வாழ்க தமிழ்!

Monday, September 30, 2013

சாணக்கிய நீதி

பாமரன்  /  at  8:02 PM  /  2 கருத்துரைகள்

             சந்திரகுப்த மௌரியர் காலம் பேரரசுக் கோட்பாடு வளர்ச்சியுற்ற காலம். கௌடில்யரின் அர்த்த சாஸ்திரத்தில் குறிக்கப் பெற்ற "சக்ரவர்த்தி க்ஷேத்திரம்' என்பது மௌரியப் பேரரசைக் குறிப்பதன்று. பொதுவாக "பேரரசு' என்பதற்கு அவர் இட்ட பெயர் அது.

கௌடில்யர் எனும் சாணக்கியர் வழி வழி மன்னராட்சியைப் போற்றினார். சந்திரகுப்த மௌரியரின் ஆட்சி விரைவில் கவிழும் என்பதையும் முன்பே உணர்ந்தி ருந்தார்.

அதனை உறுதிப்படுத்துவதுபோல சந்திரகுப்தரின் அரண்மனைச் சம்பவங்கள் அடுத்தடுத்து நிகழ்ந்தன.

கருவுற்றிருந்த சந்திரகுப்தரின் மனைவி பட்டத்தரசி சந்திரமதி ஒரு நாள் தேரில் ஏறிச் சென்றபோது, அந்த தேர்ச் சக்கரங் கள் மண்ணில் புதையுண்டன.

நிறைமாத கர்ப்பிணி சந்திரமதி குழந்தை பெறும் நாளை மிகுந்த ஆவலோடு மௌரிய சாம்ராஜ்யமே எதிர்நோக்கி இருந்தது.

ஒரு நாள் சந்திரகுப்த மௌரியர் உணவு உண்டு கொண்டிருந்தார். அவர் அருகில் அப்போது தற்செய லாய் நிறைமாத கர்ப்பிணி சந்திரமதி வந்தமர்ந்தாள். இவர்களுக்கு எதிரே சாணக் கிய முனிவரும் அமர்ந்தி ருந்தார்.

யாரும் எதிர்பாராத அதிர்ச்சியூட்டும் அரசியல் உச்சகட்டம் நிகழ்ந்தது.

சந்திரகுப்தரின் உணவில் என்றும்போல் அன்றும் நஞ்சு கலக்கப்பட்டிருந்தது. நஞ்சு கலந்த உணவை நாள்தோறும் சந்திரகுப்தன் உண்டு பழகியவன் என்பது சந்திரமதிக்குத் தெரியாது.

சந்திரமதி அரசனோடு அன்று தானும் உண்ண ஆசைப்பட்டாள். சந்திரகுப்தன் தன் உணவில் நஞ்சிருப்பதை மறந்தவனாய் சோற்றுருண்டையைக் கையிலெடுத்து நிறைமாத கர்ப்பிணி மனைவிக்கு ஊட்டி னான்.

இதனைக் கண்டு விழிப்படைந்த சாணக்கிய முனிவர் அதிர்ந்து போனார். வயிற்றிலிருக்கும் மௌரிய குல வாரிசுக்கு நஞ்சு பரவிடக் கூடாதே என்ற பதட்டத் தில், அரசி வாயிலிருந்த உருண்டை தொண்டைக்குள் இறங்குவதற்கு முன்பாக அவளது தலையை வாளால் ஒரே வெட்டாக வெட்டி எறிந்தார் சாணக்கியர். அதன்பின் அவளது வயிற்றைக் கிழித்து குழந்தையைப் பாதுகாப் பாக கருவறையிலிருந்து வெளியே எடுத்தார்.

அக்குழந்தையின் உச்சந்தலையில் பனித் துளியினும் சிறிய நஞ்சுத் துளி பரவியிருந்தது. குழந் தையை நஞ்சு தாக்கா விடினும், துளிபோல நஞ்சு தலையில் பரவி யிருந்ததால் அக்குழந் தைக்கு பிந்துசாரன் எனப் பெயரிட்டனர்.

