வாழ்க தமிழ்!

Monday, September 30, 2013

அறிவோம் நம் மொழியை - வலசை என்றால் என்ன?

பாமரன்  /  at  2:44 PM  /  கருத்துரை இடுக

                  
           வலசை போதல் (Animal migration) என்பது பல இனங்களைச் சேர்ந்த பறவைகள், விலங்குகள் ஆகியவை பருவகாலங்களை ஒட்டி புலம் பெயருவதைக் குறிக்கும். எல்லா விலங்குகளும் பறவைகளும் வெப்பநிலை வேறுபாட்டை உள்ளூர உணர்கின்றன. மேலும் மனிதனைப் போலவே, விலங்கினங்கள்கோடைக்காலத்தைக் குளிர்ந்த இடங்களிலும், குளிர்காலத்தை வெதுவெதுப்பான இடங்களிலும் கழிக்க விரைகின்றன. அவை தங்கள் வாழிடத்தைப் பல்வேறு பருவகாலங்களில் மாற்றிக் கொள்கின்றன. குறிப்பிட்ட காலங்களில் விலங்குகள் அல்லது பறவைகள் தங்களின் வாழிடத்திற்கு ஒவ்வொரு ஆண்டும் ஒரு குறிப்பிட்ட காரணங்களுக்காக இடப்பெயர்வு செய்வது வலசை போதல் எனப்படும். அவை குழுக்களாகச் செல்லும் போது அவற்றைக் கொன்று தின்னும் உயிரிகளிடமிருந்து பாதுகாக்கப்படுகின்றன. வலசை போகும் பறவைகள், பூமியின் காந்தவிசையில் ஏற்படும் மாற்றங்களை உணர்கின்றன. அதன் உதவியுடன் அவை தங்களது சேருமிடத்தைக் கண்டறிகின்றன. பந்தயப் புறாக்கள் இந்த முறையில் தான் தனது இருப்பிடத்தை அறிகின்றன.


               இது பறவைகள் புலப்பெயர்வு எனப்படுகின்றது. இவ்வாறு புலம்பெயரும் பறவைகள் இதற்காகப் பல்வேறு உத்திகளைக் கையாளுகின்றன. ஒவ்வொரு வருடமும் பகல் பொழுது குறையும் காலங்களில் உணவு கிடைப்பதும் குறைகிறது. அப்போது பல பறவைகள் வெதுவெதுப்பான நல்ல சாதகமான தட்ப வெப்பநிலையை நோக்கி நீண்ட தூரம் பறந்து செல்லத் தம்மைத் தயார்படுத்திக் கொள்கின்றன. இடப்பெயர்ச்சி துவங்குவதற்கு பல நாட்களுக்கு முன்னதாகவே பறவைகள் பயணத்திற்குத் தங்களை ஆயத்தப்படுத்திக் கொள்கின்றன. அதிக உணவை உண்டு, கூடுதலாக ஓர் அடுக்குகொழுப்பை உடலில் சேர்த்துக் கொள்கின்றன சில பறவைகள் கூட்டமாக எப்படி அணிவகுத்துச் செல்வது என்று ஒத்திகைகள் கூடப்பார்க்கின்றன. பிறகு, ஒருநாள் ஆழமான மூதாதைப் பண்புகளின் தூண்டலால் உந்தப்பட்டு முன்பின் அறியாத இடங்களுக்கு செல்லத் துவங்குகின்றன.

                       இடம் பெயரும் பறவைகள் இருவிதமான நேர் உணர்வைப் பெற்றுள்ளன. ஒன்று உள்ளூர் நேரத்தைச் சார்ந்தது. மற்றொன்று பருவ நிலை மாற்றம் தொடர்பானது, மேலும் அவை புவிக்காந்தப்புலத்தைச் சார்ந்தது. ஆனால் உலகின் சில பகுதிகளில் தீர்க்கரேகைகள் புவி காந்தப் புலத் தன்மைக்கு ஏற்ப அதிகம் மாறுவதில்லை.

      இளம் பறவைகளைக் கொண்டு இலையுதிர் காலத்திலும், வயதான பறவைகளைக்கொண்டு வசந்த காலத்திலும் இடப்பெயர்வு ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டன. ஆய்வுகளின் படி கால, நேர, இட அடிப்படையில் அமையும் பறவைகளின் வான் பயண உத்திகள், வயதான பறவைகளுக்கு அதிகமாகவே இருப்பதாகக் கண்டறியப்பட்டுள்ளன. ரீட்வார்ப்லர் என்ற இனப் பறவைகள் தீர்க்க ரேகையைக் கண்டறிவதுடன் இரு அச்சு வான் பயணமுறையை மேற்கொண்டு வசந்த காலத்தில் தத்தம் வாழிடங்களுக்குச் சரியாக வந்து சேர்கின்றன என்று ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர்.                  விலங்குகளும் பறவைகளும் உணவு, நீர் போன்றவற்றைத் தேடியும் தகுந்த தட்பவெப்பத்தைத் தேடியும் இடம்பெயர்வதற்கு வலசை என்று பெயர். 

                   இப்போதெல்லாம் வலசை என்ற சொல் பெரும்பாலும் பறவைகள் தொடர்பாகப் பயன்படுத்தப்படுகிறது. மனிதர்கள் ஒரு நாட்டிலிருந்து இன்னொரு நாட்டில் குடியேறுவதற்குதான் 'வலசை' என்று பழந்தமிழில் பெயர். காலப்போக்கில் பொருள் சற்று மாறி பறவைகளுக்கும் விலங்குகளுக்கும் தொடர்பான சொல்லாக 'வலசை' ஆகிவிட்டது. 

                   மனிதர்கள் வேறு நாட்டுக்குக் குடியேறுவதைக் குறிக்க 'புலம்பெயர்தல்' என்ற சொல்லைப் பயன்படுத்தலாம். 'வலசை' என்ற சொல்லுக்கு 'குக்கிராமம்' என்ற பொருளும் இருந்திருக்கிறது. சேலம் மாவட்டத்தில் 'வலசையூர்' என்று ஒரு கிராமம் இருக்கிறது. 


பகிர்
இயல்(கள்): , , , , இதழ் வெளியான நாள்: Monday, September 30, 2013

0 கருத்து(கள்):

காப்புரிமை © 2013 தமிழ்மொழி - தமிழால் நாமும் நம்மால் தமிழும் பயனுற வேண்டும் இத்தளத்தை நிர்வாகிப்பது தமிழ்மொழி.வலை
. சேவை வழங்குநர் பிளாக்கர்.