் அனுப்பி நளதமயந்தியைக் கண்டுபிடிக்க அனுப்பி வைத்தார். அரசனின் கட்டளையை ஏற்ற அந்தணன், ஏழுகுதிரை பூட்டிய தேரில் நளதமயந்தியை தேடிச்சென்றார். பலநாடுகளில் தேடித்திரிந்த அவர், அழகு பொங்கும் தேசமான சேதிநாட்டை அடைந்தார்.சேதி நாட்டு அரண்மனைக்குச் சென்ற அந்தணர், அந்நாட்டு அரசியுடன் இருந்த பெண்ணைப் பார்த்தார். அவள் தமயந்தி என்பது அவருக்கு தெளிவாகத் தெரிந்து விட்டது. அவள் முன் பணிந்து நின்ற அவர், அம்மா! தங்களைத் தங்கள் தந்தையார் அழைத்து வரச்சொல்லி உத்தரவிட்டார், என்றார். தமயந்தி அவரது பாதங்களில் விழுந்தாள்.தமயந்தி வடித்த கண்ணீர் அவரது பாதங்களைக் கழுவியது. அவளது துயரம் தாங்காத அந்த மறையவரும் கண்ணீர் வடித்தார். இந்த சோகமான காட்சி கண்டு, சுற்றி நின்றோர் முகம் வாடி நின்றனர். இந்தப் பெண் மீது இந்த அந்தணர் எந்தளவுக்குபாசம் வைத்துள்ளார், என தங்களுக்குள்பேசிக்கொண்டனர். அப்போது தான் சேதி நாட்டரசிக்கு அதிசயிக்கத்தக்க செய்தி ஒன்று கிடைத்தது.

சேதிநாட்டரசி முன் நின்ற அந்தணர்,தேவியே! தங்கள் முன் நிற்கும் இந்தப்பெண்ணை உங்களுக்கு அடையாளம் தெரியவில்லையா? என்றார். அவள் இல்லை என்பது போல தலையசைத்தாள். தமயந்தியிடம்,இவர்கள் நாட்டில் இத்தனை காலம் இருந்தாயே! இந்த பேரரசியை யாரென்று நீயும் அறிந்து கொள்ளவில்லை. காரணம், நீ இவர்களை இளமையிலேயே பார்க்கும் சந்தர்ப்பம் கிடைக்கவில்லை,என்றவர், அரசியை நோக்கி, அம்மா! இவள் உங்கள் மூத்த சகோதரியின் மகள். அதாவது, நீங்கள் இவளுக்கு சிற்றன்னை முறை வேண்டும், என்றார்.அவள் அதிர்ந்து போனாள். தமயந்தியை அள்ளி அணைத்துக் கொண்டாள். அன்புமகளே! இளவரசியான நீயா, இத்தனை நாளும் எங்கள் இல்லத்தில் இருந்தாய்? உன் துயர் அறிந்துமா நான் தீர்க்காமல் இருந்தேன்! என்றவள் மயங்கியே விழுந்துவிட்டாள். அவளுக்கு சுற்றியிருந்தவர்கள் மயக்கம் தெளிவித்தனர். சேதிநாட்டரசன், தன் மனைவி மயக்கமடைந்த செய்தியறிந்து விரைந்து வந்தான். கண்விழித்த ராணி,அன்பரே! இவள் என் சகோதரி மகள். இந்த மறையவர் சொன்னபிறகு தான், இவள் நம் உறவினர் என்று தெரிய வந்தது. இவளைப் பத்திரமாக, விதர்ப்ப நாட்டுக்கு அனுப்ப வேண்டும். இவளுக்கு இனியாவது நல்ல காலம் பிறக்கட்டும். இவளது கணவன் நிச்சயம் இவளுடன் வந்து சேர்வான், என்றாள்.சேதிநாட்டரசனும் மனம் மகிழ்ந்து அவளைத் தேரில் ஏற்றி அந்தணருடன் அனுப்பி வைத்தான். அவள் சென்ற தேர் விதர்ப்ப நாட்டுக்குள் நுழைந்ததோ இல்லையோ, மக்களெல்லாம் குழுமி விட்டனர். அழகே உருவாய் இருந்த தங்கள் இளவரசி, கணவனால் கைவிடப்பட்டு, குழந்தைகளையும் இதுவரைக் காணாமல், உருக்குலைந்து வந்தது கண்டு அவர்கள் அழுதனர். குறிப்பாகப் பெண்கள், அம்மா! உங்களுக்கா இந்த நிலை வரவேண்டும்! என வாய்விட்டுப் புலம்பினர். சிலர் மணலில் விழுந்து புரண்டு அழுதனர்.