தன் மனைவியின் அகோரச் சாவினால் மனம் உடைந்து போன சந்திரகுப்த மௌரியரும் வாளால் தன்னைத் தானே மாய்த்துக் கொண்டு இறந்து போனார்.

சந்திரகுப்த மௌரியரின் இறப்பு குறித்து முரண்பட்ட வேறு செய்திகளும் உண்டு. அவர் ஆட்சியின் இறுதிக் காலத் தில் மகதத்தில் தோன்றிய ஒரு பஞ்சத்தால், பேரரசர் முடி துறந்து ஜைனத் துறவியான பத்ரபாகு என்ற முனிவருடன் மைசூர்ப் பிரதேசத்தில் தங்கியிருந்து, பன்னிரண்டு ஆண்டுகளுக்குப்பின் இறந்து போனார் என்ற உறுதிப்படாத செய்தியும் உண்டு.

சந்திரகுப்த மௌரியரையடுத்து அவரது மகன் பிந்துசாரர் பட்டமெய்தி னார். அவர் பட்டமெய்தியபோது வயதில் இளையவராக இருந்த காரணத்தினால் சாணக்கிய முனிவரே ஆட்சி செய்து வந்தார்.

திபெத்தைச் சேர்ந்த பௌத்த வரலாற் றாசிரியர் தாரநாதர் பிந்துசாரரை பெரிய வெற்றி வீரர் என்று குறிக்கிறார். தந்தை விட்டுச் சென்ற பேரரசின் எல்லை களை மேலும் பரப்ப முயன்றார் என்று புகழப்படுகின்றார். பிந்துசாரர் தக்காணத் தின் பெரும் பகுதியைத் தம் ஆட்சியில் அடக்கியிருக்கக் கூடும். ஆதலால் அவர் "அமித்ரகாதா' (பகைவரை அழிப்பவர்) என்ற பட்டப் பெயர் கொண்டார்.

பிந்துசாரர் காலத்து மௌரியப் படைகள் தென்னகத்தில் பாண்டி நாடு வரை பரவி வெற்றி கொண்டன என்ற கருத்து கூட வெளிப் பட்டுள்ளது.

எது எப்படியோ, மௌரியப் பேரரசின் உருவாக்கத்திற்கும் வளர்ச்சிக்கும் சாணக்கிய முனிவரின் உதவியும் அவரது அர்த்த சாஸ்திர வழிகாட் டலும்தான் முக்கிய காரணம் என்பதை யாராலும் மறுக்க முடியாது.

ராஜ தந்திரங்களும் நீதிகளும் நிறைந்தது தான் அர்த்த சாஸ்திரம். அர்த்த சாஸ்திரத் தில் ராஜ நீதிகளும் தர்மங்களும் சொல்லப் படுவதோடு குடும்ப நீதிகளும் தர்மங்களும் சொல்லப்பட்டுள்ளன.

அர்த்த சாஸ்திரம் தண்ட நீதியைப் பற்றி அதிகம் பேசுகிறது. தத்துவங்களும் வேதங்க ளும் பொருளாதாரமும் தண்ட நீதியை ஆதாரமாகக் கொண்டே விளங்குகின்றன.

தண்ட நீதியைப் பற்றிய சாஸ்திர ஞானத்தை நன்கு அறிந்த மன்னனால் பிரயோகிக்கப்படும் தண்ட நீதியானது மக்களுக்கு யோக க்ஷேமங்களைக் கொடுக்கும்.

தண்டிப்பவன் இல்லாவிட்டால் வலிமை மிக்கவன் எளியவனை விழுங்கி விடுவான். நல்லபடியாக தண்ட நீதி செலுத்தப்படு மானால் எளியவனும் வலியவன் ஆவான்.

மௌரிய சாம்ராஜ்ஜியத்தை தனித்தே ஆளக்கூடிய தகுதியும் திறமையும் வாய்க்கப் பெற்றவனாக பிந்துசாரன் வளர்ந்துவிட்ட நிலையில், சாணக்கியருக்கு இவ்வுலக வாழ்வின்மீது வெறுப்புத் தோன்றியது. தவம் மேற்கொள்ள நினைத்தார்.

