வாழ்க தமிழ்!

Thursday, October 17, 2013

நந்திக் கலம்பகம்

பாமரன்  /  at  6:49 AM  /  கருத்துரை இடுக

முதல் கலம்பக நூலாக நந்திக் கலம்பகம் என்ற நூல் காணப்படுகின்றது. நண்பர்களே! இந்த நந்திக் கலம்பகம் என்ற நூலைப் பற்றிச் சிறிது காண்போமா?
நந்திக் கலம்பகம் என்ற நூல் பல்லவ மன்னர்களில் ஒருவன் ஆகிய மூன்றாம் நந்திவர்மன் என்பவன் மீது பாடப்பட்டது ஆகும். இந்நூலை இயற்றிய ஆசிரியரின் பெயர் தெரியவில்லை.
4.2.1 மரபு வழி வரலாறு
இந்த நூலைப் பற்றிய மரபு வழிச் செய்தி ஒன்று உள்ளது. அதைப் பார்ப்போமா? நந்திவர்மனின் தந்தைக்கு இரண்டு மனைவியர். ஒரு மனைவிக்குப் பிறந்தவன் நந்திவர்மன். மற்று ஒரு மனைவிக்குப் பிறந்தவர்கள் நால்வர். இந்த நால்வரும் நந்திவர்மனுக்குப் பின் பிறந்தவர்கள். நந்திவர்மன் இளமைப் பருவம் அடைந்ததும் அவன் தந்தை இறந்து விட்டார். எனவே, நந்திவர்மன், தன் தம்பியர் நால்வரையும் துரத்திவிட்டுத் தான் முடி சூடிக் கொண்டான். இந்தத் தம்பியர் நால்வருள் ஒருவரே நூல் ஆசிரியர் என்றும் கருதப்படுகிறது.
நந்திவர்மனால் துரத்தப்பட்ட தம்பியர் நால்வரும் மீண்டும் ஆட்சியைப் பிடிக்க முடிவு செய்தனர். எனவே ஒருவன் மந்திர வித்தையைப் படித்தான். ஒருவன் தந்திர வித்தையைப் படித்தான். மற்று ஒருவன் வாள் வித்தையைப் படித்தான். இன்னும் ஒருவன் தமிழ் நூல்களைக் கற்று நூல் இயற்றும் திறமை பெற்றான்.
பின், இவர்கள் நால்வரும் ஒன்று சேர்ந்து நந்திவர்மனை எதிர்த்துப் போர் செய்தனர். ஆனால், போரில் தோல்வி அடைந்தனர். அதன் பிறகே இந்த நூல் பாடப்பட்டது என்று கருதப்படுகிறது.
நந்திக் கலம்பகம் என்ற இந்த நூலை இயற்றிய பின்பு ஆசிரியர் துறவு மேற்கொண்டு வாழ்ந்து வந்தார். வீடுகள் தோறும் சென்று பாடல்களைப் பாடிப் பிச்சை எடுத்து வாழ்ந்து வந்தார். அவ்வாறு பாடும் போது தாம் இயற்றிய நந்திக் கலம்பகப் பாடல்கள் சிலவற்றையும் பாடுவார்.
• கணிகையின் பாடல்
ஒரு நாள் புலவர், நந்திவர்மனின் தலைநகர் ஆகிய காஞ்சிபுரத்துக்கு வந்தார். ஒரு கணிகையின் வீட்டின் முன் நின்று சில நந்திக்கலம்பகம் பாடல்களைப் பாடினார். இதைக்கேட்ட அந்தக் கணிகை மனம் மகிழ்ந்தாள். புலவர் பாடிய பாடல்களை எழுதி வைத்துக் கொண்டாள். அந்தக் கணிகை, தான் எழுதி வைத்துள்ள பாடல்களைத் தன் மாளிகையின் மேல் மாடத்தில் இருந்து இரவில் பாடிக் கொண்டிருந்தாள். ஊர்க் காவலர்கள் நகரைச் சுற்றி வந்து கொண்டிருந்தனர். கணிகை பாடும் பாடல்களைக் கேட்டனர். கணிகை பாடிய பாடல்களைக் கேட்டு மகிழ்ந்த காவலர்கள்,
வான்உறு மதியை அடைந்ததுஉன் வதனம்
     மறிகடல் புகுந்ததுஉன் கீர்த்தி
கான்உறு புலியை அடைந்ததுஉன் வீரம்
     கற்பகம் அடைந்ததுஉன் கரங்கள்
தேன்உறு மலராள் அரிஇடம் புகுந்தாள்
     செந்தழல் அடைந்ததுஉன் தேகம்
நானும்என் கலியும் எவ்விடம் புகுவேம்
     நந்தியே நம்தயா பரனே
   (நந்திக் கலம்பகம்: - 113)
TVU - c0123 - Audio Button
என்ற பாடலைக் கேட்டனர்.