நமக்கே இப்படி இருக்கிறது. அரண்மனையில் இருக்கும் இளவரசியின் தந்தை வீமராஜாவும், தாயும் இவளது இந்தக் கோலத்தைப் பார்த்தால் மனமொடிந்து போவார்களே! என்ன நடக்கப்போகிறதோ, என்று பயந்தவர்களும் உண்டு. பெண்ணே! உன் கணவன் உன்னை விட்டுப் பிரிந்து நடுக்காட்டில் தவிக்கவிட்டானே! அப்போது நீ என்னவெல்லாம் துன்பம் அனுபவித்தாயோ? என்று கதறியவர்களும் உண்டு.இவ்வாறாக தமயந்தி நாடு வந்த சேர்ந்த அந்த சமயத்தில், அவளை விட்டுப் பிரிந்து சென்ற நளன் கால்போன போக்கில் சென்றான். ஓரிடத்தில் பெருந்தீ எரிந்து கொண்டிருந்தது. மன்னா, என்னைக் காப்பாற்று...என் உயிர் போய்க்கொண்டிருக்கிறது, காப்பாற்று, என்று அபயக்குரல் எழுந்தது. தன்னை ஒரு மன்னன் எனத்தெரிந்து அழைப்பது யார் எனத் தெரியாமல் நளன் சுற்றுமுற்றும் பார்த்தான். தீக்குள் இருந்து குரல் வருவது கேட்டதும், ஐயோ! யாரோ தீயில் சிக்கி வெளியே வரமுடியாமல் தவிக்கிறார்கள், என உறுதிப் படுத்திக் கொண்டான். கருணையுள்ளம் கொண்ட அவன் அங்கு ஓடினான்.தீக்குள் புகுந்து உள்ளே சிக்கித்தவிப்பவரைக் காப்பாற்றுவது எப்படி என்று யோசித்த வேளையில், முன்பு அவன் தேவர்களின் திருமண விருப்பத்தை தமயந்தியிடம் தெரிவிப்பதற்காக தூது சென்ற போது, இந்திரன், அக்னி முதலானவர்கள் அளித்த வரம் ஞாபகத்திற்கு வந்தது. அதன்படி அக்னி அவனைச் சுடாது என்பது அவன் பெற்ற வரம். அந்த வரத்தைப் பயன்படுத்தி, அக்னி பகவானை மனதார துதித்தான். ஐயனே! இந்த நெருப்புக்குள் யாரோ சிக்கியிருக்கிறார்கள். அவர்கள் காப்பாற்றப்பட வேண்டும், என்றான். யாரென்றே தெரியாத, நல்லவனா, கெட்டவனா என்றே புரியாத முன்பின் அறியாதவர்களுக்காகச் செய்யும் உதவி இருக்கிறதே! இது மிகப்பெரிய உதவி! நல்ல மனமுடையவர்களால் தான் அதைச் செய்ய முடியும்!