சிறையிலிருந்த பழைய அமைச்சன் சுபந்துவை விடுதலை செய்து மீண்டும் அமைச்சராக்கினார் சாணக்கியர்.

அரண்மனை வாழ்க்கையிலிருந்து முற்றிலுமாகத் தன்னை விடுவித்துக் கொள்வதாகக் கூறி விடை பெற்ற சாணக்கிய முனிவர் கானகம் சென்று கடுந்தவம் மேற்கொண்டார்.

அவரை நோக்கி சீடர்கள் கூட்டம் அலைமோதியது. கடைசியாக சோணை யாற்றங்கரையில் இருந்த மாட்டுப்பட்டி அருகில் கடுந்தவம் மேற்கொண்டார்.

சாணக்கிய முனிவர் சோணையாற்றங் கரையில் கடுந்தவம் செய்து கொண்டிருந் ததை அமைச்சர் சுபந்து அறிந்தான்.

மகாபதும நந்தனை அழித்து, தன்னை யும் விலங்கிட்டு, சிறையில் நெடுங்காலம் சாணக்கியன் துன்புறுத்தியதை நினைத்தான். சாணக்கிய முனிவரைப் பழிக்குப் பழி வாங்க வேண்டும் என்னும் எண்ணம் சுபந்துவுக்குத் தோன்றியது.

அன்றைக்கு மாலையில் சாணக்கிய முனிவரைக் காண வழிபடு பொருட்களை எடுத்துக் கொண்டு அமைச்சர் சுபந்து சோணையாற்றங் கரைக்குச் சென்றான்.

சாணக்கிய முனிவரை வலம் வந்து வணங்கி பூஜை செய்தான். முனிவரிடம் விடை பெற்றுத் திரும்பும்போது தன் ஆட்களிடம், ""இந்த முனிவர்கள் இரவில் கண்ணை மூடிக் கடுந்தவம் புரிவர். இது மாரிக்காலமாதலால் குளிரால் அவர்கள் நடுங்க நேரிடும். ஆதலால் வறட்டிகளையும் உலர்ந்த புல்லையும் முனிவர்கள்மீது போர்த்திவிடுங்கள்'' என ஆணையிட்டான்.

அவ்வாறே பணியாட்கள் முனிவர்களின் மேல் ஏராளமான வறட்டி, புல், குப்பைக் கூளங்களைப் போட்டு மூடினர். சுபந்து சிறிது நேரங்கழித்து வந்து அனைவருக்கும் தீ மூட்டிவிட்டுத் திரும்பிப் போய்விட்டான்.

தீ கொழுந்து விட்டெரிந்தது. சாணக்கிய முனிவரும் சீடர்களும் தீயில் கருகி வெந்தனர். ஆயினும், யுகம் தாண்டி- எல்லை தாண்டி ஆட்சி அதிகாரங்களில், மக்களின் அன்றாட வாழ்க்கையின் சுவடுகள் அனைத் திலும் சாணக்கியரின் அர்த்தசாஸ்திரம் தனது ஆளுமையை உரத்த குரலோடு இன்னும் சொல்லிக் கொண்டிருக்கிறது.
                                                                                                                                              -நக்கீரன் இணையச் செய்தி


