வாழ்க தமிழ்!

Saturday, November 16, 2013

அரங்கனை எண்ணி வருந்துவதே அவள் வேலை

பாமரன்  /  at  5:36 PM  /  கருத்துரை இடுக

அவள்... தலைவனைப் பிரிந்திருக்கும் தலைவி. அவள் தலைவனோ திருவரங்கத்துக் கோயிலிலே பள்ளிகொண்டிருக்கும் திருவரங்கநாதர். கேட்பவர்க்கு வரங்களை அளவின்றி வரையாது வழங்கும் அவ்வள்ளலை அவள் இன்னும் வரையாதிருக்கிறாள்.

÷அரங்கனை எண்ணி வருந்துவதே அவள் வேலை. அதே வேலையை அந்த வேலையும் (கடலும்) செய்து கொண்டிருக்கிறது. அதனால் அவள் அந்தக் கடலைப் பார்த்துக் கேட்கிறாள்.

÷"ஏ! கடலே! நான்தான் அந்தத் திருமாலை எண்ணிப் புலம்புகிறேன். அவன் தனது துளசிமரு

மாலையைத் தந்து எனது பெரு மாலைத் தீர்க்க மாட்டானா? என்று ஏங்கித் தவிக்கிறேன். உனக்கென்ன கவலை? நீயும் ஏன் எப்பொழுதும் ஓயாமல் புலம்பிக் கொண்டிருக்கிறாய்? வாயினால் இரங்கிப் புலம்புகிறாய்?

÷மனத்துள் அவத்தைப்படும் நான் அவன் புனத்துளவ மாலைக்கு ஏங்கி, எனது முத்தாரத்தைக் கழற்றி எறிந்துவிட்டேன். நீயும் ஏன் முத்துக்களை வாரி இறைக்கிறாய்? நான் முத்தாரத்தைக் கழற்றி வீசியதால் என் அறை எங்கும் முத்துக்கள் சிதறிக் கிடக்கின்றன. உனது கரை எங்கும் ஏன் முத்துக்கள் சிதறிக்கிடக்கின்றன? என்ன காரணம்?

÷இந்தப் "பனிக்காலம்' எனக்குத் "தனிக்காலம்' ஆகிவிட்டது. என்னுடைய கைகள் மெலிந்துவிட்டன. சங்குவளையல்கள் தாமாகக் கைகளிலிருந்து கழன்று கிடக்கின்றன. கடலே! நீ ஏன் சங்குகளை வாரி இறைத்து வைத்திருக்கிறாய்? உனக்கும் காதல் நோய் ஏற்பட்டுள்ளதா?

÷என் காதலன் பாம்பணையில் உறங்கிக்கொண்டிருக்கிறான். எனக்கும் பாம்பணையில் உறங்க ஆசை. அதனால், எனது வீட்டுக் கோரைப் பாயை உதறி எறிந்துவிட்டேன். என்னைப் போல் நீயும் பாயலை உந்தித்தள்ளுகிறாய்! நான் அந்த "மாலை' எண்ணியெண்ணி "மாலை' அடைந்தேன். நீயும் தினந்தோறும் மாலை அடைகிறாய்! ஆம் மாலைப்பொழுதைச் சந்திக்கிறாய்! கடலே! உன் செயலும் என் செயலும் ஒன்றாகவே உள்ளது. நீயும் அந்த அரங்கனை விரும்புகிறாயோ..?

÷திருவரங்கக் கோயிலில் குடிகொண்டிருக்கும் அரங்கனை, ஆழி மணிவண்ணனை, பொற்றாமரை மலரில் பொலிகின்ற இலக்குமி தேவியின் நண்பனை கடலே நீயும் காதலிக்கிறாயோ?''

என்று தலைவி கடலைப் பார்த்துக் கேட்பதாகப் பிள்ளைப்பெருமாள் ஐயங்கார் தனது "திருவரங்கக் கலம்பகம்' என்னும் நூலில் ஒரு பாடல் பாடியுள்ளார். அந்த இனிய சந்தம் கொஞ்சும் பாடல் வருமாறு:""வாயின் இரங்கினை; ஆரம் எறிந்தனை;

   வால்வளை சிந்தினை தண்

பாயலை உந்தினை மாலை அடைந்தனை

   பாரில் உறங்கிலையால்;

கோயில் அரங்கனை, மாகனகம் திகழ்

   கோகனகம் பொலியும்

ஆயிழை நண்பனை; நீயும் விரும்பினை

   ஆகும் நெடுங்கடலே!''

பகிர்
இயல்(கள்): , , , , இதழ் வெளியான நாள்: Saturday, November 16, 2013

0 கருத்து(கள்):

காப்புரிமை © 2013 தமிழ்மொழி - தமிழால் நாமும் நம்மால் தமிழும் பயனுற வேண்டும் இத்தளத்தை நிர்வாகிப்பது தமிழ்மொழி.வலை
. சேவை வழங்குநர் பிளாக்கர்.