வாழ்க தமிழ்!

Sunday, November 3, 2013

தீபாவளியை கொண்டாடாதீர்கள். மீறிக் கொண்டாடுவது தன்மானத்துக்கு இழுக்கு...!

பாமரன்  /  at  6:05 AM  /  கருத்துரை இடுக

எந்தப் புராணத்தை எடுத்துப் பார்த்தாலும் இந்த அசுரர்கள் அல்லது இயக்கர்கள் தேவர்களைக் கொடுமை செய்ததாகவும் தேவர்களை மீட்கக் கடவுள் மீன், ஆமை, பன்றி போன்ற அவதாரம் எடுத்ததாகவும் சொல்கின்றன. இவையெல்லாம் அன்றைய ஆரிய – திராவிட இனங்களுக்கு இடையிலான போரைக் குறிக்கும் குறியீடுகள் ஆகும். சுரர் என்றால் குடிப்பவர் என்று பொருள். அசுரர் என்றால் குடியாதவர் என்று பொருள். 

ஆரியர் சோமபானம் குடித்ததாக இருக்கு வேதம் சொல்கிறது. சோமச் செடியை தெய்வமாகமே கும்பிட்டார்கள். வேள்வி செய்து அதில் குதிரை, மாடு, ஆடு, உடும்பு போன்றவற்றை வேக வைத்து அதனை ஆரியர்கள் ‘அவிர்ப்பாகம்’ என்று சொல்லி உண்டு மகிழ்ந்தார்கள். ஆனால் சோமபானம், சுரபானம் குடித்த ஆரியர் உயர்ந்தவர்களாகச் சித்தரிக்கப்பட்டார்கள். குதிரை, மாடு இவற்றைக் கொன்று சாப்பிட்டவர்கள் தேவர்கள் என்று அழைக்கப்பட்டார்கள். அவற்றை அன்பு, அருள், காருண்யம், ஒழுக்கம் காரணமாக வெறுத்து ஒதுக்கியவர்கள் அசுரர்கள் அல்லது அரக்கர்கள் அல்லது இயக்கர்கள் என்று இழித்துரைக்கப் பட்டார்கள். 

தந்தை கட்டளைப்படி பரசுராமன் தனது தாயையும் உடன் பிறந்த சகோதரனையும் கொன்று பெரிய ‘வீரன்” என்று பெயர் எடுக்கிறான். காமதேனு என்னும் பசுவை கார்த்தவீரியார்ச்சுனன் என்னும் அரசன் கவர்ந்து செல்கிறான். அதைச் சாக்கிட்டு அந்த அரசனையும் பூலோகத்தில் இருந்த சத்திரியர்களையும் (அசுரர்களை) ஒரு காலத்திலும் தலைதூக்காதபடி கோடரியால் வெட்டிக் கொன்று பூமிபாரத்தைத் தீர்த்தான். தாயைக் கொன்றவன், உடன்பிறப்பைக் கொன்றவன், அசுரர்களைக் கொன்றவன் எப்படி கடவுள் அவதாரமாக இருக்க முடியும்? இந்த அவதாரத்திடம் இருந்து பக்தர்கள் கற்றுக் கொள்ளும் பாடம் என்ன? யாரோ ஒரு அரசன் தவறு செய்தான் என்பதற்காக எல்லா அரசர்களையும் பூண்டோடு அழிப்பது எந்தவகை தர்மம்? பூலோகத்தில் அரசனாக ஆண்டவர்கள் எல்லாம் அசுரர்கள் என்பதுதான் இதற்குக் காரணமா? இராம – இராவண யுத்தம் ஆரிய – திராவிடர் இருசாராருக்கும் இடையிலான மோதல்தான். இப்படி நேரு தான் எழுதிய Discovery of India என்ற நூலில் தெளிவாகக் குறிப்பிட்டுள்ளார். 

