வாழ்க தமிழ்!

Thursday, September 19, 2013

நாமார்க்குங் குடியல்லோம் ... -திருநாவுக்கரசர் - தேவாரம்

பாமரன்  /  at  6:38 AM  /  கருத்துரை இடுக

சமண சமயத்தைத் தழுவிய மருள் நீக்கியார்மீது பாடலிபுரத்துச் சமணர்கள் பற்பல குற்றங்களைச் சுமத்திக் காஞ்சிப் பல்லவ சக்கரவர்த்திக்கு விண்ணப்பம் செய்துகொள்ள, மகேந்திர பல்லவர் உண்மையை விசாரித்து உணரும் பொருட்டு அவரைக் காஞ்சிக்கு வரும்படி கட்டளை அனுப்பினார். கட்டளையைக் கொண்டு போன இராஜ தூதர்கள் அந்த மகா புருஷரைக் கொஞ்சம் அச்சுறுத்தினார்கள்.

"எனக்கு இறைவன், சிவபெருமான் தான்; உங்களுடைய அரசன் கட்டளையை நான் மதியேன்!" என்று திருநாவுக்கரசர் கூறித் தூதர்களைத் திடுக்கிடச் செய்தார்.

"உம்மைச் சுண்ணாம்புக் காளவாயில் போடுவோம், யானையின் காலால் மிதிக்கச் செய்வோம்; கழுத்திலே கல்லைக் கட்டிக் கடலிலே போடுவோம்" என்றெல்லாம் தூதர்கள் பயமுறுத்தினார்கள். அப்போது, மருள்நீக்கியார் ஒரு பாடலைப் பாடினார்:

"நாமார்க்குங் குடியல்லோம் நமனை யஞ்சோம்
நரகத்தி லிடர்ப்படோ ம் நடலை யில்லோம்
ஏமாப்போம் பிணியறியோம் பணிவோ மல்லோம்
இன்பமே எந்நாளுந் துன்பமில்லை!
தாமார்க்குங் குடியல்லாத் தன்மை யான
சங்கரனற் சங்கவெண் குழையோர் காதில்
கோமாற்கே நாமென்று மீளா வாளாய்க்
கொய்ம்மலர்ச்சே வடியிணையே குறுகினோமே!"

மேற்கண்ட பாடலை ஓலையிலே எழுதுவித்து, "இதை எடுத்துக்கொண்டு போய் உங்கள் அரசரிடம் கொடுங்கள்" என்றார் சிவனடியார். தூதர்களும் தங்களுக்கு வேறு கட்டளையில்லாமையால் திரும்பிச் சென்று பாடலைச் சக்கரவர்த்தியிடம் கொடுத்தார்கள். அவர்கள் எதிர்பார்த்தற்கு மாறாகக் காரியம் நடந்தது. அதாவது பாடலைப் படித்த மகேந்திர பல்லவர் அத்தகைய தெய்வப் பாடலைப் பாடக் கூடிய மகானைத் தரிசிக்க விரும்பினார். அவரைத் தரிசித்த பிறகு, தாமும் ஜைன மதத்தைவிட்டுச் சைவ சமயத்தைச் சேர்ந்தார். 


உரை -க :             ஓர் சிறிய நாட்டின் தலைவனாக இருக்கும் யாருக்கும் அடிபணிந்து அந்நாட்டின் குடியாக இருக்கமாட்டோம், அவ்வாறுசெய்யுங்கால் தண்டித்து கொலை நோக்கோடு வந்தாலும் நமனை அஞ்சோம்; பலவித தண்டனைகள் கொடுத்து வாழ்க்கையைநரகமாக்கினாலும் இடர்படோம் , நடுங்கவுஞ் செய்யோம்; எச்சூழ்நிலையிலும் மனங்குழையாது ஏமாப்புடனேயே இருப்போம்,எவ்வகையான பிணியும் அறியோம் என்பதின் பணிவோம் அல்லோம்; யாது நடந்தாலும் அது இன்பமே எந்நாளும் துன்பமில்லை. இவ்வாறு நாம் இருப்பதற்கு காரணம் தாம் யார்க்கும் குடியல்லாத சர்வ சுதந்திரத் தன்மையான அர்த்தநாரீ வடிவத்துவெண்குழையோர் காதில் அணிந்திருக்கும் சங்கரனை நம் தலைவராய்க் கொண்டு, அவனுக்கே மீளா ஆளாய் நின்று அவனது மலர்களைப் போன்ற சேவடிகளைத் தொழுவதற்கே நாம் குறுகினோம் என்பதால் என்றறிக.


 உரை -உ  :         நாம் வேறு யார்க்கும் அடிமை அல்லோம் ; இயமனை அஞ்சோம் ; நரகத்தில் புக்கு இடர்ப்படோம் ; பொய்யும் இல்லோம் ; என்றும் களிப்புற்றிருப்போம் ; பிணியாவது இஃது என அறியோம் ; வேறு யாரையும் பணிவோம் அல்லோம் ; எந்நாளும் எமக்குள்ளது இன்பமே அன்றித் துன்பமில்லை. தான் யார்க்கும் அடிமையாகாத தன்மையனும், நல்ல சங்க வெண்குழையை ஒரு காதில் உடைய கோமானும் ஆகிய சங்கரனுக்கு நாம் என்றும் மீளாத அடிமையாய் அப்பொழுது அலர்ந்த மலர் போன்ற அவன் உபய சேவடிகளையே அடைக்கலமாக அடைந்தோம் ஆகலின்.

பகிர்
இயல்(கள்): , , , இதழ் வெளியான நாள்: Thursday, September 19, 2013

0 கருத்து(கள்):

காப்புரிமை © 2013 தமிழ்மொழி - தமிழால் நாமும் நம்மால் தமிழும் பயனுற வேண்டும் இத்தளத்தை நிர்வாகிப்பது தமிழ்மொழி.வலை
. சேவை வழங்குநர் பிளாக்கர்.