‘சாணக்கியர்’-

என்று சொன்னவுடன், 
நம்மில் பலர் மனதில் 
தோன்றுவது, 
அவருடைய அவிழ்ந்த குடுமியும் 
அவர் எடுத்த சபதமும்தான்.
‘பாஞ்சாலி’ சபதத்திற்குப் பிறகு 
வரலாற்றுப் பெயர் பெற்ற சபதம் - 
‘சாணக்கிய சபதம்’தான்.
கெளரவ சாம்ராஜ்யத்தை அழித்து, 
தர்மருடைய ஆட்சியை ஏற்படுத்தியது - 
பாஞ்சாலி சபதம். 
நந்தர்களின் ஆட்சியை அழித்து, 
சந்திரகுப்தரை மன்னராக்கி, 
குப்தர் பொற்காலத்திற்கு 
அடிகோலியது - 
‘சாணக்கிய சபதம்’.
சாணக்கியருடைய சபதம் போல், 
அவர் எழுதிய ‘அர்த்த சாஸ்திர’மும் 
உலகப் பிரசித்தி பெற்றவை.
அர்த்த சாஸ்திரம், ஒரு statecraft 
புத்தகம். 
அதாவது அராசங்கமும் அரசனும் 
எப்படி நல்ல ஆட்சி செய்ய வேண்டும் 
என்பதை விளக்கும் நூல்.
இது சரித்திரம் படித்த 
எல்லோருக்கும் தெரிந்த விஷயம்.
பல பேருக்குத் தெரிந்திருக்க 
வாய்ப்பில்லாத விஷயம் — 
இதே சாணக்கியர், மனிதனுடைய 
வாழ்வு வளம்பெற, ஒரு நீதி சாஸ்திர 
நூலையும் இயற்றியிருக்கிறார். 
அதுதான் ‘சாணக்கிய நீதி’ என்ற நூல்.. 
ஒவ்வொரு கலாச்சாரத்திலும் 
வெவ்வேறு சமயங்களிலும் 
பெரிய மஹான்கள்,
மானிடர்கள் நலம்பட
நல்ல கருத்துக்களை
போதித்திருக்கிறார்கள்.
தமிழில் திருக்குறள், 
ஒளவையாரின் நல்வழி, 
மூதுரை ஆகிய நூல்கள், 
உலக நீதி போன்றவை 
பிரசித்தம். 
வடமொழி இலக்கியத்தில், 
சுக்ரநீதி, மனுநீதி, விதுரநீதி 
என்று பல நூல்கள் உள்ளன. 
அவற்றில் சாணக்கிய நீதியும் 
ஒரு சிறந்த நூலாகப் புகழப்படுகிறது. 
இதில், இன்னொரு விஷயம், 
மற்ற நீதிகளின் ஆசிரியர்கள் 
புராண, இதிகாச மனிதர்கள். 
ஆனால் சாணக்கியர், 
ஒரு சரித்திர கால புருஷர். 
2500 ஆண்டுகளுக்கு 
முன் வாழ்ந்தவர். 
அவரைப் பற்றிய கதைகள், 
சரித்திர நிரூபணம் 
இல்லாத கதைகளாக இருந்தாலும், 
அவர் வாழ்ந்த காலம், 
அவர் ஈட்டிய பணிகள், 
அவர் எழுதிய காவிய நூல்கள் 
சரித்திர ஆசிரியர்கள் 
ஏற்றுக்கொண்டவை.
‘சாணக்கிய நீதி’யில் என்ன 
நல்ல விஷயங்கள் 
சொல்லப்பட்டிருக்கின்றன
என்பதைப் பார்க்கும் முன் 
அதன் ஆசிரியர், சாணக்கியரைப் 
பற்றிக் கொஞ்சம் ஞாபகப்படுத்திக்
கொள்வோம்.