இராமன் அரக்கர்களைக் கொல்லுவதற்கென்றே காட்டிற்கு வந்ததாகவும் அரக்கர்களைக் கொன்று ஒழிப்பதாக வாக்குக் கொடுத்து விட்டுக் காட்டிற்கு வந்ததாவும் சொல்கிறான். (ஆரண்ய காண்டம், 10 ஆவது சருக்கம்) “தீபாவளிப் பண்டிகை தமிழர்க்கு உரியது அன்று, தீபாவளிப் பண்டிகை புராண மதத்தைச் சார்ந்தது. அசுரர் கொலைக்காக தமிழர் மகிழ்ச்சி அடைதல் நன்று அன்று” என்று தமிழ்ப் பெரும் புலவர், பேராசிரியர் சைவப் பெரியார் கா.சுப்பிரமணிய(ன்) பிள்ளை தாம் எழுதிய ‘தமிழர் சமயம்‘ என்ற நூலில் குறிப்பிடுகிறார். “தீபாவளி என்பது வடநாட்டு மார்வாரிகளும் குஜராத்திகளும் கொண்டாடும் புதுக்கணக்கு புத்தாண்டுப் பிறப்பு விழா. தீபாவளிக்கும் தமிழர்க்கும் தீபாவளிக்கும் தமிழ் இலக்கியத்திற்கும் யாதொரு சம்பந்தமும் இல்லை” எனப் பேராசிரியர் சைவப்பெரியார் அ.கி. பரந்தாமனார் தாமெழுதிய “மதுரை நாயக்கமன்னர் கால வரலாறு” என்னும் நூலில் மிகத் தெளிவாக விளக்கியிருக்கிறார். “தீபாவளி பற்றிய வரலாற்றுக்கும் நரகாசுரன் புராணக் கதைக்கும் யாதொரு தொடர்பும் இல்லை.

 தீபாவளி என்பதன் பொருள் விளக்கு வரிசை” (தீபம் – விளக்கு, ஆவளி – வரிசை ) என்று அறிஞர் மயிலை சீனி வேங்கடசாமி எழுதிய “சமணமும் தமிழும்” என்ற நூலில் குறிப்பிடுகிறார். “ஆரியப் பார்ப்பனர்கள் கட்டுவித்த கற்பனைக் கதையே தீபாவளி” என்று சைவத் தமிழ் பெரியார் மறைமலை அடிகள் தான் எழுதிய “தமிழர் மதம்” என்ற நூலில் எழுதியுள்ளார். மேலும் அவர் “ஆரியரின் இத்தகைய வெறியாட்டு வேள்விகளை அழித்துவந்த சூரன் – இராவணன் முதலானோர் நிகரற்ற தமிழ் வேந்தர்களே, ஆரியர்களால் அரக்கர் என்று இகழ்ந்து பேசப்படுவராயினர்”. (வேளாளர் நாகரிகம் – பக்கம் 60)”மறைமலை அடிகள் தமிழர், அதிலும் தனித் தமிழ் வெறியர் அவர் அப்படித்தான் எழுதுவார்” என்று சிலர் சொல்லக் கூடும். 

அவர்களுக்காக இதோ இராமகிருஷ்ண பரமகம்சரின் சீடர் சுவாமி விவேகானந்தர் சொல்லியிருப்பதைத் தருகிறேன். படியுங்கள். “தென்னிந்தியாவில் வாழ்ந்த மக்களே இராமாயாணத்தில் குரங்குகள் என்றும் அரக்கர்கள் என்றும் அழைக்கப்பட்டிருக்கிறார்கள். (இராமாயணச் சொற்பொழிவுகளும் கட்டுரைகளும் பக்கம் 587-589) இவ்வாறு நடைமுறை உண்மைக்கும் வாழ்வியல் நடைமுறைக்கும் ஒத்துவராத, முரண்பட்டு இருக்கிற பொய்களை, கலையுரைத்த கற்பனைகளை எல்லாம் மதத்தின் பெயராலும் கடவுளின் பெயராலும் தமிழர்களைத் தாழ்வுபடுத்தும் இந்தத் தீபாவளியை இன்னும் எத்தனை காலத்துக்குத் தமிழர்கள் செக்குமாடுகள் போல் கொண்டாடிக் கொண்டு இருக்கப் போகிறார்கள்? தமிழ் மக்கள் எருமைகளைப் போல எப்போதும் ஈரத்திலேயே படுக்கிறார்கள், ஈரத்திலேயே சமையல், ஈரத்திலேயே உணவு, உயர்ந்த தமிழன் மருந்துக்கும் அகப்பட மாட்டான்! என்று மகாகவி பாரதியார் மனம் வெந்து சொன்னது இற்றைவரை சரியாகவே இருக்கிறது. 

தமிழர்களே சிந்திப்பீர்! ஆரியம் எம்மைத் தாழ்த்தும் தீபாவளியை கொண்டாடாதீர்கள். மீறிக் கொண்டாடுவது எமது தன்மானத்துக்கு இழுக்கு...!


Read More @ Nerudal.Com

பகிர்
இயல்(கள்): இதழ் வெளியான நாள்: Sunday, November 3, 2013

0 கருத்து(கள்):

காப்புரிமை © 2013 தமிழ்மொழி - தமிழால் நாமும் நம்மால் தமிழும் பயனுற வேண்டும் இத்தளத்தை நிர்வாகிப்பது தமிழ்மொழி.வலை
. சேவை வழங்குநர் பிளாக்கர்.