வாழ்க தமிழ்!

Sunday, October 6, 2013

சீறாப்புராணம் - உமறுப்புலவர் சிறு குறிப்பு

பாமரன்  /  at  8:21 PM  /  1 கருத்துரைஉமறுப்புலவர்: 

                        உமறுப்புலவரின் தந்தையார் செய்கு முகமது அலியார் என்பவர். இவர் சிலகாலம் திருநெல்வேலியை அடுத்த நாகலாபுரத்திலும் சிலகாலம் எட்டையபுரத்திலும் வாழ்ந்து வந்தார். உமறுப்புலவர் எட்டையபுர அரசவைக் கவிஞர் கடிகைமுத்துப் புலவரிடம் தமிழ் கற்றார். தமிழ் இலக்கண, இலக்கியங்களில் புலமை பெற்ற இவர் இளமையில் வாலைவாரிதி என்னும் வடநாட்டுப் புலவரை வாதில் வென்றார் என்பர். உமறுப்புலவர் தம் ஆசிரியருக்குப் பின்னர் எட்டையபுர அவைக்களப் புலவராகத் திகழ்ந்தார். இவரது காலம் கி.பி 17 ஆம் நூற்றாண்டாகும். அக்காலத்தில் தென்பாண்டிச் சேது மண்டலத்தை ஆண்ட அரசர் விசய ரகுநாத சேதுபதி. அவரின் முதலமைச்சராக விளங்கியவர் வள்ளல் சீதக்காதி (சையது அப்துல் காதர்) என்ற இசுலாமியத் தமிழர்.

                  இவர் இசுலாமியச் சமயக் கருத்துகளையும் முகமது நபியின் வரலாற்றையும் அறிந்துகொள்ளத் தமிழில் ஒரு நூல் இயற்றப்பட வேண்டும் என்று விரும்பினார். உமறுப் புலவரைச் சந்தித்தார். தம் வேண்டுகோளைத் தெரிவித்தார். அவருடைய விருப்பத்தின்படி உமறுப்புலவர் சீறாப்புராணத்தை இயற்றத் தொடங்கினார். ஆனால் நூல் முற்றுப் பெறும் முன்னரே வள்ளல் சீதக்காதி இறந்துவிட்டார். அந்நிலையில் மற்றொரு செல்வரான அபுல்காசிம் மரைக்காயர் உமறுப்புலவருக்குப் பேராதரவு தந்தார். அவர் இல்லத்தில் தங்கியிருந்து சீறாப் புராணத்தை இயற்றி முடித்தார் உமறுப்புலவர். மரைக்காயர் வீட்டு வாயிலிலேயே அரங்கேற்றம் செய்தார். கம்பர் தம் காப்பியத்தில் ஆயிரம் பாடலுக்கு ஒருமுறை சடையப்ப வள்ளலைப் புகழ்ந்து பாடியது போல், உமறுப்புலவர் அபுல்காசிம் மரைக்காயரின் உதவியைச் சீறாப்புராணத்தில் நூறு பாடல்களுக்கு ஒருமுறை புகழ்ந்து பாடியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

சீறாப்புராணம்:

                         ‘சீறாப்புராணம் ‘சிந்தையள்ளும் சீறா’ எனப் போற்றப் பெறுவது சீறாப்புராணம். ‘சீறத்’ என்னும் அரபுச் சொல்லுக்குப் பொருள் ‘வரலாறு’ என்பதாகும். நபிகள் நாயகத்தின் பிறப்பு, இளமை, திருமணம், ஆற்றல், வெற்றி ஆகிய வரலாற்றைக் கூறுவதால் இந்நூல் சீறாப்புராணம் எனப் பெயர் பெற்றது. கருத்துச் செறிவும் சொல் இனிமையும் உடைய இக்காப்பியம் விலாதத்துக் காண்டம், நுபுவ்வத்துக் காண்டம், ஹிஜிரத்துக் காண்டம் என்னும் மூன்று காண்டங்களைக் கொண்டது. ‘விலாதத்து’, ‘நுபுவ்வா’, ‘ஹிஜ்ரா’ ஆகிய அரபுச் சொற்களுக்கு முறையே பிறப்பு, தீர்க்கதரிசனம், இடம் பெயர்தல் என்பன பொருளாகும்.

                        இந்நூலில் 92 படலங்களும் 5027 விருத்தப்பாக்களும் உள்ளன. தமிழ்க் காப்பிய மரபுகளை நன்கு உணர்ந்திருந்த உமறுப்புலவர் கம்பராமாயணத்தில் மிகுந்த ஈடுபாடு கொண்டவர். கம்பரின் தாக்கம் இவரது பாடல்களில் காணப்படுவதால் இவருக்கு ‘இரண்டாம் கம்பர்’ என்ற சிறப்புப் பெயரும் உண்டு. சீறாப்புராணத்தில் காப்பிய மரபின்படி நாட்டுப்படலமும் நகரப்படலமும் அமைத்துள்ளார். காப்பியக் களம் பாலைவனமாகிய அரபு நாடாயினும், தமிழ் நாட்டில் உள்ள மரம், செடி கொடிகளும் பறவைகளும் விலங்குகளும் விளங்கக் காப்பிய அழகுடன் வருணனைகளை அமைத்துள்ளார்.

                          நான்கு நிலங்களாகப் பகுத்து இயற்கை வளத்தை விளக்கியுள்ளார். ஆறுகள் இல்லாத பாலைவன நாட்டில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடும் காட்சிகளைக் காப்பியத்தில் நாம் காணலாம். தமிழ் நாட்டு மலைகளில் வாழும் குறவர், குறத்தியர் பண்பாட்டை அரபு நாட்டில் வைத்துப் புலப்படுத்தியுள்ளார் ஆசிரியர். நகரப்படலத்தில் மக்கா நகரம் மதுரை நகரம் போலவே காட்சியளிக்கிறது. மக்கா நகரக் கடைகளில் சந்தனம், அகில், தந்தம் முதலிய தமிழ்நாட்டுப் பொருள்களே விற்கப்படுகின்றன. இவ்வாறு சீறாப்புராணத்தில் புலவரின் தமிழ்நாட்டுப் பற்று விளங்குகிறது என்பர் மு.வ.


SRC: http://www.srmuniv.ac.in/


பகிர்
இயல்(கள்): , , , , , இதழ் வெளியான நாள்: Sunday, October 6, 2013

1 comment:

  1. பயனுள்ளத் தகவலுக்கு நன்றி

    ReplyDelete

காப்புரிமை © 2013 தமிழ்மொழி - தமிழால் நாமும் நம்மால் தமிழும் பயனுற வேண்டும் இத்தளத்தை நிர்வாகிப்பது தமிழ்மொழி.வலை
. சேவை வழங்குநர் பிளாக்கர்.