அப்போது, முன்பு கேட்ட குரல் பேசியது.மன்னா! நீ சிறந்த குணநலன்களைக் கொண்டவன் என்பதை நான் அறிவேன். நான் ஒரு பெரிய தபஸ்வி. வேதநூல் களைக் கற்றறிந்தவன். இந்த நெருப்பில் சிக்கித் தவிக்கிறேன். என்னை கார்க் கோடகன் என்பர். நான் நாகங்களுக்கு தலைவன், என்னைக் காப்பாற்று. நெருப்பில் இருந்து தூக்கி வெளியே விடு, என்றது. நளனும் அக்னியைத் துதிக்கவே, அவன் பாம்பைக் கையில் தூக்கினான். இந்நேரத்தில், சனீஸ்வரர் தன் பணியைத் துவக்கி விட்டார். பாம்பு அவனிடம்,மகாராஜா! என்னை உடனே வீசி விடாதே. ஒன்று, இரண்டு என எண்ணி தச (பத்து) என எண்ணி முடித்தபின் தரையில் விடு, என்றது. அப்பாவி நளனுக்கு, தச என்பதற்கு பத்து என்ற பொருள் தான் தெரியும். அதற்கு கடி என்ற பொருள் இருப்பது தெரியாது. இவனும் அந்த பாம்பு சொன்னது போல எண்ணவே, தச என்றதும் அவனைக் கடித்து விட்டது பாம்பு. அவ்வளவு தான்! நளனின் உடலில் விஷமேறி, காண்பவர் வியக்கும் வண்ணமிருந்த அவனது சிவப்பழகு, கன்னங்கரேலென்றாகி விட்டது. கார்க்கோடகா! இது முறையா? ஆபத்தில் தவித்த உன்னைக் காத்த எனக்கு இப்படி ஒரு கதியைத் தந்துவிட்டாயே! நான் உனக்கு என்ன தீங்கு செய்தேன்? என்றான். மன்னவனே! உன்னைப் பாதுகாக்கவே இவ்வாறு செய்தேன். நீ இந்தக் காட்டில் மனைவியைப் பிரிந்து சுற்றுவதை நான் அறிவேன். மனிதனுக்கு எல்லா கஷ்டங்களும் விதிப்படியே வருகின்றன. இந்த கரிய நிறத்தில் மாறியதன் காரணத்தை நீ விரைவிலேயே தெரிந்து கொள்வாய். இந்த கருப்பு தான் உன்னைக் காப்பாற்றப் போகிறது. அதே நேரம், கொடிய வெப்பத்தை எனக்காக தாங்கிய உன் வள்ளல் தன்மைக்கு பரிசும் தரப்போகிறேன். இதோ! பிடி! என்று ஒரு அழகிய ஆடை ஒன்றை நீட்டியது. இந்த ஆடை எனக்கு எதற்கு?என்றான் நளன்.

அரசே! இந்த ஆடையைப் போர்த்திக் கொண்டால் நீ உன் உண்மை உருவை அடைவாய். ஆனால், இப்போதைக்கு இதை அணியாதே. உன் நன்மைக்கே சொல்கிறேன். இனி நீ வாகுகன் (அழகு குறைந்தவன்) என அழைக்கப்படுவாய். இங்கிருந்து அயோத்தி செல். அந்நாட்டு மன்னன் இருதுபன்னனுக்கு தேரோட்டியாகவும், சமையல் காரனாகவும் இரு, என சொல்லி விட்டு மறைந்து விட்டது. நளனும் அயோத்தி வந்து சேர்ந்தான். அரசனை சந்திக்க அனுமதி பெற்றான். இருதுபன்னனிடம் பேசி சமையல்காரன் ஆனான். இதனிடையே கணவனைப் பிரிந்து தந்தை வீட்டில் இருந்த தமயந்தி, ஒரு புரோகிதரைஅழைத்து, நீர் என் கணவர் நளனை எங்கிருந்தாலும் கண்டுபிடித்து வாரும். அவர் ஒருவேளை மாறுவேடத்தில் இருந்தாலும், அடையாளம் காண ஒரு வழி சொல்கிறேன். காட்டிலே கட்டிய மனைவியை தனியே விட்டு வருவது ஒரு ஆண்மகனுக்கு அழகாகுமா? என்று நீ சந்தேகப்படுபவர்களைப் பார்த்துக் கேளும். இந்தக் கேள்விக்கு யார் பதிலளிக்கிறார்களோ அவர் யார் எனத்தெரிந்து அழைத்து வாரும், என்றாள். அவரும் கிளம்பி விட்டார். பல இடங்களில் சுற்றி, அயோத்தியை வந்தடைந்தார். பொது இடத்தில் நின்று கொண்டு, தமயந்தி தன்னிடம் சொல்லியனுப்பிய கேள்வியைச் சத்தமாகச் சொன்னார். அப்போது தற்செயலாக அங்கு நின்ற நளன் காதில் இது கேட்டது. அவன் புரோகிதர் அருகே வந்தான்.புரோகிதரே! நான் வேண்டுமென்றே அப்படி செய்யவில்லை. விதிவசமாக நாங்கள் பிரிந்தோம்,என்று பதிலளித்தான். அவனது உருவத்தைப் பார்த்தால் அவன் நளனாக தெரியவில்லை புரோகிதருக்கு. யாரோ ஒருவன் நம் கேள்விக்கு பதிலளிக்கிறான் என நினைத்து நாடு திரும்பி விட்டார். அவர் வரவுக்காக காத்திருந்த தமயந்தி,புரோகிதரே! நான் சொன்ன கேள்விக்கு யாராவது பதிலளித்தார்களா? என்று கேட்டாள்.

