வாழ்க தமிழ்!

Sunday, July 21, 2013

வழியாவது சொல்லுங்களேன்?

பாமரன்  /  at  8:52 AM  /  கருத்துரை இடுக

பதினெண்கீழ்க்கணக்கு நூல்களுள் ஒன்றான திணைமாலை நூற்றைம்பது அறநெறிகளைக் கூறுவதோடு அகவாழ்வைக் காட்டும் நூலாகவும் திகழ்கிறது.
தாயின் இற்செறிப்பையும் காவலையும் மீறி தலைவி, தலைவனோடு உடன்போக்கு சென்றுவிடுகிறாள். மகளைக் காணாமல் தாய் தவிக்கிறாள்; அவளைத் தேடிச் செல்கிறாள். செல்லும் வழியில் கோங்கமரம் ஒன்று வளைந்து வளர்ந்திருப்பதையும், அதனருகே குராமரம் சிறு சிறு காய்களோடு வளர்ந்திருப்பதையும் காண்கிறாள். தாழ்ந்த கோங்கமரம் குராமரத்தோடு ஒட்டி வளர்ந்திருக்கிறது. இக்காட்சியானது வளைந்து தாழ்ந்திருக்கும் மரமானது தன் சேய்க்கு பாலூட்டும்போது தனது உடலைச் சாய்த்துக் குனிந்திருக்கும் தாய் போலவும், அதனோடு ஒட்டிக்கொண்டிருக்கும் குராமரத்தின் காய்கள், பாலுண்ணும்போது தாயின் மார்பகத்தைப் பாசத்தோடு பார்க்கும் பெண் குழந்தைகளைப் போலவும் இருந்தது.
இதைக்கண்ட தாய்க்குத் தன் மகள்மேல் இருந்த பாசம் மேலும் அதிகமானதுடன் தவிப்பும் கூடியது. அம்மரங்களைப் பார்த்து ""என் மகள் தன் காதல் தலைவனோடு இவ்வழிச் செல்வதைப் பார்த்திருப்பீர்கள். அவள் என் மகள் என்பதை நீங்கள் அறிந்திருக்க வாய்ப்பில்லை என்பதால் அவர்களைப் பற்றி என்னிடம் கூறாமல் விட்டிருப்பீர்கள். அப்போது கூறியிருந்தால் அவளைப் போகவிடாமல் தடுத்திருப்பேன். பரவாயில்லை, அவர்கள் இருவரும் எவ்வழி சென்றார்கள் என்பதை இப்போதாவது சொல்லுங்களேன்'' என்று புலம்பிக் கேட்கிறாள்.

""தான்தாயாக் கோங்கம் தளர்ந்துமுலை கொடுப்ப
ஈன்றாய்நீ பாவை இருங்குரவே - ஈன்றாள்
மொழிகாட்டாய் ஆயினும் முள்எயிற்றாள் சென்ற
வழிகாட்டாய் ஈது என்று வந்து'' (பா.65)

வளைந்து வளர்ந்திருக்கும் கோங்க மரத்தைப் பாலூட்டும் தாயாகவும், ஒட்டியிருக்கும் குராமரக் காய்களைப் பாலுண்ண தாயின் மார்பகம் நோக்கிப் பார்க்கும் சேயாகவும் கற்பனை செய்து பாடியிருப்பதும்; தாய்-சேய் உறவை வலுப்படுத்த வேண்டி தாயின் மடிபார்க்கும் காய்களைக் குழந்தைகள் என்று பாடாமல், அக்காய்களைப் "பாவை' என்று பாடியிருப்பதும் ஆசிரியர் கணிமேதாவியாரின் கற்பனைத் திறத்தைக் காட்டுகின்றன.
தகவல்:  தினமணி

பகிர்
இயல்(கள்): , இதழ் வெளியான நாள்: Sunday, July 21, 2013

0 கருத்து(கள்):

காப்புரிமை © 2013 தமிழ்மொழி - தமிழால் நாமும் நம்மால் தமிழும் பயனுற வேண்டும் இத்தளத்தை நிர்வாகிப்பது தமிழ்மொழி.வலை
. சேவை வழங்குநர் பிளாக்கர்.