வாழ்க தமிழ்!

Saturday, August 10, 2013

திங்களூர் - வரலாறு

பாமரன்  /  at  11:27 AM  /  கருத்துரை இடுக

தனது மகள்கள் இருபத்தேழு பேரையும் சந்திரனுக்கு, திருமணம் செய்து வைத்த தட்சன் கூறினான் - எல்லாரிடமும் சமமாக பாவித்து அன்பு செலுத்த வேண்டும்!... என்று.
ஆனால், சந்திரனால் ரோகிணியிடம் கொஞ்சம் அதிக பிரியமாக இருந்தான். வந்தது வினை. மற்ற பெண்கள் தந்தையிடம் சென்று கண் கலங்கினர். மகள்களின் கண்ணீரைக் கண்டு ஆத்திரமடைந்த தட்சன் சந்திரனுக்கு  - தினம் ஒரு கலையாகக் குறைந்து தேய்ந்து விடும்படி சாபமிட்டான்.  

சாபம் பலித்தது. சந்திரனின் அழகு தேயத் தொடங்கியது. மனம் கலங்கி அங்குமிங்கும் அலைந்த சந்திரனுக்கு உதவ யாராலும் இயலவில்லை.

ஓடினான்.. இன்னும் ஒரு கலையே மீதம் என்ற நிலையில் - ஓடிச் சென்று உமாமகேஸ்வரனின் திருப்பாதங்களில் சரணடைந்தான். எம்பெருமான் மிக்க கருணையுடன் சந்திரகலையை -  தான் சூடி அவனை அழிவிலிருந்து மீட்டு, சந்திரசேகரராகக் காட்சியருளினார். 

தன் குறையுடன் கறையையும் நீக்கி நிறைவாய் ஆக்கிய இறைவனை நன்றியுடன் பற்பல தலங்களில் போற்றி வணங்கினான் சந்திரன். அப்படி வணங்கிய தலங்களுள் ஒன்று - திங்களூர்.

 இன்று பங்குனி -  பெளர்ணமி நாள்.

இன்று திங்களூரில் -  நிறைநிலா உதய வேளையில், சந்திரனின் குளிர்ந்த கிரணங்கள் மூலவராகிய கயிலாயநாதர் மீது பரவிப் படர்கின்றது. அந்தத் திருக்காட்சியினைக் காணவும், அந்த வேளையில் தம் மனக் குறைகளைத் தீர்த்துக் கொள்ளவும் எண்ணற்ற பக்தர்கள் கூடுகின்றனர்.

*  *  *

தமக்கை திலகவதியாரின் பிரார்த்தனையால் - புறச்சமயத்திலிருந்து மீண்ட திருநாவுக்கரசு சுவாமிகள் உழவாரப்படையுடன் ஊர் ஊராகச் சென்று திருப்பணி செய்து, அங்கே வீற்றிருக்கும் இறைவனைக் கண்ணாரக் கண்டு வாயார வாழ்த்தி மனமார வணங்கி திருப்பதிகங்களைப் பாடி வருங்கால் - காவிரியின் வடகரையில் திங்களூர் எனும் திருத்தலத்தில் ஒரு அதிசயத்தினைக் கண்டு வியந்தார். 

வழி நெடுக - தண்ணீர்ப்பந்தல், வழிச்செல்வோர் தங்கும் இடங்கள், அன்னதான அறச்சாலைகள் - எல்லாமே ''திருநாவுக்கரசர்'' திருப்பெயரில்., வியப்பாக இருந்தது - பெருமானுக்கு.

விசாரித்தார். அப்பூதி அடிகள் எனும் அந்தணர் அவற்றை அமைத்து பேணி வருவதாகச் சொன்னார்கள். அது மட்டுமின்றி தன் பிள்ளைகளுக்கும் பெரிய திருநாவுக்கரசு, சிறியதிருநாவுக்கரசு என்று பெயர் சூட்டியிருப்பதையும் சொன்னார்கள். அவருடைய இல்லம் தேடிச் சென்றார் சுவாமிகள்.

அதுவரையிலும் திருநாவுக்கரசரை அப்பூதி அடிகள் நேரில் பார்த்ததில்லை. எனவே, வந்திருப்பவர் சிவனடியார் என்ற அளவில் அவரை வரவேற்றார் - அப்பூதி அடிகள்.

அவரிடம் திருநாவுக்கரசர் கேட்டார் - 

'' ஐயா!... உலகில் உள்ளவர்கள் நல்லறங்களைச்  செய்யும்போது தங்கள் பெயர் நின்று நிலைபெறும் வண்ணம் தானே செய்வார்கள். அப்படியிருக்க -  தாங்கள் தங்கள் பெயரில் அறப்பணிகளைச் செய்யாமல் யாரோ ஒருவர் பெயரில் செய்கின்றீர்களே!... அது ஏன்?...''