கங்கைக் கரை ஓரத்தில் இருக்கும் 
அழகான பாடலிபுத்திர 
(இன்றைய பாட்னா) 
நகரத்தை நோக்கிச் 
சென்றுகொண்டிருக்கிறான் 
ஒரு பிராமணன் — அவிழ்ந்த குடுமி, 
தீட்சயண்யமான கண்கள், 
கோபம் கலந்த மிடுக்கு நடை. 
உச்சி வெயில், பசி, களைப்பு.
வழியில், ஒரு புல் குவியல். 
பிராமணன் அதைப் பார்க்காமல், 
அதன் மேல் கால் வைக்க, 
தடம்புரண்டு கீழே விழப்போனான். 
சாதாரண மனிதர்கள், 
அதைப் பொருட்படுத்தாமல் 
மேலே நடந்துசெல்வார்கள். 
ஆனால், இவன் சாதாரண 
மனிதன் இல்லையே!
கோபம் வந்துவிட்டது. 
கீழே உட்கார்ந்து, ஆழமான 
வேர்களுடன் இருந்த 
அந்தப் புல்குவியலை வேரோடு 
பிடுங்கி, அதற்குத் தீவைத்து, 
அது சாம்பலாக்கும்வரை 
பொறுமையுடன் காத்திருந்து, 
பிறகு அந்தச் சாம்பலை 
நீரில் கரைத்துவிட்டுத் தன் 
பயணத்தைத் தொடர்ந்தான்.
யார் அந்தப் பிராமணன்?
அவர்தான், கெளடில்யர், விஷ்ணுகுப்தர் 
என்று அழைக்கப்படும் சாணக்கியர்.. 
எல்லா சாஸ்திரங்களையும் 
கரைத்துக் குடித்தவர். 
அந்தக் காலத்துப் புகழ்வாய்ந்த 
தட்சசீலக் கலாசாலையில் படித்தவர். 
பொருளாதார நிபுணர். 
பிழைப்பைத் தேடி 
பாடலிபுத்திரத்திற்கு வந்தார். 
வந்த இடத்தில் 
பெரிய அவமானம். 
பாடலிபுத்திரத்தை 
ஆண்டுவந்தவர்கள் - நந்தர்கள். 
ஒரு நாள் சாணக்கியர், நந்தர்கள் 
அரண்மனைக்குச் சென்றார். 
அங்கே நந்தர்கள் 
அவரை அவமானப்படுத்தி, 
வெளியே தள்ளினார்கள். 
அப்பொழுது, அவருடைய குடுமி 
அவிழ்ந்து தோளில் புரண்டது.. 
சாணக்கியருக்கு மகா கோபம். 
கம்பீரமான குரலில் 
"ஏ, நந்தர்களே, என்னையா 
அவமதித்தீர்கள். 
இன்று முதல், 
என் முதல் வேலை 
உங்களையும் 
உங்கள் சாம்ராஜ்யத்தையும் 
அடியோடு அழிப்பது தான். 
அதுவரை, இந்த அவிழ்ந்தக் 
குடுமியை மறுபடியும் கட்ட மாட்டேன், 
இது என் சபதம்" என்று கர்ஜித்து 
சபையை விட்டு வெளியேறினார். 
நந்தர்கள் ஆணவத்தினால் 
"ஒரு பிராமணனின் சபதம் 
நம்மை என்ன செய்யும்" 
என்று நையாண்டி செய்தார்கள்.
இதுதான் சாணக்கிய சபதத்தின் 
மூலக் கதை. 
இந்தச் சபதத்தைச் செய்துவிட்டுத் 
திரும்பும் வழியில்தான், 
சாணக்கியர் மேலே சொன்ன
‘புல் சம்ஹாரத்தை’ செய்தார்.
இதை, மறைவிடத்திலிருந்து 
ஒரு இளைஞன் பார்த்துக்கொண்டிருந்தான். 
அவனுக்கு ஆச்சரியம் - இந்த மாதிரி 
ஒரு திடச் சித்தம் உள்ள 
மனிதரைப் பார்த்ததில். 
வெளியே வந்து, சாணக்கியரை அணுகி, 
தன்னை ‘சந்திரகுப்தன்’ 
என்று அறிமுகம்செய்துகொண்டான். 
சாணக்கியர், பரிவுடன் சந்திரகுப்தனைப் 
பார்த்து, "குழந்தாய் நீ ஏன் கவலை 
முகத்துடன் இருக்கிறாய்? 
உன் கஷ்டத்தை 
என்னிடம் சொல். என்னால் முடிந்த
உதவியைச் செய்கிறேன்" என்றார்.
சந்திரகுப்தன், 
தன் கதையைச் சொல்லலானான்.
"சுவாமி, நான் சர்வார்த்த சித்தி 
என்ற மன்னரின் பேரன். 
என் தாத்தாவிற்கு சுநந்தா தேவி, 
முரா தேவி என்று 2 மனைவிகள். 
சுநந்தா தேவிக்கு ஒன்பது பிள்ளைகள் - 
நவ நந்தர்கள் என்று அழைக்கப்பட்டார்கள். 
முரா தேவிக்கு ஒரே பையன் - 
என் தகப்பனார். 
எனக்கு 100 சகோதரர்கள். 
நந்தர்கள் பொறாமை காரணமாக 
என்னைத் தவிர எல்லாரையும்
கொன்றுவிட்டார்கள். 
நான் தனியாக இருக்கிறேன். 
வாழ்க்கையே வெறுத்துவிட்டது" 
என்று சொன்னான். 
சாணக்கியர், சந்திரகுப்தனைப்
பார்த்து,
"கவலைப் படாதே, நானும் 
இந்த நந்தர்களால் 
அவமானப்படுத்தப்பட்டவன்தான். 
என்னுடைய சபதத்தை 
உன் மூலம் நிறைவேற்றிக்
கொள்கிறேன். 
இன்று முதல், நீதான் என் சீடன்" 
என்றார்.
எப்படி சாணக்கிய சபதம் 
சந்திரகுப்தன் மூலம் சாணக்கியரால் 
நிறைவேற்றப்பட்டது 
என்பது சரித்திரம்.

