வாழ்க தமிழ்!

Tuesday, October 1, 2013

தமிழர்களின் உயர்ந்த உள்ளம்!

பாமரன்  /  at  6:18 AM  /  1 கருத்துரை

By மு.சிவராசன்

தீமை எவையேனும் இருப்பினும் அவற்றை அழித்து அல்லது நீக்கிவிட்டு, "நன்றின்பால் உய்க்கும்' நல்லறிவு பெற்றவர்களாகப் பண்டைத் தமிழர்கள் விளங்கினர். தாமும் தம்மைச் சேர்ந்தவர்களும் நன்றாக இருந்தால்போதும் என எண்ணாமல், நாடும் அரசும் நன்றாக இருக்க வேண்டும் என்று மனதார விரும்பினர். இதற்குப் பத்துப்பாட்டு, எட்டுத்தொகை நூல்களில் எண்ணற்ற சான்றுகள் உள்ளன.
ட்டுத்தொகை நூல்களுள் "ஐங்குறுநூறு' என்னும் நூல், திணைக்கு நூறாக ஐந்து திணைகளுக்கும் ஐந்நூறு பாடல்கள் அடங்கியது. மருதத் திணையில் ஓரம்போகியார் என்னும் புலவர் பாடிய பாடல்கள், பத்து பத்தாகத் தொகுக்கப்பட்ட நூறு பாடல்களை உடைய இம் முதல் பத்து "வேட்கைப் பத்து' ஆகும்.
வேட்கைப் பத்து என்பது, தலைவன் தலைவியைத் துறந்து பரத்தையின்பால் சேர்ந்தொழுகிப் பின்னர் தாம் தகாத வழியில் செல்கிறோம் என்பதை உணர்ந்து திருந்தி, தலைவியிடம் வந்து சேர்கிறான். அவ்வாறு தான் புறத்தே சென்றபொழுதில், ""நீங்கள் என்ன நினைத்தீர்கள்?'' எனத் தோழியிடம் தலைவன் கேட்டதற்குத் தோழி கூறிய கூற்றாக இப்பத்துப் பாடல்கள் அமைந்துள்ளன. இவற்றில் தலைவியும் தானும் "என்ன கருதினார்கள்' என்பதை உரைக்கிறாள் தோழி.
லைவனைச் சாடவில்லை, சாபமிடவில்லை. மாறாகத் தமது அரசனும் நாடும் நன்றாக வாழவேண்டும் என்று வாழ்த்துகிறார்கள். தலைவன் சிறப்பாக வாழட்டும் என்று விரும்புகிறார்கள். ஏனெனில், நாடும் அரசனும் தலைவனும் நன்றாக இருந்தால், தலைவன் நல்வழிப்பட்டுத் தம்மைச் சேர்ந்துவிடுவான் என்பது அவர்களின் நம்பிக்கை. அவர்கள் அரசனையும் நாட்டையும் எப்படி வாழ்த்துகிறார்கள் பாருங்கள்!

""வாழி ஆதன்! வாழி அவினி!
நெல்பல பொலிக! பொன் பெரிது சிறக்க!
எனவேட் டோளே; யாயே, யாமே,
நனைய காஞ்சிச் சினைய சிறுமீன்
யாணர் ஊரன் வாழ்க!
பாணனும் வாழ்க! என வேட்டோமே''

வ்வாறு தாயும், தலைவியும், தோழியும் வாழ்த்தி இருந்த நிலையைத் தோழி உரைக்கிறாள். நாட்டில் நெல் மிகுதியாக விளையட்டும், பொன் மிகுதியாகக் கிடைக்கட்டும் என்று வாழ்த்துகிறார்கள். நெல் வேளாண்மை வளத்தையும், பொன் செல்வ வளத்தையும் குறிப்பதாயிற்று. இதுபோலவே மற்ற பாடல்களில் வரும் வாழ்த்துகளும் மிகவும் படித்து மகிழத்தக்கதாகும்.

""விளைக வயலே! வருக இரவலர்!
பால்பல ஊறுக! பகடுபல சிறக்க!
பகைவர் புல்ஆர்க! பார்ப்பார் ஓதுக!
பசிஇல் ஆகுக! பிணி சேண் நீங்குக!
வேந்துபகை தணிக! ஆண்டுபல நந்துக!
அறம்நனி சிறக்க! அல்லது கெடுக!
அரசு முறை செய்க! களவுஇல் ஆகுக!
நன்று பெரிது சிறக்க! தீது இல் ஆகுக!
மாரி வாய்க்க! வளம் நனி சிறக்க!
 
வ்வாறு வாழ்த்துவதிலிருந்து, பண்டைத் தமிழர்களின் உயர்ந்த உள்ளத்தை நினைத்து நாம் பெருமை கொள்ள வேண்டும்.

பகிர்

1 comment:

காப்புரிமை © 2013 தமிழ்மொழி - தமிழால் நாமும் நம்மால் தமிழும் பயனுற வேண்டும் இத்தளத்தை நிர்வாகிப்பது தமிழ்மொழி.வலை
. சேவை வழங்குநர் பிளாக்கர்.