அம்மா! ஒரே ஒருவன் தான் என் கேள்விக்கு பதிலளித்தான். அவனது உடல்வாகு மன்னன் போல இருக்கிறது. ஆனால், அவன் கருப்பு நிறத்தவன், மன்னனாகத் தெரியவில்லை, என்றார். அப்படியா? என்ற தமயந்தி,புரோகிதரே! ஒரு யோசனை. மீண்டும் அயோத்தி செல்லும்! எனக்கு மீண்டும் சுயம்வரம் நடக்கப்போவதாக அயோத்தி மன்னரிடம் சொல்லும். ஒருவேளை அங்கிருப்பவர் எனது கணவராக இருந்தால், அவர் பதறிப்போய் மன்னனுக்கு தேரோட்டி இங்கு வருவார், என்றாள். இரண்டாம் சுயம்வரமா? இது பெண்களுக்கு ஏற்புடையதல்லவே என்று இருதுபன்னன் யோசித்த வேளையில், நளன் மன்னனிடம், அரசே! கற்புடைய பெண் இப்படி ஒரு அறிவிப்பை வெளியிடவே மாட்டாள். நளன் பிரிந்து விட்டான் என்ற காரணத்துக்காக அவள் இப்படி செய்வாள் என என்னால் நம்ப முடியவில்லை, என்று மன்னனைப் போக விடாமல் நளன் தடுத்தான். வாகுகா! நீ சொல்வது பற்றி எனக்கு கவலையில்லை. அந்த தமயந்தி கடந்த சுயம்வரத்திலேயே எனக்கு கிடைத்திருக்க வேண்டியவள். அந்த நளன் அவளைப் பறித்துக் கொண்டு போய்விட்டான். இரண்டாம் தாரமாக இருந்தாலும் பரவாயில்லை. நான் அவளோடு வாழ முடிவு செய்து விட்டேன், எடு தேரை, என உத்தரவு போட்டுவிட்டான் இருதுபன்னன். நளன் வருத்தப்பட்டான். இருப்பினும், தன்னைப் பற்றி புரோகிதர் சொன்னதைக் கேட்டு சந்தேகப்பட்டு, தன்னை வரவழைக்க இப்படி செய்திருக்கலாம் என்று முடிவு செய்து கிளம்பினான். தேர் விதர்ப்ப நாடு நோக்கி மனோவேகத்தை விட வேகமாகப் பறந்தது. அயோத்தி மன்னன் மனதில் சந்தேகம் ஏற்பட்டது. இப்படி ஒரு தேரோட்டியா! இந்த வேகத்தில் தேரோட்ட யாராலும் முடியாதே. இவன் இப்படிப் போகிறானே! எதற்கும் இவன் யாரென சோதனை செய்து பார்ப்போம் என முடிவு செய்து, வாகுகா! அதோ! ஒரு மரம் தெரிகிறதே! அதில் பத்தாயிரம் கோடி காய் இருக்கும் என்கிறேன். சரியாவென்று எண்ணிப்பார்த்துக் கொள், என்றான். நளனும் அம்மரத்தின் கீழே தேரை நிறுத்தி அண்ணாந்து பார்த்து,நீங்கள் சொல்வது சரிதான், என்றான்.

