வாழ்க தமிழ்!

Sunday, October 13, 2013

என் உடலை மட்டுமே எடுத்துச் செல்ல முடியும்... என் அறிவை அல்ல

பாமரன்  /  at  7:16 AM  /  கருத்துரை இடுக


ஒரு பொருளானது தண்ணீரில் மூழ்கினால் அது தன் எடைக்குச் சமமான நீரை வெளியேற்றுகிறது என்ற அரிய உண்மையைக் கண்டறிந்து உலகிற்குக் கூறியவர் ஆர்க்கிமிடீஸ் என்ற அறிவியல் அறிஞர்.

 இந்த அறிவியல் உண்மை அவர் பெயராலேயே "ஆர்க்கிமிடீஸ் கோட்பாடு' என்று அழைக்கப்படுகிறது. கணிதம், பெüதிகம், வானவியல் போன்ற பல துறைகளில் இவர் மேதையாக விளங்கினார். சிசிலித் தீவில் உள்ள சைரக்யூஸ் என்னும் இடத்தில் கி.மு.287-இல் பிறந்தார்.

 நெம்புகோல் மற்றும் புவிஈர்ப்பு உருளை ஆகியவற்றைக் கண்டறிந்தவரும் இவரே. "இவ்வுலகை விட்டு வெளியே நிற்க எனக்கு ஓர் இடம் கிடைக்குமானால், பூமிப் பந்தையே நெம்புகோல் கொண்டு என்னால் புரட்டி விட முடியும்! என்று கூறி நெம்புகோல்களின் தத்துவத்தை விளக்கினார்.

 புவி ஈர்ப்பு விசையின் பயன்பாட்டின் அடிப்படையில் "தளங்களின் சமநிலை' என்ற நூலை எழுதினார். திரவ நிலையியல் தத்துவங்களை "மிதக்கும் பொருள்கள்' என்ற நூலின் மூலம் விளக்கினார். கணித ஜியோமிதியில் இவர் கண்டறிந்த உண்மைகள் அளவில்லாதவை.

 அன்றாட வாழ்வை வசதியாக்கப் பல எளிய இயந்திரங்களை இவர் உருவாக்கினார். சாய்தளத்தின் அடிப்படையில் திருகுகள் அமைகின்றன என்ற தத்துவத்தின் அடிப்படையில் கீழே தேங்கியுள்ள நீரை மேலேற்ற ஒருவிதத் திருகு போன்ற கருவியையும் கப்பியையும் வடிவமைத்து நீரை மேலே எற்றிக்  காட்டினார்.

 சைரக்யூஸ் நாட்டு மன்னர் ஹீரானுக்கு, அவருடைய கிரீடத்தில் தங்கத்துடன் வெள்ளியை அரண்மனைப் பொற்கொல்லர் கலந்திருப்பாரோ என்ற சந்தேகம் ஏற்பட்டது. ஆனால் அழகிய வேலைப்பாடுகள் நிறைந்த அந்த கிரீடத்தை உருக்கிப் பரிசோதிக்கவும் மனமில்லாதவராக இருந்தார்.

 அரசர், ஆர்க்கிமிடீஸிடம் இந்தப் பிரச்னைக்கு ஒரு தீர்வு அளிக்குமாறு கேட்டுக் கொண்டார்.
 குளியல் தொட்டியில் குளித்துக் கொண்டிருந்த ஆர்க்கிமிடீஸ் "யுரேகா... யுரேகா...' என்று கத்தியபடியே அரண்மனைக்கு ஓடிச்சென்று தாம் கண்டறிந்த உண்மையை விளக்கினார். அதுவே "ஆர்க்கிமிடீஸ் கோட்பாடு' ஆகும். இக் கோட்பாட்டின் அடிப்படையிலேயே கப்பல்கள் உருவாக்கப்படுகின்றன.

 இவருக்கு எழுபது வயதானபோது ரோமாபுரிக்கும் சிசிலிக்கும் போர் மூண்டது. இரும்பினால் செய்யப்பட்ட பிரமாண்டமான உருளைக் குண்டுகளை, மிகப் பெரிய கவண் பொறியில் வைத்து அடித்து ரோமானியக் கப்பல்களின் மீது வீசி, அவற்றை கடலில் மூழ்கடித்தார்.
 மிகப் பெரிய லென்சுகளை உருவாக்கி, அவற்றின் மூலம் சூரிய ஒளியைக் குவித்து, அந்த ஒளிக்கற்றைகளை எதிரி நாட்டுப் பாய்மரக் கப்பல்களின் மீது விழச் செய்தார். இதனால் அந்தப் பாய்மரங்கள் தீப்பிடித்து சேதமடைந்தனவாம்.

 ஆனால் இதற்கெல்லாம் ரோமானியர் சளைக்கவில்லை. இறுதியாக சிசிலியைக் கைப்பற்றினர். அவர்கள் முதலில் கைது செய்ய விரும்பியது ஆர்க்கிமிடீûஸ மட்டுமே!  ஆர்க்கிமிடீஸ் கணித ஆராய்ச்சியில் மூழ்கிவிட்டால் உலகையே மறந்துவிடுவார். ரோமானியர்கள் சிசிலியைக் கைப்பற்றிய அன்றும் மணலில் ஏதோ கணக்குகளைப் போட்டுக் கொண்டிருந்தார். அவரைக் கண்ட ரோமானிய வீரன் ஒருவன் அவரை வெட்டி வீழ்த்தினான்.

 இறக்கும் தறுவாயிலும், "இன்னும் சில மணி நேரம் தாமதமாக வந்திருந்தால் ஓர் அரிய கணித உண்மை உலகுக்குக் கிடைத்திருக்கும்! உங்களால் என் உடலை மட்டுமே எடுத்துச் செல்ல முடியும்... என் அறிவை அல்ல' என்று கூறியபடியே உயிர்நீத்தார் அந்த மாமேதை! -ந.லெட்சுமி, கடுவெளி.

பகிர்
இயல்(கள்): , , , , , இதழ் வெளியான நாள்: Sunday, October 13, 2013

0 கருத்து(கள்):

காப்புரிமை © 2013 தமிழ்மொழி - தமிழால் நாமும் நம்மால் தமிழும் பயனுற வேண்டும் இத்தளத்தை நிர்வாகிப்பது தமிழ்மொழி.வலை
. சேவை வழங்குநர் பிளாக்கர்.