நந்தர்களை அழித்து, சந்திரகுப்தனை 
அரசனாக்கினது, 
அவர் செய்த பெரிய சாதனை.
சந்திரகுப்தனுக்காக
"மாஸ்டர் பிளான்" 
போட்டது இவர்தான். 
அதில் ஒரு சின்ன 
இடைச்செறுகல் ஏற்பட்டது 
என்பது ஒரு சுவாரசியமான கதை. 
"யானைக்கும் அடி சறுக்கும்" 
என்பதற்கான விளக்கம்.
ஆரம்ப காலத்தில் சந்திரகுப்தனுக்கு 
வெற்றி கிடைக்கவில்லை. 
நந்தர்கள் சைனியம் சந்திரகுப்தனைப் 
படுதோல்வி அடையச் செய்தது.
சாணக்கியருக்குக் கவலை. 
ஒற்றர்களை நாலா பக்கம் அனுப்பி 
வேவுபார்க்கச் சொன்னார். 
ஒரு ஒற்றன் பக்கத்து 
கிராமத்திற்குச் சென்றான். 
அங்கு ஒரு தாயார் தன் மகனுக்குச் 
சுடச்சுட சப்பாத்தி தயார்பண்ணிக் 
கொடுத்துக்கொண்டிருந்தாள். 
அந்தப் பையன் சூடான 
சப்பாத்தியை மத்தியிலிருந்து
விண்டு சாப்பிட ஆரம்பித்தான்.
சூடு தாங்காமல் கத்தினான். 
அம்மா செல்லக் கோபத்துடன் 
சொன்னாள்.
"நீ ஏன் சந்திரகுப்தன் போர்
செய்வதுபோல் 
சப்பாத்தியைச் சாப்பிடுகிறாய்?" 
என்றாள்.பையன் கேட்டான்,
"அவர் எப்படிப் போர் செய்தார்?" 
என்று.

