வாழ்க தமிழ்!

Sunday, October 13, 2013

காதல் நோய்க்கு மருந்து...

பாமரன்  /  at  7:01 AM  /  கருத்துரை இடுக

காளமேகப் புலவர் ஒருமுறை வெளியூர் பயணம் மேற்கொண்டிருந்தார். அப்போது, ஒரு பெண் ஓர் ஆட்டை வலுக்கட்டாயமாக இழுத்துச் சென்று கொண்டிருந்தாள். ஆட்டின் பரிதாபக் குரல் காளமேகத்தின் மனதை உலுக்கியது. ""பாவம் இந்த அப்பாவி ஆடு... விட்டுவிடம்மா'' என்றார்.
""ஆடு பாவம் என்று விட்டால், என் மகள் பாவத்தை யார் பார்ப்பது? ஆடு வெட்டி பூஜை செய்தால்தான் அவளது பித்து மாறும்'' என்றாள்.
""பித்துப் பிடித்திருக்கிறது என்கிறாயே, அப்படி என்னதான் செய்கிறாள்?''?
""சரியாகச் சாப்பிடுவதில்லை; தூங்குவதில்லை; எதையோ பறிகொடுத்தவள் போல் வெறித்தபடியே இருக்கிறாள். யார் பெயரையோ சொல்லிப் புலம்புகிறாள்'' என்றாள். காளமேகத்துக்குப் புரிந்துவிட்டது. அது காதல் நோய்தான் என்று! அவளுக்கு அறிவுரை கூறும் வகையில் ஒரு பாடலைப் பாடினார்.

""முந்நான்கில் ஒன்றுடையாள், முந்நான்கில் ஒன்றெடுத்து
முந்நான்கில் ஒன்றின்மேல் மோதினான் - முந்நான்கில்
ஒன்றெரிந்தால் ஆகுமோ? ஓ ஓ மடமயிலே!
அன்றனைந்தான் வரா விட்டால்''

முந்நான்கு என்றால் 12. இது மேஷம் (ஆடு), ரிஷபம் (காளை), மிதுனம், கடகம், சிம்மம், கன்னி, துலாம், விருச்சிகம், தனுசு, மகரம், கும்பம், மீனம் ஆகிய 12 ராசிகளைக் குறிக்கும்.
"யாரோ ஒரு வாலிபர் (காளை-ரிஷபம்), 
காதல் அம்பு (வில் அம்பு-தனுசு) தொடுத்து, 
உன் மகளை (கன்னி) வசப்படுத்திவிட்டான். அதனால் வந்த காதல் நோய்க்கு ஆட்டை (மேஷம்-ஆடு) பலிகொடுத்தால் தீருமோ? 
முட்டாள் பெண்ணே! அவளுடைய காதலன் வந்தால்தான் இந்த நோய் தீரும். அதற்கு உரிய வழியைத் தேடு' என்பதே இப்பாடலின் பொருள்.

பகிர்
இயல்(கள்): , , , , இதழ் வெளியான நாள்: Sunday, October 13, 2013

0 கருத்து(கள்):

காப்புரிமை © 2013 தமிழ்மொழி - தமிழால் நாமும் நம்மால் தமிழும் பயனுற வேண்டும் இத்தளத்தை நிர்வாகிப்பது தமிழ்மொழி.வலை
. சேவை வழங்குநர் பிளாக்கர்.