அயோத்தி மன்னன் அவனிடம், நளனே! எதையும் எண்ணிப் பார்க்காமலேயே இதில் இத்தனை தான் இருக்கும் என்று சொல்லும் கலையில் நான் வல்லவன். நீயோ அதிவேகமாக தேரோட்டும் கலையில் வல்லவனாக இருக்கிறாய். நம் தொழில்களை ஒருவருக்கொருவர் சொல்லித் தருவோமா? என்று கேட்டான். கேட்டதுடன் நிற்காமல், நளனுக்கு எண்ணாமலேயே கணக்கிடும் கலையைச் சொல்லியும் தந்தான். பின் இருவரும் விதர்ப்ப நாட்டை அடைந்தன். தமயந்தியின் தந்தை வீமராசன் ஆச்சரியத்துடன், அயோத்தி மன்னா! நீ என்னைக் காண எதற்காக வந்தாய்? எனக்கேட்டார். உன்னைப் பார்க்கத்தான், என்று பதிலளித்தான் இருதுபன்னன். இதற்குள் குதிரைகளை இளைப்பாற வைத்தான் நளன். பின் சமையலறைக்குள் சென்றான். வந்திருப்பவனை தமயந்தியால் அடையாளம் காண முடியவில்லை. இவன் இவ்வளவு கருப்பாக இருக்கிறானே! ஏதும் வர்ணம் பூசி மறைத்திருப்பானோ? எதற்கு சந்தேகம்? என நினைத்தவள், ஒரு பணிப்பெண்ணை அழைத்து, நீ மறைந்திருந்து அந்த சமையல்காரன் செய்யும் வேலைகளைக் கவனித்து வந்து சொல், என்றாள். இன்னொருத்தியை அழைத்து, நீ என் மகன் இந்திரசேனனையும், மகள் இந்திரசேனையையும் அந்த சமையல்காரனுடன் நீண்டநேரம் விளையாட வை, என்றாள். அந்தக் குழந்தைகள் நளன் அருகே சென்றனர். அவர்களை அழைத்த நளன்,நீங்கள் என் பிள்ளைகள் போலவே உள்ளீர்கள். நீங்கள் யார்? என்று கேட்டான். தாயை விட்டு தந்தை பிரிந்த கதையையும், தங்கள் தந்தை நளமகாராஜா என்றும் அவர்கள் சொல்ல அவன் மனதுக்குள் அழுதான். குழந்தைகளிடம் அவன் பேசியதை பணிப்பெண் வந்து சொன்னாள். இன்னொருத்தி வேகமாக வந்து, இளவரசி! அந்த சமையல்காரன் தீயின்றியே சமைத்தான். அவன் உள்ளே சென்றதுமே உணவு தயாராகி விட்டது, என்றாள். இதைக்கேட்டதும் தமயந்தி மயக்கநிலைக்குப் போய்விட்டாள்.