தாயார் சொன்னாள், 
"சந்திரகுப்தன் தன் யுத்த 
ஏற்பாடுகளில் 
தவறு செய்கிறான் — நீ சப்பாத்தி 
சாப்பிடுகிற மாதிரி. 
சூடான சப்பாத்தியைச் 
சாப்பிட வேண்டுமானால் 
முதலில் விளிம்புகளிலிருந்து 
சாப்பிட ஆரம்பிக்க வேண்டும். 
பிறகு கொஞ்சம்கொஞ்சமாக 
நடுப்பகுதியை நோக்கிச் சாப்பிட 
முயற்சிபண்ண வேண்டும். 
அதற்குள் நடுப்பகுதி ஆறிப்போய் 
நீ சாப்பிடுவதற்குத் தயாராக இருக்கும். 
சந்திரகுப்தன், சுற்றியுள்ள நகரங்களை 
முற்றுகையிடாமல் நேரடியாக, 
நந்தர்களின் மையப் பகுதிகளைத் 
தாக்கித் தோல்வி அடைகிறான். 
வெளிப்புறப் பகுதிகளை வென்று 
தலைநகரத்தை நோக்கிச் சென்றால், 
வெற்றி நிச்சயம். 
அப்படிச் செய்யாததனால்தான், 
எப்பொழுதும் அவன் மையப் பகுதியைத் 
தாக்கினாலும் நந்தர்களால் சூழப்பட்டுத் 
தோல்வியைத் தழுவுகிறான்" என்றாள்.
இதைக் கேட்ட ஒற்றன் சாணக்கியரிடம் 
இதைச் சொல்ல, சாணக்கியரும் 
தன் திட்டத்தை மாற்றி 
சந்திரகுப்தனுக்கு வெற்றி 
கிடைக்கும் வாய்ப்பை
ஏற்படுத்திக் கொடுத்தார்.

இதே மாதிரி திட்டங்கள் தயாரித்து 
கிரேக்கர்களையும் அவர் 
அடக்கி வைத்திருந்தார். 
இந்தச் சமயத்தில்தான், 
புகழ்பெற்ற‘அர்த்த சாஸ்திர’த்தை 
எழுதினார். 
ஒரு அரசன் எப்படி ஆள 
வேண்டும் என்பதற்கான
விரிவுரை இந்த நூலாகும். 
"சாணக்கிய தந்திரம்" என்று 
பரவலாக பேசப்படும் சொல்லிற்கு 
உருவகம் கொடுத்தவர் இவர்தான்.

அரசனையும் அரசாங்கத்தையும் 
பற்றி எழுதிய சாணக்கியர், 
மக்களை மறக்க வில்லை. 
சாணக்கிய நீதி, 
சாணக்கிய சூத்திரங்கள் - 
என்ற 2 நூல்கள் மூலம் 
தன் காலத்து மக்கள் 
எப்படித் தங்கள் வாழ்க்கை 
மேம்படச் செயல்பட 
வேண்டும் என்பதை தெளிவாகச் 
சொல்லியிருக்கிறார்.

சாணக்கிய நீதி,
சாணக்கியர் காலத்திய 
மக்களுக்காக எழுதப்பட்டது. 
ஆனால், அந்த நீதி போதனைகள், 
இன்றைய தலைமுறைக்கும் 
பொருந்தும் என்று நினைக்கும்போது, 
சாணக்கியரின் தீர்க்கதரிசனத்தை
பாராட்டித்தான் ஆகவேண்டும்.
அவருடைய சில கருத்துகள் - 
குறிப்பாக பெண்கள் 
வாழ்க்கை முறைகளைப் 
பற்றியும் வர்ணாசிரம 
கோட்பாடுகளை பற்றியும் - 
இன்றைய சமூகத்திற்கு 
ஒத்துவராமல் இருக்கலாம். 
மறுபடி, ஞாபகத்தில் வைத்துக்கொள்ள 
வேண்டியது — இது அவர் 
வாழ்ந்த காலச் சூழ்நிலைக்காக 
எழுதப்பட்டது.

பகிர்
இயல்(கள்): , , , , இதழ் வெளியான நாள்: Monday, September 30, 2013

2 comments:

  1. பல புதிய தகவல்கள் . . நன்றி நண்பா. . .

    ReplyDelete
  2. தங்கள் வருகைக்கு நன்றி!

    ReplyDelete

காப்புரிமை © 2013 தமிழ்மொழி - தமிழால் நாமும் நம்மால் தமிழும் பயனுற வேண்டும் இத்தளத்தை நிர்வாகிப்பது தமிழ்மொழி.வலை
. சேவை வழங்குநர் பிளாக்கர்.