அப்பூதி அடிகள் உடனே கோபாவேசத்துடன் -

''... அறப்பணிகளை என் ஐயன் திருநாவுக்கரசருடைய திருப்பெயரில் தானே செய்கின்றேன்!.. சமணர்கள் பகை கொண்டு கல்லில் கட்டிக் கடலில் இட்ட போதும் நம சிவாய மந்திரத்தை ஓதி கரை சேர்ந்த அப்பெருமானைப் பற்றி அறியாதவராக இருக்கின்றீரே!... நீர் யார்?....'' - என்று முழங்கினார். அப்போது,

''.. சிவபெருமானால் சூலை நோய் கொடுக்கப்பட்டு, சமண சமயத்தில் இருந்து தடுத்தாட்கொள்ளப்பட்ட எளியேன் யான்..'' என்று பணிவுடன் கூறியதும் அதிர்ச்சியும் ஆனந்தமும் அடைந்த அப்பூதி அடிகள் சுவாமிகளின் பாதங்களில் விழுந்து வணங்கி மகிழ்ந்து தம்மை மன்னிக்குமாறு வேண்டி, தம் இல்லத்திலேயே தங்கிவிடுமாறு தாழ்மையுடன் விண்ணப்பித்துக் கொண்டார்.

ஆனால், திருநாவுக்கரசர் தாம் இன்னும் பல திருத்தலங்களுக்கு செல்ல வேண்டியிருப்பதைக் கூறியதும் - '' இன்று ஒரு நாளாவது எம் இல்லத்தில் உணவு அருந்த வேண்டும் '' எனக் கேட்டுக் கொண்டார். சுவாமிகள் அதையும் மறுத்து - '' ஒரு வேளை உணவு மட்டும் '' உண்பதற்கு ஒத்துக் கொண்டார்.

அப்பூதி அடிகள் உள்ளம் மகிழ்ந்து தன் மனையாளுடன் விருந்தோம்பலுக்கு ஆயத்தமானார். தன் மகனை வாழை இலை அரிந்து வரும்படி தோட்டத்திற்கு அனுப்பினார். ஆனால் - விதி வசத்தால் தோட்டத்தில், நாகம் தீண்டியது.

அந்தச் சிறுவன்  - வாழை இலையை தாயிடம் கொடுத்து விட்டு உயிரிழந்தான்.

இச் செய்தியை அறிந்தால் - திருநாவுக்கரசர் தம் இல்லத்தில் விருந்து உண்ண மாட்டாரே - என அஞ்சிய அப்பூதி அடிகள் தன் 
மகன் உடலை மறைத்து விட்டு, 

தன் மனையாளுடன் சேர்ந்து  சுவாமிகளுக்கு அமுது படைத்தார். 

இறைவனின் திருக்குறிப்பினால் சிறுவன் நாகம் தீண்டி இறந்ததை அறிந்த திருநாவுக்கரசர், அப்பூதி அடிகளின் மகன் உடலை திருக்கோயிலுக்கு எடுத்து வந்து இறைவன் திருமுன் கிடத்தி, " ஒன்றுகொலாம் அவர் சிந்தை " எனத் தொடங்கி பதிகம் பாடினார்.  

இறையருளால் இறந்த பிள்ளையை உயிர்ப்பித்தார். பிள்ளை மீண்டெழுந்தது கண்ட அப்பூதி அடிகள் - பெருமானைப் பலவாறு துதித்து வணங்கி - சுவாமிகளுக்கு அமுது படைத்து பெரும் பேறு எய்தினார்.

இந்த சம்பவம் நிகழ்ந்த பழைமையான திருத்தலம் திங்களூர். 

இறைவன் - கயிலாய நாதர். இறைவி - பெரியநாயகி. தீர்த்தம் - சந்திர தீர்த்தம்.

விநாயகரின் திருப்பெயர் -  விஷம் தீர்த்த விநாயகர். சந்திரன் இங்கு ஈசனை பூஜித்து பேறு பெற்றபடியால் இத்தலத்திற்கு வந்து  ஈசனையும், அன்னையும் துதித்து சந்திரனை வழிபடுவோர்க்கு - கிரஹ தோஷங்கள் விலகுகின்றன.

தஞ்சையிலிருந்து 14 கி.மீ. தொலைவிலும் திருவையாற்றிலிருந்து 3 கி.மீ. தொலைவிலும்உள்ளது திங்களூர்.

திருவையாறு - கும்பகோணம் சாலையில் உள்புறமாக  1 கி.மீ. தொலைவில் உள்ளது திருக்கோயில்.

தஞ்சையிலிருந்து - கணபதி அக்ரஹாரம் செல்லும் நகரப்பேருந்துகள் திங்களூர் வழியாக செல்கின்றன.

காவாய் கனகத் திரளே போற்றி!..
கயிலை மலையானே போற்றி! போற்றி!...

'' திருச்சிற்றம்பலம்!...''


நன்றி : http://thanjavur14.blogspot.in/2013/03/blog-post_26.html

பகிர்
இயல்(கள்): , , , , இதழ் வெளியான நாள்: Saturday, August 10, 2013

0 கருத்து(கள்):

காப்புரிமை © 2013 தமிழ்மொழி - தமிழால் நாமும் நம்மால் தமிழும் பயனுற வேண்டும் இத்தளத்தை நிர்வாகிப்பது தமிழ்மொழி.வலை
. சேவை வழங்குநர் பிளாக்கர்.