வாழ்க தமிழ்!

Thursday, August 8, 2013

தண்டனையை ரத்து செய்

பாமரன்  /  at  6:35 AM  /  கருத்துரை இடுக

மடாலயத்தில் ஜென் துறவி ஒருவர் இருந்தார். அவரிடம் இருக்கும் சீடர்களில் ஒருவன் மிகுந்த பயந்த சுபாவம் உடையவன். அவன் இருட்டைப் பார்த்தாலே பயப்படுவான்.

அந்த மடத்தில் இருக்கும் துறவி எப்போதும் இரவில் படுக்கும் முன்பு தன் சீடர்களுடன் பேசி விட்டு, பின்னர் தான் தூங்கச் செல்வார். அதேப்போல் ஒரு நாள் துறவி தன் சீடர்களிடம் பேசிக் கொண்டிருக்கையில், சீடர்கள் துறவியிடம் கதை சொல்லுமாறு கேட்டுக் கொண்டனர்.

அவரும் கதைச் சொல்ல ஆரம்பித்தார். அதிலும் அவர் சொல்லும் கதை தைரியமற்று இருக்கும் அந்த சீடனுக்கு தைரியத்தை வரவழைக்குமாறு இருந்தது. அந்த கதை என்னவென்றால்,

"ஒரு ஊரில் மன்னன் ஒருவன் எப்போதும் சூரிய உதயத்தை பார்த்து எழுவதை வழக்கமாகக் கொண்டிருந்தார். அதேப்போல் ஒரு நாள் மன்னர் காலையில் சூரிய உதயத்தைக் காண கண் விழித்தார். ஆனால் அவர் கண்ணை திறக்கும் நேரத்தில், பிச்சைக்காரன் ஒருவன் அவர் கண்ணில் தென்பட்டான்.

அதனால் வெறுப்புடன் திரும்பிய போது, மன்னர் சுவற்றில் மோதிக் கொண்டு, அதனால் அவர் தலையில் இரத்தம் வழிந்தது. ஆகவே கோபம் கொண்ட அந்த மன்னர்,

பிச்சைக்காரனை பிடித்து வருமாறு காவலர்களிடம் சொன்னார். அவர்களும் பிச்சைக்காரனை பிடித்து வந்தனர். மன்னரோ, அவனை தூக்கிலிடுமாறு தண்டனை கொடுத்தார். ஆனால் அந்த பிச்சைக்காரன் சிரித்துக் கொண்டு நின்றான்.

அதைப் பார்த்த மன்னர் அவனிடம் "அட பைத்தியமே! ஏன் சிரிக்கிறாய்?" என்று கேட்டார். அதற்கு அந்த பிச்சைக்காரன் "என்னைப் பார்த்ததால், உங்களுக்கு தலையில் மட்டும் தான் இரத்தம் வந்தது.

ஆனால் உங்களை நான் பார்த்ததால், எனக்கு தலையே போகப் போகிறது என்பதை நினைத்து சிரித்தேன்" என்று சொன்னான்.

உடனே அந்த மன்னர் தன் தவறை உணர்ந்து, தண்டனையை ரத்து செய்தார்." என்று சொல்லி, தைரியம் இல்லையென்றால் தம் உயிரைக் கூட காப்பாற்றிக் கொள்ள முடியாமல் போகும் என்று சொல்லிச் சென்றார்.

பின் அந்த சீடன், அன்று முதல் எதற்கும் அஞ்சாமல் தைரியத்துடன் இருந்தான்.

பகிர்
இயல்(கள்): , இதழ் வெளியான நாள்: Thursday, August 8, 2013

0 கருத்து(கள்):

காப்புரிமை © 2013 தமிழ்மொழி - தமிழால் நாமும் நம்மால் தமிழும் பயனுற வேண்டும் இத்தளத்தை நிர்வாகிப்பது தமிழ்மொழி.வலை
. சேவை வழங்குநர் பிளாக்கர்.