வாழ்க தமிழ்!

Monday, July 15, 2013

பசிப்பிணி மருத்துவன்..!

பாமரன்  /  at  6:50 PM  /  கருத்துரை இடுக

பசிப்பிணி மருத்துவன்..!
********************

காமராஜர் விருதுநகர் பள்ளி ஒன்றில் நான்காம் வகுப்பு படித்து வந்தபோது நடந்த சம்பவம் இது.
அந்தப் பள்ளி அவருடைய வீட்டுக்கு அருகிலேயே இருந்தது. அதனால் மதிய உணவுக்கு சிறுவன் காமராஜ் வீட்டுக்கு வந்து விடுவார். வீட்டில் அம்மா அவருக்கு உணவளிப்பார். அந்தச் சமயத்தில் அவரது பாட்டியும் அவர்களோடு வசித்து வந்தார். பாட்டிக்குக் காமராஜர் மீது கொள்ளைப் பிரியம்.

ஒருநாள் பாட்டியிடம் காமராஜர், "இனிமேல் மதிய உணவைக் கட்டிக் கொடுத்துவிடுங்கள். பள்ளியில் வைத்து சாப்பிட்டுக் கொள்கிறேன்' என்று கேட்டார்.
பாட்டியோ, வீடு அருகில் இருப்பதால் அப்படித் தர முடியாது, வீட்டுக்கு வந்துதான் சாப்பிட்டுச் செல்ல வேண்டும் எனக் கண்டிப்புடன் கூறினார். ஆனாலும் காமராஜர் அழுது அடம்பிடிக்கவே, கோபமுற்ற பாட்டி அவரை அடித்துவிட்டார்.

அடிவாங்கினாலும் காமராஜர் சாப்பாடு கட்டித் தரவேண்டும் என்பதில் பிடிவாதமாக இருந்தார். செல்லப் பேரனின் பிடிவாதத்தைக் கண்டு மனமிரங்கிய பாட்டி, தினமும் மதிய உணவைக் கட்டிக் கொடுக்க ஆரம்பித்தார்.

நாட்கள் சென்றன. பாட்டி, ஒருநாள் பள்ளிக்குச் சென்று மதியவேளையில் பேரன் எப்படிச் சாப்பிடுகிறான் என்பதை மறைவாக நின்று கவனித்தார்.

அங்கே, கிழிந்த அழுக்குச் சட்டையுடன் இருந்த ஓர் ஏழைச் சிறுவனோடு தனது உணவைப் பகிர்ந்து உண்டுகொண்டிருக்கும் காமராஜரைக் கண்டு மனம் நெகிழ்ந்து போனார். இவ்வளவு நல்ல மனம் கொண்டவனை அடித்துவிட்டோமே என்று பாட்டிக்கு மிகவும் கவலையாகப் போய்விட்டது.

காமராஜரின் உணவைப் பகிர்ந்து கொண்ட அந்தச் சிறுவன் மிகவும் ஏழ்மையான குடும்பத்தைச் சேர்ந்தவன். தினமும் தண்ணீர் குடித்துப் பசி தீர்த்துக் கொள்பவன். அவனைக் கண்ட காமராஜரின் மனம் பதை
பதைக்கவே அவனுக்காக வீட்டிலிருந்து அழுது அடம்பிடித்துச் சாப்பாடு கொண்டு வருவதை வழக்கமாக்கிக் கொண்டார். இதனால் அவரது மனம் நிறைவு பெற்றது. இதுதான் அவர் பின்னாளில் தமிழக முதல்வரானபோது மதிய உணவுத் திட்டத்தைச் செம்மையாகச் செயல்படுத்த வித்தாக இருந்தது.

பகிர்
இயல்(கள்): , , , இதழ் வெளியான நாள்: Monday, July 15, 2013

0 கருத்து(கள்):

காப்புரிமை © 2013 தமிழ்மொழி - தமிழால் நாமும் நம்மால் தமிழும் பயனுற வேண்டும் இத்தளத்தை நிர்வாகிப்பது தமிழ்மொழி.வலை
. சேவை வழங்குநர் பிளாக்கர்.