வாழ்க தமிழ்!

Saturday, August 10, 2013

அப்பூதியடி நாயனார்

பாமரன்  /  at  10:58 AM  /  கருத்துரை இடுக


சிவஸ்தலங்கள் அனைத்தையும் வணங்கும் எண்ணத்துடன் திங்களூரில் அருகில் திருநாவுக்கரசர் செல்லும்போது வழியில் உள்ள தண்ணீர்ப் பந்தலுக்குத் தன்னுடைய பெயர் இட்டிருப்பது கண்டு வியந்து அருகில் இருந்தவரிடம், "இப்பெயர் சூட்டியது யார்?" என்று கேட்டார்."இந்தத் தண்ணீர்ப் பந்தல் மட்டுமல்ல. இவ்வூரிலுள்ள அறச்சாலை, நந்தவனம் எல்லாவற்றுக்கும் தங்கள் பெயரைச் சூட்டி தங்கள் மீது பைத்தியம் பூண்ட சிவ பக்தர் அப்பூதியடிகள் ஆவார்" என்றார்.
தன்மீது அப்பூதியடிகள் வைத்திருந்த அளப்பெரிய அன்பைக் கண்டு சிலிர்த்துப் போய் அவருடைய இல்லத்திற்குச் சென்று உரையாடினார். திருநாவுக்கரசர் அவரை வாரித்தூக்கி ஆனந்தக் கூத்தாடினார்.


திருநாவுக்கரசரை அமுதுண்ண அழைத்த அப்பூதியடிகள் வாழை இலை அறுத்து வரும்படி தன் புதல்வனை தோட்டத்துக்கு அனுப்பினார். வாழைத் தோட்டத்தில் இருந்த நாகம் அவரது புதல்வனை தீண்ட, விஷம் தலைக்கேறி, அவன் கீழே விழுந்து இறந்து போனான்.தன்னுடைய புதல்வன் இறந்து போனது அறிந்தால் சிவனடியார் திருநாவுக்கரசர் உணவு உண்ணாது போய்விடுவாரே என்றெண்ணிய அப்பூதியடிகள் இறந்து போன தன்னுடைய புதல்வனை ஒரு முற்றத்தில் ஒரு பாயில் சுருட்டி மறைத்து வைத்துவிட்டு விபூதி தரித்து திருநாவுக்கரசரை அமுதுண்ண அழைத்தார்.


"உம் புதல்வனை அழைத்து வாரும் சாப்பிடுவோம்"என்றார் திருநாவுக்கரசர். அப்போது வேறு வழியின்றி, அப்பூதியடிகள் நடந்த உண்மையைக் கூறினார். அது கேட்டு பதறிப்போய் விட்டார் திருநாவுக்கரசர்.


"அப்பூதியடிகளே! நான் உணவு உண்ண வேண்டும் என்பதற்காக உம்முடைய புத்திரனின் சவத்தை வீட்டினுள் ஒளித்து வைத்திருக்கலாமா? எங்கே அந்தச் சிறுவனின் சவம்" என்று அவர் கேட்க அப்பூதியடிகள் கொண்டு வந்து காண்பித்தார்.


பாம்பின் விஷம் நீங்க சிவபெருமானை எண்ணித் திருப்பதிகம் பாடினார்.


அப்போது அச்சிறுவன் சிவனருளால் பிழைத்தெழுந்தது கண்டு அப்பூதியடிகள் மெய்சிலிர்த்து திருநாவுக்கரசரை வணங்கியபடி அமுதுண்ண வேண்டினார்.

திருநாவுக்கரசரும் அப்பூதியடிகளின் எல்லையற்ற அன்பையும் சிவபக்தியையும் கண்டு நெஞ்சம் நெகிழ்ந்து அவரது வீட்டில் அமுதுண்டு பல காலம் இருந்துவிட்டு சென்றார்.

பகிர்
இயல்(கள்): , , , , , இதழ் வெளியான நாள்: Saturday, August 10, 2013

0 கருத்து(கள்):

காப்புரிமை © 2013 தமிழ்மொழி - தமிழால் நாமும் நம்மால் தமிழும் பயனுற வேண்டும் இத்தளத்தை நிர்வாகிப்பது தமிழ்மொழி.வலை
. சேவை வழங்குநர் பிளாக்கர்.