(வான் உறு = வானத்தில் தோன்றும்; மதி = சந்திரன்; வதனம் = முகம்;மறி = மோதுகின்ற; கீர்த்தி = புகழ்; கான் = காடு; தேன் உறு மலராள் = திருமகள்; அரி = திருமால்; தழல் = நெருப்பு; தேகம் = உடம்பு; கலி = வறுமைத் துன்பம்; தயாபரன் = அருள் நிறைந்தவன்) 
நந்தி என்ற பெயர் உடைய மன்னனே! அருளில் மேம்பட்டவனே! நீ இப்போது இறந்து விட்டாய். எனவே உன் முகத்தின் ஒளி வானத்தில் உள்ள நிலவில் சேர்ந்துவிட்டது. உன் புகழ் கடலில் மூழ்கிவிட்டது. உன் வீரம் காட்டில் வாழும் புலியிடம் சேர்ந்து விட்டது. உன் கொடைத்திறம் கற்பக மரத்திடம் சேர்ந்து விட்டது. திருமகள் திருமாலிடம் சேர்ந்து விட்டாள். இவை எல்லாம் போய் விட்டன. எனவே, உன் உடல் நெருப்பிடம் சேர்ந்து விட்டது. ஆனால் நானும் என் வறுமையும் எங்கே போய் வாழ்வோம் என்ற பொருளில் இப்பாடல் அமைகின்றது.
• கணிகையின் விடுதலை
மன்னன் இறந்துவிட்டதாகச் செய்தி உள்ளதை ஊர்க் காவலர்கள் அறிந்தனர். உடனே தம் தலைவனிடம் இதைக் கூறினர். தலைவன் அரசனிடம் அறிவித்தான். அரசன் அந்தக் கணிகையை அழைத்து வருமாறு கட்டளை இட்டான். கணிகையைக் காவலர்கள் அழைத்து வந்தனர். கணிகை நடந்ததைக் கூறினாள். அரசன் அந்தத் துறவி வந்தால் தன்னிடம் அழைத்து வரும்படி ஆணை இட்டான்.
ஒரு நாள் துறவி வந்தார். அவரைக் காவலர்கள் அரசனின் முன் கொண்டு வந்தனர்.
அரசன் துறவியைக் கண்டான். அவர் வரலாற்றைக் கேட்டான். தன் தம்பி என உணர்ந்தான். மகிழ்ச்சி அடைந்தான். கலம்பகப் பாடல்களைப் பாடுமாறு அரசன் வேண்டினான். துறவி முதலில் மறுத்தார். பின் ஒப்புக் கொண்டார்.
4.2.2 பாடப்பட்ட முறை

 
பச்சை ஓலையால் நூறு பந்தல்கள் போட வேண்டும். ஒவ்வொரு பந்தலிலும் மன்னன் அமர்ந்து ஒவ்வொரு பாடலாகக் கேட்க வேண்டும். ஒரு பாடல் முடிந்ததும் அந்தப் பந்தல் எரிந்துவிடும். கடைசிப் பாடலைக் கேட்கும் முன் பந்தலில் விறகுகளை அடுக்கி அதன் மேல் படுத்துக் கொண்டு கேட்க வேண்டும். கடைசிப் பாட்டு முடிந்ததும் உன் உடலிலும் விறகிலும் தீப்பற்றி எரியும். நீ இறப்பாய். இதற்குச் சம்மதமா என்று துறவி கேட்டார். மன்னவனும் சம்மதித்தான். துறவி கூறியவாறு பந்தல்கள் போடப்பட்டன. ஒவ்வொரு பாடலைக் கேட்கும் போதும் அந்தப் பந்தல் எரிந்தது.
 மன்னனின் தமிழ்ப்பற்று
இறுதியில் மன்னன் விறகை அடுக்கி அதன் மேல் படுத்தான். துறவி முற்கூறிய ''வான் உறு மதியை" என்று தொடங்கும் பாடலைப் படித்தார். மன்னன் உடலில் தீப்பற்றி எரிந்தது. மன்னன் இறந்தான். தமிழ் மொழி அல்லாத பிற மொழியைச் சேர்ந்த மன்னன் ஆகிய நந்திவர்மன் தமிழ் மொழி மீது கொண்ட பற்றின் காரணமாக உயிர் விட்டான் என்பதை
இந்த மரபு வழியாக வரும் செய்தி மூலம் அறியமுடிகிறது.

பகிர்
இயல்(கள்): , , , , இதழ் வெளியான நாள்: Thursday, October 17, 2013

0 கருத்து(கள்):

காப்புரிமை © 2013 தமிழ்மொழி - தமிழால் நாமும் நம்மால் தமிழும் பயனுற வேண்டும் இத்தளத்தை நிர்வாகிப்பது தமிழ்மொழி.வலை
. சேவை வழங்குநர் பிளாக்கர்.