ருப்பில்லாமல் சமைக்கிறான் என்றால், அவன் நிச்சயம் தன் கணவன் தான் என்பதை உறுதிப்படுத்திக் கொண்டாள் அவள். நெருப்பினால் அவனுக்கு எந்த இடைஞ்சலும் வராது என்ற வரத்தைத் தந்த அதே அக்னி பகவான், நெருப்பின்றியே சமைக்கும் வரத்தையும் அவனுக்கு கொடுத்திருந்தார். இந்த விஷயம் தமயந்திக்குத் தெரியும். தன் தந்தையிடம் ஓடினாள். தந்தையே! இங்கே சமையல்காரராக இருப்பவர் என் கணவர் தான், என்று உறுதியாகச் சொன்னாள். இதைக்கேட்ட வீமராசன் மனம் பதைத்து சமையலறைக்கு ஓடினான்.நளனிடம்,உண்மையைச் சொல்! நீ யார்? உன் உண்மை உருவைக் காட்டு, என்றான். நளனும் இதற்கு மேல் எந்த உண்மையையும் மறைக்க விரும்பவில்லை. அவன், கார்க்கோடகன் தனக்கு தந்த ஆடையை எடுத்து தன் மேல் போர்த்தினான். பழைய உருவத்தை அடைந்தான். சிவந்த மேனியைப் பெற்றான். இந்த சமயத்தில் அவனைப் பிடித்திருந்த சனிபகவானும், தனது காலத்தை முடித்துக் கொண்டு கிளம்பி விட்டார். நளன் புத்துணர்ச்சி பெற்றான். அவனைக் கண்ட தமயந்தி ஆனந்தக்கண்ணீர் வடித்தாள். தன் மேல் கொண்ட அன்பால், தன்னைக் கண்டுபிடிக்க அவள் எடுத்த முயற்சிகளை நளன் நாதழுக்க கூறி அவளை வாழ்த்திய நளன், காட்டிலே உன்னை விட்டுச்சென்ற இந்தக் கயவனைக் காணப் பிடிக்காமல், உன் விழித்திரைகளை நீர் நிறைத்து மறைக்கிறதா கண்ணே! என நளன் அவளிடம் கேட்டான். அவளோ அவனது பாதங்களில் விழுந்து, இல்லை அன்பரே! உங்களை மீண்டும் காண்போம் என்று நினைக்கவே இல்லை. இது ஆனந்தத்தில் வழியும் கண்ணீர், என்று அவனைக் கட்டியணைத்துக் கொண்டாள். குழந்தைகளும் ஓடிவந்து தந்தையை அணைத்துக் கொண்டனர்.

வாழ்க்கையில் மனிதன் நிறைய துன்பங்களை அனுபவிக்க வேண்டும். ஏனெனில், துன்பத்திற்குப் பிறகு வரும் இன்பத்தைத் தான் மனிதன் சுவைத்து அனுபவிக்க முடியும். நளனும், தமயந்தியும், குழந்தைகளும் பட்ட துன்பம் கொஞ்ச நஞ்சமா! இப்போது, அவர்கள் இன்பமலையின் உச்சத்தில் இருந்தனர். வீமராசனும், தன் மகளுக்கு மீண்டும் நல்வாழ்வு கிடைத்தது குறித்து மகிழ்ந்தான்.இந்த இன்பக்காட்சி கண்டு தேவர்கள் கூட மகிழ்ந்தார்கள். வானில் இருந்து பூமழை பொழிவித்தார்கள். நளனே! உன்னைப் போல் உயர்ந்த குணமுள்ளவர்கள் யாருமில்லை. எந்தச்சூழலிலும் நீ பிறர் உதவியைக் கேட்கவில்லை. ஏன்...உன் மாமனார் வீட்டில் கூட நீ தங்க மறுத்தாய்! கஷ்டங்களை மனமுவந்து அனுபவித்தாய். சனீஸ்வரன் உனக்கு தொல்லை கொடுப்பது தெரிந்தும், நீ ஆத்திரப்படவில்லை. உன்னிலும் உயர்ந்தவன் உலகில் இல்லை, என்று அசரிரீ எழுந்தது.இந்த நேரத்தில் சனீஸ்வரரே அங்கு வந்துவிட்டார்.நளனே! நல்லவனான ஒருவன், பாதை தவறும் நேரத்தில் அவனைச் சீர்படுத்த பல தொல்லைகளைத் தருகிறேன். அதை அனுபவப்பாடமாகக் கொண்டு அனுபவிப்பர்களை மீண்டும் நான் அணுகமாட்டேன். நீ நீதிதவறாத ஆட்சி நடத்தினாய் என்றாலும் சூது என்னும் கொடிய செயலுக்கு உடன்பட்டாய். இனி அத்தகைய நினைப்பே உனக்கு தோன்றக்கூடாது என்பதற்கே இத்தனை சோதனைகளையும் அனுபவித்தாய். இருப்பினும், சூதால் தோற்ற நீ போர் தொடுத்து உன் நாட்டைப் பெறுவது முறையல்ல. மன்னர்களுக்குரிய தர்மப்படி மீண்டும் சூதாடியே நாட்டை அடைவாய். உன் மனைவியின் கற்புத்திறனும் உன்னைக் காத்தது, என்றவர்,நீ என்னிடம் என்ன வரம் வேண்டுமானாலும் கேள், தருகிறேன், என்றார்.நாமாக இருந்தால் என்ன கேட்டிருப்போம்? அந்த புட்கரனைப் போய் பிடி. அவனிடமிருந்து நாட்டை எனக்கு வாங்கிக் கொடு, என்று தானே! பொதுநலவாதியான நளனோ, அப்போதும், சனீஸ்வரரே! என் சரிதம் இந்த உலகத்துக்கு பாடமாக இருக்கட்டும். என் கதையை யார் ஒருவர் கேட்கிறாரோ, அவரை நீர் பிடிக்கக்கூடாது. அவருக்கு எந்த சோதனையும் தரக்கூடாது, என்றான்.

