வாழ்க தமிழ்!

Sunday, October 13, 2013

சிறந்த வீரன்!

பாமரன்  /  at  7:11 AM  /  கருத்துரை இடுக

தனது நாட்டு வீரர்களுள் சிறந்த வீரன் ஒருவனைத் தேர்ந்தெடுத்துப் பரிசளிக்க விரும்பினார், அரசர்.
 அரசரும் அமைச்சரும் சிறந்த வீரனைக் கண்டறிய மாறுவேடத்தில் புறப்பட்டார்கள்.
 ஓர் இடத்தில் நூறு சிலம்பாட்ட வீரர்களின் மத்தியில் ஒருவனாக நின்று கம்பைச் சுழற்றி வீசி அனைவரையும் அடித்து விரட்டினான் ஒரு சிலம்பாட்ட வீரன்.
 ""அரசே, இவன் வீரன்'' என்றார் அமைச்சர்.
 அரசர், ஆமாம் என்பது போலத் தலையசைத்துவிட்டு பயணத்தைத் தொடர்ந்தார்.
 அடுத்து ஓர் இடத்தில், ஐம்பது வாள் வீரர்களைத்ச தனி ஒருவனாக நின்று வாட்போர் புரிந்து ஓடச் செய்தான், ஒரு வாள் வீரன்.
 ""ஊம்... இவனும் வீரன்தான்...'' என்றார் அமைச்சர்.
 ""ஆமாம்... மேலும் பார்ப்போம்'' என்றார் அரசர்.
 வேறு ஓரிடத்தில் கோயில் யானை ஒன்று மதம் பிடித்து, பாகனைத் தூக்கி வீசிவிட்டு ஓடிவந்து கொண்டிருந்தது.
 அரசரும் அமைச்சரும் குதிரைகளை வீதியின் ஓரமாக நிறுத்தினர்.
 மக்கள் பயத்தால் அலறியடித்துக் கொண்டு ஓடிக்கொண்டிருந்தனர்.
 அப்போது எங்கிருந்தோ வந்த ஓர் இளைஞன், மதம் பிடித்த அந்த யானையை அடக்கி, அதை ஒரு கம்பத்தில் கட்டி வைத்தான்.
 ""ஆகா! இவன் பெரும் வீரன்''என்றார் உற்சாகமாக அமைச்சர்.
 அரசரும் தலையாட்டினார். பின்னர் இருவரும் அரண்மனையை நோக்கிச் செல்ல ஆரம்பித்தனர். அப்போது ஓர் இடத்தில் கூச்சல் கேட்டு, இருவரும் அங்கே சென்றனர்.
 அங்கே, மக்கள் கூட்டத்தின் நடுவே ஓர் இளைஞன் நின்றுகொண்டிருந்தான். அவனுக்கு எதிரில் நின்ற ஒருவர் அவனைக் கடுஞ்சொற்களால் திட்டிக் கொண்டிருந்தார். உலகிலுள்ள அத்தனை இழிவான சொற்களையும் கொண்டு அந்த இளைஞனைத் திட்டினார். அவ்வப்போது அவனை அடிக்கப் போவது போலக் கையையும் ஓங்கிக் கொண்டிருந்தார்.
 ஆனால், அந்த இளைஞனோ, சற்றும் முகம் சுளிக்காமல் இதமான வார்த்தைகலால், உண்மை நிலையை அந்த மனிதருக்கு விளக்கிக் கொண்டிருந்தான்.
 இறுதியில் உண்மையை உணர்ந்து அமைதியடைந்த அந்த மனிதர், ""தம்பி, உண்மை அறியாமல் உன்னை ஏசிவிட்டேன். என்னை மன்னித்து விடு'' என்று கூறிவிட்டுச் சென்றார்.
 
 மறுநாள், அரசவையில் -
 மன்னர் கையில் தங்கக்காசுகள் கொண்ட பரிசுக்குரிய பையை வைத்துக் கொண்டு தனது இருக்கையில் அமர்ந்திருந்தார்.
 ""அரசே, சிறந்த வீரனைத் தேர்ந்தெடுத்து விட்டீர்களா?'' கேட்டார் அமைச்சர்.
 ""அதோ பாருங்கள்...'' என்றார் மன்னர்.
 அங்கே, அவர்கள் இறுதியாகப் பார்த்த அந்த இளைஞனை ஒரு காவலாளி அழைத்து வந்து கொண்டிருந்தான்.
 வியப்புற்ற அமைச்சர், ""அரசே, மத யானையை அடக்கிய இளைஞன் வீரன் இல்லையா?'' என்று கேட்டார்.
 ""ஊம்... அவன் வீரன்தான். ஆனால் சினமுற்ற மனம், மதம் பிடித்த யானையை விடவும் கொடியது. எதிரில் நின்றவர் முகம் கடுத்து இழிச்சொற்களால் திட்டியபோதும் கூட கொதிப்படைந்த தன் மனத்தை அடக்கி, தன் முகம் கோணாமல் நிதானமாகப் பேசிய இளைஞனே சிறந்த வீரன்'' என்று சொல்லி, அந்த இளைஞனுக்குப் பரிசை அளித்தார் மன்னர்.


நாம் பார்க்கும் பார்வை ஒவ்வோரு நொடிப்பொழுதிலும் மாற்றத்தை ஏற்றுக்கொள்கிறது. ஆனால் மணம்தான் ஏற்க மறுக்கிறது


பகிர்
இயல்(கள்): , , , , , இதழ் வெளியான நாள்: Sunday, October 13, 2013

0 கருத்து(கள்):

காப்புரிமை © 2013 தமிழ்மொழி - தமிழால் நாமும் நம்மால் தமிழும் பயனுற வேண்டும் இத்தளத்தை நிர்வாகிப்பது தமிழ்மொழி.வலை
. சேவை வழங்குநர் பிளாக்கர்.