நளனே! உன் கோரிக்கையை ஏற்கிறேன். உன் கதை கேட்டவர்களை நான் எக்காரணம் கொண்டும் அணுகமாட்டேன், இது சத்தியம், என்ற சனீஸ்வரன் அங்கிருந்து மறைந்து விட்டார்.பின், விதர்ப்பநாட்டரசன் வீமன் தன் மகள், மருமகன், பேரக்குழந்தைகளுக்கு விருந்து வைத்தான். அப்போது இருதுபன்னன் வந்தான். நளனே! உன்னை என்னிடம் பணி செய்ய வைத்த காரணத்துக்காக வருந்துகிறேன். உன் பணிக்காலத்தில் நான் உன்னிடம் ஏதேனும் கடுமையாகப் பேசியிருந்தால் அதைப் பொறுத்துக் கொள், நான் அயோத்தி கிளம்புகிறேன், என்று சொல்லிவிட்டு போய்விட்டான். இதன்பிறகு, வேலேந்திய வீரர்கள் பின் தொடர, தன் சொந்த நாடான நிடதநாட்டுக்கு கிளம்பினான். புட்கரனுடன் மீண்டும் சூதாடினான். முன்பு சனீஸ்வரரின் அருளால் தான் சூதில் வென்றோம் என்பதைக் கூட மறந்து விட்ட புட்கரன், ஆசையில் பகடைகளை உருட்ட நாட்டை இழந்தான். மீண்டும் ஆட்சிப்பொறுப்பை நளனிடம் ஒப்படைத்து விட்டு, தனது நாட்டுக்கு போய்விட்டான். தன் தலைநகரான மாவிந்தத்தில் இருந்த அரண்மனைக்கு மனைவி, குழந்தைகளுடன் நளன் சென்றான். மக்கள் மீண்டும் நளனை மன்னனாகப் பெற்ற மகிழ்ச்சியில் அவனை வாழ்த்தினர். மக்களின் முகம் மேகத்தைக் கண்ட மயில் போலவும், பார்வையற்றவனுக்கு பார்வை கிடைத்தால் ஏற்படும் பிரகாசம் போலவும் ஆனது. நளனின் இந்த சரித்திரத்தை தர்மபுத்திரருக்கு வியாசமுனிவர் சொல்லி முடித்தார்.தர்மபுத்திரா! கேட்டாயல்லவா கதையை! நளனின் இந்த துன்பத்தில் நூறில் ஒரு பகுதியைக் கூட நீ அனுபவிக்க வில்லை, அப்படித்தானே! இருப்பினும், சூதால் வரும் கேட்டை தெரிந்து கொண்டாய் அல்லவா! எனவே, நீயும் சூதால் தோற்றது பற்றி வருந்தாதே. உனக்கும் நல்ல நேரம் வரும், என்று சொல்லி விடை பெற்றார். நாமும் நளசரிதம் கேட்ட மகிழ்ச்சியுடன், சனீஸ்வரரின் அன்புத்தொல்லையில் இருந்து விடுபடுவோம். நல்ல பழக்கங்களை மேற்கொள்வோம். நல்லதை மட்டுமே சிந்திப்போம்.

நன்றி @ http://1234567.forumbuild.com/viewtopic.php?t=466&p=485
பாமரன்  /  at  6:30 PM  /  1 கருத்துரை

1 கருத்து(கள்):